full screen background image

இந்திரஜித் – சினிமா விமர்சனம்

இந்திரஜித் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.

கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருக்கிறார். சொனாரிகா பதொரியா, அஷ்ரிதா ஷெட்டி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

மேலும் நாகபாபு, எம்.எஸ்.பாஸ்கர், சுதன்ஷு பாண்டே, அமித், சச்சின் கேதகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். 

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத்திடம் உதவி இசையமைப்பாளராக இருந்த கிருஷ்ண பிரசாத் இசையமைத்துள்ளார். படத் தொகுப்பாளராக கணேஷ் பாபுவும், ஒளிப்பதிவாளராக பாடலாசிரியர் அறிவுமதிவின் மகன் ராசாமதியும் பணியாற்றி உள்ளனர்.

தயாரிப்பாளர் தாணுவின் மகனான இயக்குநர் கலா பிரபு இதற்கு முன்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சக்கரக் கட்டி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இது இவரது இரண்டாவது படமாகும்.

தேடுதல் வேட்டையை மட்டுமே மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

1400  ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து வெடித்துக் கிளம்பிய ஒரு விண் துகள் பூமியை நோக்கி வந்தது. அது வழியில் பிரபஞ்சத்தில் தானாக சுற்றிக் கொண்டிருந்த ஒரு கல்லுடன் மோதி, அதனுடன் இயைந்து மேலும் வலுவாகி பூமியில் வந்து விழுகிறது.

அந்தக் கல் பூமியில் வந்து விழுந்தவுடன் அந்தக் கல்லின் தன்மை அந்த மண்ணில் பரவுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியே செழித்து வளர்கிறது. தாவரங்களுக்கு, மட்டுமில்லாது சாதாரண உயிர்களுக்கும் அந்தக் கல்லின் சக்தி பரவி அவைகளும் பலம் பெறுகின்றன.

மேலும் அந்த விண் கல் மனிதனுக்கு ஏற்படும் நோய்களை தீர்த்து, காயங்களை குணப்படுத்தும் குணத்தையும் கொண்டது என்றும், இது அருகாமையில் இருந்தால் நானூறு ஆண்டுகளுக்கு எந்த நோய், நொடியும் மனிதர்களை அண்டாது என்று நமது ஆதி கால சித்தர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இவர்கள் எழுதி வைத்திருக்கும் ஓலைச் சுவடிகளை 1900-களில் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த தீட்சிதர் ஒருவர் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார். இவர் கோவாவில் இருக்கும் சச்சின் கேதகருக்கு நெருங்கிய உறவினர். சச்சின் கேதகர் தொல்லியல் துறை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

தன்னுடைய ஓய்வுக்குப் பிறகு ஒரு முறை தீட்சிதரின் வீட்டுக்கு வந்தவர், அங்கேயிருந்த அந்த பழைய ஓலைச் சுவடிகளை படித்துப் பார்த்து அந்த விண் கல் பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்கிறார். அந்த விண் கல்லைத் தேடி கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று திட்டமிடுகிறார் பேராசிரியர். இதற்காக  தன்னுடன் சில மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு அந்த விண் கல்லைத் தேடத் துவங்குகிறார்.

பேராசிரியர் சச்சினின் இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்து வருகிறார் பக்கத்து வீட்டுக்காரரான நாகபாபு. தன்னுடைய அக்காள் மகனான கவுதம் கார்த்திக்கை சென்னையில் இருந்து கோவாவுக்கு வரவழைத்து, அவரையும் இந்தக் குழுவுடன் சேர்த்துவிடுகிறார் நாகபாபு.

தேசிய தொல்லியல் துறையின் இயக்குநராக தற்போது பதவிக்கு வந்திருக்கும் சுதன்ஷூ பாண்டேவுக்கு, சச்சினின் இந்தத் தேடுதல் வேட்டை பற்றி அரசல் புரசலாகத் தெரிய வருகிறது. சுதன்ஷூ, சச்சினின் வீட்டுக்கே வந்து விண் கல்லின் தேடுதல் வேட்டை பற்றித் தெரிந்து கொள்கிறார்.

இது பற்றி தனது அலுவலகம் மூலமாக காவல் துறையில் புகார் கொடுத்து சச்சினை விசாரணைக்குள்ளாக்குகிறார் சுதன்ஷூ. இதனால் பயந்து போகும் சச்சின் தனது மாணவர்களிடத்தில் சொல்லி இடத்தை மாற்றுகிறார்.

இந்த நேரத்தில்தான் கவுதம் கார்த்திக்கு முழு விஷயமும் தெரிய வர.. “அந்தத் தீட்சிதரின் சமாதியைத் தோண்டினால் என்ன?” என்கிறார். அதேபோல் சமாதியைத் தோண்ட.. அங்கே விண் கல் இருக்குமிடத்தின் வரைபடம் கிடைக்கிறது.

இந்த வரைபடத்துடன் அது இருக்கும் இடம் நோக்கி சச்சின் டீம் பறக்கிறது. சச்சினின் டீமிலேயே ஒருவனை தன்வசப்படுத்தி வைத்திருக்கும் சுதன்ஷூ, ரகசியமாக அவன் சொல்லும் துப்புக்களின்படி தன் குழுவினருடன் இவர்களைப் பின் தொடர்கிறார்.

கடைசியாக அந்த விண் கல்லைக் கண்டெடுத்தார்களா… இல்லையா… என்பதுதான் படத்தின் திரைக்கதை.

இந்திரஜித். இராமாயணத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு வீராதி வீரனின் பெயர். இலங்கை வேந்தனான இராவணனின் மகன். மண்டோதிரியின் புத்திரன். ராமனுக்கு எதிரான போரில் லட்சுமணனால் மிகவும் போராடி கொல்லப்பட்டவன் இந்திரஜித். அத்தனை பலம் வாய்ந்தவன் என்பதால் இந்தப் படத்தின் ஹீரோவும் அவனை போலத்தான் என்றெண்ணி இந்தப் பெயரையே கவுதமுக்கு சூட்டியிருக்கிறார்கள் போலும்..!

நடிப்பில் கவுதம் கார்த்திக் குறையே வைக்கவில்லை. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றவாறு எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு இளைஞனாக நடித்திருக்கிறார்.

டைமிங்கான டயலாக் டெலிவரி, நொடியில் மாற்றும் முகபாவனைகள், கொஞ்சமும் பிசிராத வசன உச்சரிப்பு என்று தன்னுடைய நடிப்பை குறைவில்லாமல் காட்டியிருக்கிறார் கவுதம். குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கருடன் இவர் பேசுவதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் இருவருடனும் கவுதமுக்கு டூயட்டுகள் இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விஷயம். சொனாரிகாவுடனான அந்த முதல் சந்திப்பும், அதையடுத்து சொனாரிகா கவுதமை நடுரோட்டில் நிற்க வைத்து கலாய்ப்பதும் செம காமெடிதான்.

இவர் துணைக்கு வருவார் என்று பார்த்தால் அருணாச்சலப் பிரதேசத்தில் அஷ்ரிதா ஷெட்டி வந்து திடீரென்று இணைந்து கொள்கிறார். இவருடன்தான் காதலோ என்று நினைத்தால் அதையும் கடைசி நிமிடத்தில்தான் சொல்கிறார்கள். படத்தின் பிற்பாதியில் ஒரு செமத்தியான டூயட்டுக்கு ஏற்ற சிச்சுவேஷன்கள் இருந்தும் இயக்குநர் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் என்றுதான் தெரியவில்லை.

சொனாரிகாவின் சில நிமிடக் காட்சிகள் இன்னமும் மனதில் நிற்கிறது. அஷ்ரிதாவுக்கும் இது போன்று போல்டான காட்சிகளை வைத்திருந்தால் நலமாகத்தான் இருந்திருக்கும். ஹீரோயின்களுக்கு படத்தில் அதிகமான வேலைகள் இல்லாததால் வேறொன்றும் சொல்வதற்கில்லை.

சச்சின் கேதகரும், சுதன்ஷூ பாண்டேவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நடித்திருக்கிறார்கள். சுதன்ஷூ அறிமுகமான முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் அழகான வில்லனாகவே வலம் வருகிறார். புரொபஸர் சச்சினோ தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒரு சுயநலவாதியாக வருவதும், அதைக் கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் குறிப்பிடுவதும் எதிர்பாராத டிவிஸ்ட்.

தென்னிந்திய மாவோயிஸ்ட்டு குரூப்பில் ஒருவராக வரும் எம்.எஸ்.பாஸ்கரின் கேரக்டர் ஸ்கெட்ச் குழப்பம் தருவதாக இருப்பதாலேயே அவர் பேசுவதையெல்லாம் காமெடியாக ஏற்றுக் கொள்ள நமது சிறு மூளை அனுமதியளிக்க மறுக்கிறது. இத்தனை எளிய மனிதர்கள் யாரும் இது போன்ற தீவிரமான மக்கள் போர்க் குழுவில் இருக்கவே முடியாது.

காட்டுக்குள் நடக்கும் ஜீப் சேசிங் காட்சிகளையும், அடர்ந்த காட்டின் அழகையும் மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் இராசாமதி. அருணாச்சல பிரதேசத்தின் காடுகளின் அழகையும், இயற்கை எழில் கொஞ்சும் அந்த பிராந்தியத்தையும் ஏரியல் வியூவில் படம் பிடித்து அவ்வப்போது காட்டும் அந்த அழகுதான் “யாருய்யா ஒளிப்பதிவாளர்..?” என்று கேட்க வைத்திருக்கிறது. கூடவே கோவா கடற்கரையின் அழகையும் சேர்த்துதான்..!

அறிமுக இசையமைப்பாளர் கிருஷ்ண பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். முற்காலத்திய கதை சொல்லும் பின்னணியில் இசைக்கும் இசை, அந்தக் கதை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறது.

இது போன்ற அட்வென்ச்சர் திரைப்படங்களுக்கு அடிப்படை தேவையே எதைத் தேடுகிறோம்..? அது எங்கே இருக்கிறது..? எப்படி இருக்கிறது..? அதனால் விளையும் நன்மைகள், தீமைகள் என்னென்ன என்கின்ற நம்பும்படியான செய்திகள்தான்.

விண் கல்லைத் தேடுவதுதான் இலக்கு என்றாலும், அதனால் யாருக்கு, என்ன பயன், புண்ணியம் கிடைக்கப் போகிறது என்பதை இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லியிருக்க வேண்டும்.

விண் கல் விழுந்திருப்பதும் அதன் பயன்கள் பற்றியும் நமது சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்தது என்றால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால், அது இருக்குமிடம் அருணாச்சலப்பிரதேசம் என்பதுதான் இடிக்கிறது. தமிழ்நாட்டுக்கும் அருணாச்சலப் பிரதேசத்திற்கும் அப்போதே எந்த வகையான தொடர்பு இருந்தது என்பதை இயக்குநர் விளக்கவில்லை.

இதேபோல் தீட்சிதர் எழுதி வைத்திருக்கும் இருப்பிட மேப்பில் அட்ச ரேகை, கடக ரேகையையெல்லாம் மிகச் சரியாக எழுதி வைத்திருப்பதெல்லாம், மிக எளிதான திரைக்கதையில் படத்தை நகர்த்த வேண்டும் என்று இயக்குநர் எண்ணியிருப்பதைத்தான் காட்டுகிறது.

படம் ஏற்கெனவே வெறும் 116 நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது. இதனை இன்னும் அதிகப்படுத்தி 25 நிமிடங்கள் காட்சிகளை படமாக்கி நீட்டித்திருக்கலாம். திரைக்கதையில் ரசிகனை இழுத்துப் பிடித்து அமர வைப்பதற்கேற்றவாறு இருக்கின்ற ஓட்டைகளையெல்லாம் அடைப்பதுபோல திரைக்கதையை மாற்றி இன்னமும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கலாம்.

முதல் பாதியில் பரபரப்பாக ஓடும் திரைப்படம், இரண்டாம் பாதியில்தான் நொண்டியடிக்கிறது. அதே சமயம் சீரியஸும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாகவும் படம் மேக்கிங்கில் வந்திருப்பது இன்னொரு துயரமான விஷயம்.

‘இண்டியானா ஜோன்ஸ்’ படத்தில் வருவது போன்று காயலான் கடைக்கு போக வேண்டிய அளவுக்கு இருக்கும் ஒரு மொக்கை பிளைட்டை ஓட்டிச் சென்று அதில் அனைவரும் சிக்கிக் கொண்டு அனைவருமே தப்பிக்கும் காட்சிகளெல்லாம் தமிழ்ச் சினிமாவுக்கே ஓல்டு திரைக்கதை..!

நாயகன் கவுதம் கார்த்திக் ஒரு நாயை ஆசையுடன் உடன் அழைத்து வருகிறார். தேவையில்லாத ஆர்ட்டிஸ்ட் பாணியில் அந்த நாய்க்கு கொடுத்த முக்கியத்துவம் எதற்காக என்று கடைசிவரையிலும் தெரியவில்லை.

அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் தற்போதைய அரசியல் நிலைமையைச் சொன்னவர்கள் மாவோயிஸ்ட்டுகளை பற்றி இழுத்தது ஏன் என்று தெரியவில்லை. அதிலும் அருணாச்சல பிரதேசத்தின் பாதியை தென்னிந்திய மாவோயிஸ்ட்டுகளும், மீதி பாதியை வட இந்திய மாவோயிஸ்ட்டுகளும் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்லியிருப்பது கற்பனைக் கதை.

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவுடனான எல்லை பிரச்சினை மட்டும் இருக்கிறதே ஒழிய, மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினை பெரிதாக இல்லை. அது அருகில் இருக்கும் பீகார், ஒரிஸ்ஸா, சட்டீஸ்கர், உத்தர்காண்ட் மாநிலங்களில்தான் அதிகமாக இருக்கின்றன. இது போன்ற அரசியல் விஷயங்களை உண்மைத்தனமாகச் சொல்ல வேண்டியது இயக்குநரின் கடமையில்லையா..?

சுதன்ஷூ பாண்டே குழுவினரின் கைகளில் இருக்கும் ஏ.கே.47 துப்பாக்கிக் குண்டுகள் கவுதம் அண்ட் கோ-வை கடைசிவரையிலும் தாக்கவே இல்லை என்பது பெரும் சோகத்திலும் சோகம்.

எந்தக் காலத்தில் தமிழகத்தில் தீட்சிதர்கள் என்னும் உயர் பிராமணர்களை எரிக்காமல் புதைத்தார்கள்..? இயக்குநர் திரைக்கதைக்காக இன்னமும் கூடுதலாக உழைத்திருக்க வேண்டும்.

விலங்குகள் நல வாரியம் என்றொரு அமைப்பை சினிமா துறையில் தலையிடக் கூடாது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை இந்தப் படமும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

காட்டுக்குள் நடக்கின்ற காட்சிகளை காட்டும்போது கண்டிப்பாக விலங்குகளைக் காட்டியே ஆக வேண்டும். ஆனால் எந்த விலங்கையும் துன்புறுத்துவது போல காட்டக் கூடாது. காட்டினால் நிறைய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முட்டாள்தனமான விதிமுறைகளை வைத்து சினிமா துறையை பிற்போக்குக்கு தள்ளியிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். இதை சினிமா துறையினர் மிகப் பெரிய படைப்பாக்க எதிர்ப்பாக நினைத்து போராட வேண்டும்.

இந்தப் படத்திலும் பாம்புகள், யானைகள், பூச்சிகள், நாய், பிராணிகள், அட்டை போன்ற சிறு ஜீவராசிகள் என்று அத்தனையையும் கிராபிக்ஸிஸ் செய்து காசை கொட்டியிருக்கிறார்கள். இது எத்தனை பண விரயத்தை ஏற்படுத்தும் என்பது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் மட்டுமே தெரியும். விதிமுறைகளை போடுவது மிக எளிது. ஆனால் இதனால் விளையும் நன்மை என்ன என்பதை தெரிந்து கொண்டு விதிமுறைகளை விதித்தால் அரசுகளுக்கு நல்லது.

ஒரு தேடுதல் வேட்டையில் ஈடுபடும் கதையை தற்போதைய பாணியில் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர். இதற்காக அவர் செய்திருக்கும் கிராபிக்ஸ் பணிகள் சிறப்பாக இருந்தாலும் வலுவில்லாத, சுவராஸ்யம் இல்லாத திரைக்கதைகளால்… கால் மணி நேரத்திற்கு ஒரு முறை விட்டுவிட்டு படத்தினை ரசிக்க முடிந்திருப்பது பெரும் சோகம்.

Our Score