ஜே.எஸ்.எம் மூவி புரொடக்ஷன்ஸ், எம்பெரர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ’இந்திரா’.
தனது மனைவியை கொலை செய்தவனை தேடி கண்டுபிடிக்கும், பார்வை இழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கதைதான் இந்தப் படம்.
ஹீரோவான இந்திரா என்ற வசந்த ரவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். குடிகாரர். குடித்துவிட்டு அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக அவரை டிபார்ட்மெண்டில் இருந்து சஸ்பெண்ட் செய்து வைத்திருக்கிறார்கள். தன்னுடைய சஸ்பென்ஸனை நீக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் பேசி வருகிறார் இந்திரா.
இந்த நேரத்தில் சென்னையில் ஒரே மாதிரிகளான கொலைகள் தொடர்ந்து நடக்கின்றன. கொலையாளி இறந்தவர்களின் மணிக்கட்டு பகுதியை வெட்டி எடுத்துவிட்டு செல்கிறான். தொடர்ச்சியாக நான்கு கொலைகள் நடந்தவுடன் போலீஸ் சுறுசுறுப்பாகிறது. அதைக் கண்டுபிடிக்க ஒரு டீமும் அமைத்து சல்லடை போட்டு தேடி வருகிறார்கள்.
அந்த நேரத்தில் திடீரென்று தன்னுடைய கண் பார்வையையும் இழக்கிறார் இந்திரா. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அவருடைய மனைவியும் அவருடைய வீட்டுக்குள்ளேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருப்பதால் நிச்சயமாக வீட்டுக்குள் இருந்தவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.
வீட்டுக்குள் இருந்தது இந்திரா மட்டுமே! ஆனால், அவரோ எனக்கே கண் பார்வை இல்லை.. நான் எப்படி கொலை செய்ய முடியும்.. இது வேறு யாரோ வந்து செய்திருக்கிறார்கள் என்று போலீஸிடம் சொல்கிறார்.
தன்னுடைய நெருங்கிய நண்பனான இன்னொரு போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை துணைக்கு வைத்துக் கொண்டு தன் மனைவி இந்திராவை கொலை செய்தவனை தேட துவங்குகிறார் இந்திரா.
ஒரு கட்டத்தில் சைக்கோ கொலையாளியான சுனிலை வலைவீசிப் பிடித்து விடுகிறார்கள் போலீசார். ஆனால், இந்திராவின் மனைவியான கயலை நான் கொலை செய்யவில்லை என்று அடித்து சொல்கிறார்.
அப்படியானால் கயலை யார்தான் கொலை செய்தது என்று மீண்டும் தன்னுடைய இன்வெஸ்டிகேசனை துவக்குகிறார் இந்திரா.
இவருடைய தேடுதல் வேட்டை பலித்ததா?.. உண்மையில் கயலை கொலை செய்தது யார்?.. அந்த நபரை பிடித்துவிட்டார்களா என்பதுதான் இந்தப் படத்தின் கதை சுருக்கம்.
நாயகன் வசந்த் ரவி வேலை இல்லாத சூழலில் ஏற்பட்ட மன அழுத்தம், கோபம் ஆத்திரம், குடியில் மூழ்கிய தருணம் என்று பல்வேறுவிதமான நடிப்புகளை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார்.
தன் மனைவியின் கொலைக்கு மறைமுகமாக தானும் ஒரு காரணமாக இருந்ததை கடைசியாக தெரிந்து கொண்டு இந்த குற்ற உணர்வோடு பேசுகின்ற பேச்சும், நடிப்பும் ஓகே என்று சொல்லலாம்.
ஆனாலும் சில இடங்களில் அவருடைய நடிப்பு ஓவர் டோஸ் ஆகவும் அமைந்துவிட்டது. கண் பார்வை இல்லாத நிலையில் சண்டையிடும் காட்சிகளைகூட மிகவும் நம்பகத் தன்மையோடு படமாக்கி இருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவருடைய நடிப்பும் கண் பார்வையற்ற ஒருவன் போலவே காட்சியளித்திருக்கிறார் வசந்த் ரவி. அவருக்கு நமது பாராட்டுக்கள்.
ஹீரோயினாக நடித்திருக்கும் மெஹ்ரின் பிரசாதா மிக அழகாக இருக்கிறார். ஒரு பாடல் காட்சி, அதற்குப் பிறகு சில வசன காட்சிகளில் மட்டுமே அவர் இருந்து பரிதாபமாக உயிரை விட்டுவிட்டார்.
இடைவேளைக்குப் பின்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனைகா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய முகமும் அவர் காட்டுகின்ற சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களும் காதல் பேச்சுகளும் மிகவும் பிடித்துப் போகிறது.
தான் வேலை செய்யுமிடத்தில் தன்னைத் தேடி வரும் காதலனை பார்த்தவுடன் பதட்டமடைவதும், வசந்த் ரவி வீட்டுக்குள் நுழைந்தவுடன் காதலனை மறைத்து வைக்க அவர் படும் பாடும் அழகான திரில்லர் காட்சியாகவே படமாக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நடன இயக்குநர் கல்யாணம் படம் முழுவதும் ஒரு இறுக்கமான முகத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய சக அலுவலர் என்றாலும் இந்திரா மீது ஒரு கண் வைத்துக் கொண்டு கதையை அவர் பக்கம் திருப்புகின்ற இடத்தில் அவருடைய நடிப்பு மிக இயல்பாக உள்ளது.
அனிகாவின் காதலனாக வரும் சுமேஷின் நடிப்பு சிறப்புதான். அவர் முகத்தில் காட்டுகின்ற அந்த வெறித்தனம், ஆற்றாமை… இந்திராவிடம் கடைசியாக பேசுகின்ற பேச்சு… அனைத்துமே ஒரு அப்பாவி காதலன் என்ன செய்வானோ அதைத்தான் இவரும் செய்வது போல தெரிகிறது.
ஒளிப்பதிவாளர் பிரபு ராகவனின் கேமரா இந்தப் படத்தில் மிக மிகத் துணையாய் அமைந்திருக்கிறது. அபார்ட்மெண்டில் நடக்கின்ற அந்த திகில், சஸ்பென்ஸ், திரில்லர் காட்சிகளை படமாக்கியவிதமே இது ஒரு திரில்லர் படம் என்று நமக்கு உணர்த்தி இருக்கிறது.
இசையமைப்பாளர் அஜ்மல்லின் பின்னணி இசை இந்த மாதிரி படங்களுக்கு தேவையான வகையில் கொடுத்திருக்கிறார். அதோடு ஒவ்வொரு திகிலான காட்சிகளிலும் பின்னணி இசைதான் நம்மை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. இரண்டு பாடல்களும் இருக்கின்றன. படத்தில் திரையில் மட்டுமே நாம் அதை கேட்க முடிந்திருக்கிறது. வெளியில் வந்தவுடன் சுத்தமாக மறந்து போய்விட்டது.
இடைவேளைக்கு பிறகு படம் கிளைமாக்ஸ் நோக்கியே நம் எதிர்பார்த்தது போலவே நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் அந்த பிளாஷ் பேக் காட்சிக்கு இன்னமும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இருக்க வேண்டும். அது அழுத்தம் இல்லாமல் சாதாரணமான கதையாக நமக்கு சுவாரசியத்தை தராத காட்சிகளாக படம் பார்க்கப்பட்டுள்ளது. இதனால் அந்தக் காட்சிகளில் அவர்கள் நடித்த நடிப்பின் எமோஷன்ஸ் நம் மனதை தொடவே இல்லை என்பதுதான் உண்மை.
கிளைமாக்ஸ் காட்சிகள் அளவுக்கு மிஞ்சிய வன்முறையை காட்டி இருந்தாலும் குற்றம் செய்தவனுக்கு என்ன தண்டனை என்பது பற்றிய ஒரு சில பேச்சுக்களை அந்த கிளைமாக்ஸ் கட்சியில் வைத்து ஓரளவுக்கு அதை நியாயப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.
ஆனாலும் படத்தில் லாஜிக் என்பது கிலோமீட்டர் கணக்கில் இருக்கிறது என்பதுதான் உண்மை. அவ்வளவு பெரிய அப்பார்ட்மெண்டில் சிசிடிவி கேமரா இல்லை என்பதை நாம் எப்படி நம்புவது?.
தொடர் கொலைகளை விசாரிக்கிறோம் என்று ஆரம்பிக்கும் படம் திரைக்கதையில் சற்று மந்தமான நிலையில் ஒவ்வொருவராக வந்து அவரவர் கருத்தை சொல்வதைப் போலவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இடைவேளைக்கு பின்புதான் படம் ஜெட் வேகத்தில் பறக்கிறது. அதுவும் கொஞ்ச நேரம் மட்டுமே… அதற்கு பிறகு மறுபடியும் டல்லடித்து நமக்கும் சோர்வை தந்திருக்கிறது.
காவல்துறையின் விசாரணை எது போல் இருக்கும், எந்த அளவுக்கு இருக்கும்… என்பதையும் இந்த படத்தில் கொஞ்சம் காட்டியிருக்கிறார்கள்.
படத் தொகுப்பாளரான கே.எல்.பிரவீன் பரபரப்பான திரைக்கதையையும், காட்சிகளையும், சென்டிமென்ட் உள்ள காட்சிகளையும் ஒருசேர அமைத்து கொஞ்சம் படத்தினை கவனிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் மிகப் பெரிய டிராஜடி எது என்றால் அது ஒலிதான். சவுண்ட் பிக்சிங் செய்தவர்கள் அளவுக்கு அதிகமான ஒளியை அமைத்துவிட படத்தின் முற்பகுதியில் பல வசனங்கள் நமக்குப் புரியவில்லை. பிற்பகுதிகளிலும் சில வசனங்கள் புரியவில்லை.
இவ்வளவு அதிகமான சப்தத்தை இயக்குநர் எப்படி ஏற்றுக் கொண்டார் என்பதே நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் இந்த வசனம் கேட்காத தன்மை நிச்சயம் படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.
சீரியல் கில்லராக வரும் தெலுங்கு நடிகர் சுனில் தன்னுடைய பாடி லாங்குவேஜிலேயே நம்மை பெரிதும் கவர்கிறார். ஆனால் இவர் பாதியிலேயே கட் செய்யப்பட்டு அவருக்கு என்ன ஆனது? அவர் சிறைக்கு சென்றாரா? இல்லையா? அவர் ஏன் இந்தக் கொலைகளை செய்தார் என்பதற்காக விடைகளையே கொடுக்காமல் போனது ஏன் என்றும் தெரியவில்லை.
சீரியல் கில்லரை தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ்.. பார்வையற்ற ஒருவனின் தேடுதல்.. அவனுக்குள் ஏற்படும் மன சிக்கல்கள்… இதையெல்லாம் வைத்துக் கொண்டு படத்தை துவக்கி இருந்தாலும் எமோஷன்ஸ் கிடைக்க கூடிய அளவுக்கான காட்சிகள் இல்லாததுதான் வருத்தமே..!
டிவிஸ்ட் என்று சொல்லாமலேயே அதற்கான அழுத்தம் கொடுக்காமல் இருந்து இந்தப் படத்தை ஒரு சாதாரண, சஸ்பென்ஸ், திரில்லர் படமாகவே முடித்திருக்கிறார்கள்.
நிச்சயம் பார்த்தே ஆக வேண்டும் என்று சொல்ல வேண்டிய திரைப்படத்தை மனதை தொடும்படியான கதையும், திரைக்கதையும் இதில் இல்லாததால் இந்தப் படம் ஒரு தடவை பார்க்கலாம் என்கின்ற லிஸ்டில் இடம் பிடித்துவிட்டது.
RATING : 3.5 / 5









