1996-ம் ஆண்டு மெகா ஹிட் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பில் உருவாகி வெளியான மெகா ஹிட் படமான ‘இந்தியன்’ படத்தின் 2-ம் பாகத்தை இப்போது 28 ஆண்டு காலம் கழித்து உருவாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், ஜெகன், ரிஷிகாந்த், விவேக், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா, தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், இமான் அண்ணாச்சி, வினோத் சாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ரவிவர்மன், படத் தொகுப்பாளர் – சுரேஷ் அர்ஸ், கலை இயக்குநர் முத்துராஜ், பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து மற்றும் விவேக், சண்டை இயக்கம் – அன்பறிவு, ரமசான், அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, தியாகராஜன், வசனம் – ஜெயமோகன், லட்சுமி சரவணக்குமார், கபிலன் வைரமுத்து, கதை, இயக்கம் – ஷங்கர்.
2019-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி பூஜை போடப்பட்டு மிகச் சரியாக ஐந்தரையாண்டுகள் கழித்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து, அதைச் சமாளித்துத் தாண்டித்தான் இப்போது திரைக்கு வந்துள்ளது இந்த ‘இந்தியன்-2’ திரைப்படம்.
முதல் பாகத்தில் லஞ்சம் வாங்குகிறானே என்பதற்காக பெத்த மகனையே கொலை செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடும் ‘இந்தியன்’ தாத்தா சேனாபதி, இப்போதைய இந்தியாவில் ஆக்டோபஸாக பெருகியிருக்கும் அதே லஞ்ச, லாவண்யம், ஊழலை துடைத்தெறிய என்ன செய்கிறார் என்பதுதான் இந்த ‘இந்தியன்-2’ படத்தின் சுருக்கமான திரைக்கதை.
சித்தார்த், ஜெகன், பிரியா பவானி சங்கர், ரிஷி காந்த் ஆகிய நண்பர்கள் இணைந்து இப்போது சென்னையில் ‘Barking dogs’ என்ற பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.
இந்த சேனலின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வினைத் தரும்படியாக பல்வேறு சமூகப் பொறுப்புள்ள நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடையே பெயரையும், புகழையும், லட்சணக்கணக்கான பார்வையாளர்களையும் சம்பாதித்து வைத்துள்ளனர் இந்த நண்பர்கள்.
‘இந்தியன்’ படம் வந்தபோது இந்தியாவில் லட்சத்தில்தான் லஞ்சம் புழங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போதைய 2020-களில் கோடிகளில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு லஞ்சமும், ஊழலும் கொடி கட்டிப் பறப்பதை இந்தியா முழுமையும் அறியும்.
இத்தருணத்தில் சித்தார்த்தின் கண்ணெதிரே ஒரு தற்கொலை நடக்கிறது. ஆசிரியை வேலைக்காக லஞ்சம் கொடுக்க முடியாமல், பொய்யான குற்றச்சாட்டினால் போலீஸிடம் சிக்கும் அவல நிலைமைக்கு ஆளாகும் ஒரு இளம் பெண், கல்வித் துறை அலுவலகத்தின் மாடியிலிருந்தே கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்தத் தற்கொலைக்கு உதவி செய்யப் போகும் சித்தார்த்துக்கு வழக்கம்போல் போலீஸில் மண்டகப்படி கிடைக்கிறது. தனியொரு மனிதனாகப் போராடினால் இங்கே நியாயம் கிடைக்கவில்லையென்றாலும்கூட உடனிருந்து குரல் எழுப்பக்கூட யாரும் வரமாட்டார்கள் என்பதையறியும் சித்தார்த் அண்ட் கோ–வுக்கு, இப்போதுதான் சேனாபதி தாத்தாவின் ஞாபகம் வருகிறது.
உடனேயே தங்களுடைய சமூக வலைத்தளங்களில் ‘கம் பேக் இந்தியன் தாத்தா’ என்று குரல் கொடுக்கத் துவங்க.. அது இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கிறது. இவர்கள் அழைக்கும் அந்த ‘இந்தியன் தாத்தா’ என்ற சேனாபதி, தற்போது தைவான் நாட்டில் வர்மக் கலையைக் கற்றுக் கொடுக்கும் ஆசானாக இருக்கிறார்.
இந்தியா முழுவதும் தன்னைத் தேடுவதை அறிந்து கொண்ட சேனாபதி இந்தியா திரும்ப எத்தனிக்கிறார். வரும்போதே இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய்களை ஏப்பம்விட்டுவிட்டு தைவான் கடலில் அழகிகளோடு மஜாவாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியத் தொழிலதிபர் குல்ஷன் குரோவரை வர்மத்தால் போட்டுத் தள்ளிவிட்டு இந்தியாவுக்கு கிளம்புகிறார் சேனாபதி.
முதல் பாகத்தில் தாத்தாவைப் பிடிக்க முயன்று முடியாமல் போய் வருத்தத்தில் இருக்கும் ஓய்வு பெற்ற சி.பி.ஐ. ஆபீசர் நெடுமுடி வேணுவின் மகனான பாபி சிம்ஹா இப்போது அதே சி.பி.ஐ.யில் அதிகாரி. ‘இந்தியன் தாத்தா’வைப் பிடிக்க முனையும் இவருக்கு உறுதுணையாய் வருகிறார் துணை அதிகாரியான நடிகர் விவேக்.
விமான நிலையத்திலேயே ‘இந்தியன் தாத்தா’வைப் பிடிக்க முயன்றும் முடியாமல் போக ‘தாத்தா’ பத்திரமாக சென்னைக்குள் கால் வைக்கிறார். உடனேயே அடுத்தடுத்த நிகழ்வுகளாக சென்னை, குஜராத் மற்றும் ஹரியானாவில் 3 பகாசூர கொள்ளையர்களை போட்டுத் தள்ளுகிறார்.
இம்முறை இந்தியா முழுமைக்குமே ‘இந்தியன் தாத்தா’வைத் தேடும் பணி நடக்க ‘தாத்தா’வை சி.பி.ஐ. விரட்டுகிறது. இதன் பின்னர் ‘தாத்தா’ என்னவானார்..? சித்தார்த் கோஷ்டி தாத்தாவை வைத்து என்னதான் செய்தார்கள்..? என்பதுதான் இந்த 3 மணி நேர பூனை – எலி துரத்தல் கதை.
சேனாபதியாக 100 வயதைக் கடந்த நிலையில் இருக்கும் தாத்தாவாகவும், அவ்வப்போது பல்வேறு பரிணாமங்களில் மாறு வேடங்களைப் பூண்டு, தாத்தாவாக நடித்திருக்கும் கமலின் நடிப்பும், அவரது அர்ப்பணிப்புத் தன்மையும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.
அந்த பிராஸ்தட்டிக் மேக்கப்பை போட்டுக் கொண்டு இந்த வயதிலும் கமல் நடித்திருக்கும்விதத்தை யோசித்துப் பார்த்தால் கமலைத் தவிர வேறு யாருமே இதைச் செய்துவிட முடியாது என்பதை உறுதியாகச் சொல்லிவிடலாம்.
அந்த மேக்கப்போடு அதற்குத் தோதான வகையில் வசன உச்சரிப்பைக்கூட பார்த்துப் பார்த்து கமல் பேசியிருப்பதைப் பார்க்கும்போது கமலை உச்சி முகிர்ந்து பாராட்ட இப்போது அவருடைய குருநாதர் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர் இல்லையே என்ற கவலைதான் வருகிறது.
தன்னை வருந்தி, வருந்தி அழைத்த இளைஞர் கூட்டமே, இப்போது தன்னை ‘கோ பேக் இந்தியன் தாத்தா’ என்று சொல்வதை நினைத்து எதிர்பார்க்காத துயரத்தை அவர் தன் முகத்தில் காட்டும் காட்சியில் ‘கலைஞானி’ கமல்ஹாசன் என்று சொல்ல வைக்கிறார்.
இந்த வயதிலும் சண்டை காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் வேகமும், உறுதியும், பிரமிக்க வைக்கிறது. கமல்ஹாசனின் நாட் அவுட் நடிப்பு படங்களில் இந்தப் படமும் இடம் பிடித்துவிட்டது என்பதே ஒரு சாதனைதான்.
துடிப்பான, இந்த சமூகத்துக்குத் தேவையான இளைஞனாக நடித்திருக்கும் சித்தார்த் இன்றைய இளம் இந்தியர்களைத் தட்டியெழுப்பும் ‘சேகுவேரா’ நடிப்பைக் காண்பித்திருக்கிறார். தனது அப்பாவை மாட்டிவிடும்போதும், அம்மாவின் இறப்பின்போது கதறும்போதும், தாத்தாவை ‘திரும்பிப் போ’ என்று கத்தும்போது அந்தக் கேரக்டரின் நடிப்பை அப்படியே காண்பித்திருக்கிறார் சித்தார்த். பாராட்டுக்கள்.
பிரியா பவானி ஷங்கர், ஜெகன், ராகுல் மூவரும் த்த்தமது கேரக்டர்களுக்கேற்ற நடிப்பைக் காண்பித்து பாஸ் செய்திருக்கிறார்கள். ரகுல் ப்ரீத் சிங்கின் கேரக்டரும் அப்படித்தான்..! டூயட் பாடலை ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை.
சித்தார்த்தின் அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி வழக்கம்போல நல்லவரா.. கெட்டவரா என்பதே தெரியாதவகையில் நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
மேலும் படத்தில் மேற்கொண்டு நடித்திருக்கும் S.J.Suriya, டெல்லி கணேஷ், மனோபாலா, ரேணுகா, நெடுமுடி வேணு, தம்பி ராமையா, வினோத் சாகர், இமான் அண்ணாச்சி, காளிதாஸ் ஜெயராம்.. இன்னும் பட்டியலில் சிக்காத அத்தனை பேருமே வந்த இடங்களில் தங்களது தனித்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் கமலை படம் நெடுகிலும் துரத்திக் கொண்டேயிருக்கும் பாபி சிம்ஹாவும், அவரது அல்லக்கையாக நடித்திருக்கும் விவேக்கும் வந்தார்கள், சென்றார்கள் பாணியில் இருப்பது காமெடியாக அமைந்துவிட்டது.
கொல்லப்படும் வில்லன்களில் ஒருவரான அஜால் குஜால் குல்ஷன் குரோவர் நம்மைப் பொறாமைப்பட வைத்திருக்கிறார். குஜராத் வைர வியாபாரி ஜாகிர் ஹுசைன் கடைசியில் பாவமாகிவிட்டார். நட்டநடு ரோட்டில் குதிரையோடுவதைப் போல அவர் ஓடுவதைப் பார்க்கும்போது பாவமாக இருந்தாலும், செய்த்து இந்தியன் தாத்தா என்பதால் இதுவும் வேணும். இன்னமும் வேணும் என்றுதான் தோன்றியது. பரிதாபமாக சாகும் டெல்லி கணேஷை நினைத்தால்தான் நிஜமான பாவம் வந்தது. அவருக்கு பேசுவதற்கு வாய்ப்பே தராமல் அவரைக் கொலை செய்தது எந்த வகையிலும் நியாயமில்லை இந்தியன் தாத்தா..!
ரவிவர்மனின் கேமிராவில் படம் நெடுகிலும் ஓவியமாய் வரைந்ததுபோல காட்சிகள் தெரிகின்றன. தைவான் காட்சிகள்.. காலண்டர் பாடல் காட்சிகள்.. குஜராத் தங்க வீடு காட்சிகள்.. புவி ஈர்ப்பு விசை இல்லாத பயிற்சியில் நடக்கும் கொலைக் காட்சிகள் என்று படம் முழுவதும் வியாபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். 4 ஆண்டு கால தாமதம் என்றாலும் காட்சிகளிடையே இடைவெளியோ, வித்தியாசமோ இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஒளிப்பதிவாளருக்கு நமது வாழ்த்துக்கள்.
சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவு, அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, தியாகராஜன் ஆகிய டீம், இந்தியன் தாத்தாவை வதைத்துத் தள்ளியிருக்கிறார்கள். பாவம் கமல்.. இவர்களிடம் மாட்டிக் கொண்டு எப்படி தப்பித்தாரோ தெரியவில்லை. சண்டை காட்சிகள் அனைத்துமே பரபர ரகம்..!
கலை இயக்குநர் முத்துராஜ் தனது மொத்த அறிவையும் இந்தப் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்போல தெரிகிறது. கொஞ்சமும் விட்டுவைக்காமல் இவரிடத்தில் வேலை வாங்கி படத்துக்கு கலர் சேர்த்திருக்கிறார் ஷங்கர். ரோட்டுக்கே பெயிண்ட் அடித்தவர்.. சும்மா கிடக்கும் சுவரைவிட்டு வைப்பாரா என்ன.. அந்தச் சுவர் பாடலில் ஆட்டத்தையும், பாடலையும் தாண்டி கலை இயக்குநரின் கலை இயக்கமும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறது.
அனிருத்தின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும்போதே மண்டையில் ஏறவில்லை. இந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸே அனிருத்துதான். ‘இந்தியன்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் கொண்டாடிய சினிமா ரசிகர்கள், இதில் எதைக் கொண்டாடுவது என்பது புரியாமல் தவிக்கிறார்கள். பாடல்கள் ஏதாவது புரிந்தால்தானே கொண்டாவதற்கு..?!
சுரேஷ் அர்ஸ் கச்சிதமாகப் படத் தொகுப்பு செய்தும் 3 மணி நேரத்திற்கு நம்மை வைச்சு செய்திருக்கிறார்கள். இன்னமும்கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் அரை மணி நேரத்திற்குக் கத்திரியைப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
குல்ஷன் குரோவரை ‘இந்தியன் தாத்தா’ கமல் போட்டுத் தள்ளுவதில் இருந்துதான் படம் சூடு பிடிக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் ‘இந்தியன் தாத்தா’வின் சம்ஹாரங்கள் அனைத்தும் வித்தியாசமாகவும், பிரம்மாண்டமாகவும், பிரமிக்க வைக்கும் அளவாகவும் இருந்தாலும் கூடுதலாக ஒவ்வொரு கொலையின்போதும் வர்மக் கலை பற்றி கமல் கிளாஸ் எடுப்பது ரசிகர்களுக்கு எரிச்சலைத் தருகிறது.
‘செத்தொழிஞ்சான்டா கபோதி’ என்று சந்தோஷப்படும் நேரத்தில் ‘அவன் எப்படி செத்தான் தெரியுமா..?’ என்று பேசுவது என்ன மாதிரியான பேச்சு என்று தெரியவில்லை. கமல் இதைச் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.
சித்தார்த் அண்ட் கோ–வின் சின்னச் சின்ன ஷார்ட் பிலிம்கள் அழகாகவும், ரசிப்பாகவும் உருவாக்கப்பட்டிருந்தன. அதேபோல் பாடல் காட்சிகளையும் ஷங்கர் வழக்கம்போல வேறு, வேறு ஜானரில் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒவ்வொரு பிரேமிலும் ரிச்னெஸ் தெறிக்கிறது. இது இருந்தால்தானே அது ஷங்கர் படம் என்று தெரிய வரும்…?
படத்திலேயே மிக மொக்கையான காட்சியென்றால் அது விமான நிலையத்தில் கமல் பாபி சிம்ஹாவிடமிருந்து தப்பிப்பதுதான். தைவானிலிருந்து வருகிறார் என்பது தெரிந்தாலே வாரண்டை காட்டி விமானத்திற்குள்ளேயே நுழைந்து கமலை கைது செய்யலாமே..? எதற்கு அவர் வரும்வரை காத்திருந்து வெளியில் வைத்து கைது செய்ய வேண்டும்..? அதிலும் கமல் இந்தக் காட்சியில் தப்பிக்கும்விதம் சிரிப்பை வரவழைக்கும் திரைக்கதை. யூ டூ ஷங்கர் ஸார் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
படத்தின் சீரியஸ் தன்மையையும், நோக்கத்தையும் குறைத்தது அல்லது குப்புறத் தள்ளயது எதுவென்றால், சித்தார்த், “கோ பேக் இந்தியன் தாத்தா” என்ற கோஷத்தை எழுப்பும்போதுதான். திரைக்கதை மொத்தமாகப் படுத்தேவிட்டது.
முதலில் குடும்பத்திலிருந்து ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிப்போம் என்று கமல் சொல்வது நூற்றுக்கு நூறு சரிதான். இந்தியாவில் இப்போதைக்கு இதுதான் சரியான ஆலோசனையாகும். ஆனால் அதை செய்துவிட்டு இளைஞர்கள் புலம்புவதாக வைத்தால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அது என்ன மாதிரியான உணர்வுகளைக் கொடுக்கும் என்பதை ஷங்கர் யூகித்திருக்க வேண்டாமா..? சரியான காமெடியாகிவிட்டது..! மொத்தப் படத்தையும் இந்த இடத்திலேயே கவிழ்த்துவிட்டார் ஷங்கர். ஸாரி ஸார்.. உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்..!
முதல் பாகத்திலும் இதே லஞ்சம், ஊழல், அரசு அதிகாரிகள், போட்டுத் தள்ளுதல் என்று சென்றாலும் அதன் திரைக்கதையில் இருந்த கவுண்டமணி, செந்தில் கூட்டணியின் நகைச்சுவை, சுவையான பாடல்கள், கமல்ஹாசனின் இளமையான காதல் எல்லாமும் சேர்ந்த சரிநிகர் கலவையாக அந்த ‘இந்தியன்’ படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது. ஆனால், இந்த 2-ம் பாகத்தில் இவை யாவுமே இல்லாததால் படம் டிரையாக இருப்பதாக தோன்றுகிறது.
போதாக்குறைக்கு முதல் பாகத்தில் படத்துக்கே உயிரூட்டிய எழுத்தாளர் சுஜாதாவின் காலம் கடந்த வசனங்களைப் போல இந்த 2-ம் பாகத்தில் வசனங்கள் உயிர்ப்பாக இல்லாததும் ரசிகர்களைத் தூண்டிவிடாமல் செய்துவிட்டது. ஜெயமோகன் இருந்துமா இப்படி..?
கடைசியாக அடுத்தப் பாகமும் இருக்கு என்று சொல்லி அதில் எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்டத்தைக் காட்டியிருக்கிறார் ஷங்கர்.
பார்ப்போம். அந்த 3-வது பாகத்தை யார் காப்பாற்றப் போகிறார்கள் என்று..!?
RATING : 3.5 / 5









