தமிழ்த் திரையுலகில் 3D முறையில் வெளிவரும் படங்களுக்கு சமீப கால முன்னோடியாக இருந்தது ‘அம்புலி’ திரைப்படமாகும். அந்தப் படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்கள் ஹரி -ஹரிஷ் தங்களது அடுத்த படமான ‘ஆ’ படத்தின் வெளியீட்டு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் அதே வேளையில் தங்களது அடுத்த படமான ‘ஜம்போ 3D’ படத்தின் துவக்கத்தை திரையுலக பிரபலங்கள் சூழ நடத்தினார்கள்.
இதில் திரைப்பட நடிகைகள் சுகன்யா, நமீதா, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், இசையமைப்பாளர்கள் கங்கை அமரன், அபஸ்வரம் ராம்ஜி, நடன இயக்குநர் கலா, இயக்குநர் பி.வாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சங்கர் brothers மற்றும் எம்.எஸ்.ஜி. மூவீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த இந்த ‘ஜம்போ 3-D’ படம் இந்திய -ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கூட்டு தயாரிப்பில் உருவாகும் படமாகும். இது தொண்ணூறு சதவீதம் ஜப்பான் நாட்டில் படமாக்கப்படவுள்ளது.
இந்த ‘ஜம்போ 3 D’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.ஹரி கூறுகையில் “தமிழ் நாட்டு மக்களின் கலாசாரத்தின் பின்னணியை ஜப்பானிய மக்கள் திரைப்படங்கள் மூலம் பெரிதளவுக்கு அறிந்து வைத்து உள்ளனர். தமிழ்ப் படங்களுக்கு அங்கே பிரத்தியேகமாக ஒரு மார்க்கெட்டை உருவாக்க வேண்டும் என்பதே டோக்கியோ தமிழ் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் என்னுடைய கனவும் லட்சியமும் கூட..” என்கிறார்.
இந்திய ஜப்பான் கலாசார தூதுவரான கயோலா புருகொவா கூறுகையில், “இந்திய திரைப்பட துறையினருடன் குறிப்பாக தமிழ்த் திரைப்பட உலகினருடன் இணைந்து செயலாற்றுவது எங்களுக்கு மிகவும் பெருமை. தமிழ்ப் படங்களில் தென்படும் உற்சாகம் எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது…” என்றார்.
‘மானாட மயிலாட’ தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் ‘அம்புலி’, ‘ஆ’ ஆகிய திரைப்படங்களில் நாயகனாக நடித்த கோகுல்தான் இதிலும் நாயகனாக நடிக்கவிருக்கிறார். அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பேபி ஹம்சிகா ஹரி.
ஒளிப்பதிவு- சதீஷ் .ஜீ
இசை – ஸ்ரீ வித்யா
இயக்கம் – ஹரி – ஹரீஷ்
தயாரிப்பு- ஹரி மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த கே ஒக்கிடா









