full screen background image

ஒரு சிறுமியின் கதைதான் இனம்..!

ஒரு சிறுமியின் கதைதான் இனம்..!

சில மாதங்களுக்கு முன்பாகவே சந்தோஷ்சிவனுக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டார்கள் தமிழின உணர்வாளர்கள். அவர் எடுத்திருக்கும் இலங்கை சம்பந்தமான திரைப்படத்தை எங்களுக்கு போட்டுக் காட்ட வேண்டுமென்று..!

அப்போதே “படத்தில் எந்த இடத்திலும் ஈழப் பிரச்சினையைக் கொச்சைப்படுத்தவில்லை. கதை அதுவல்ல…” என்று சொல்லி வைத்திருந்தார். விஷயத்தை கொஞ்சம் ஊறப் போட்டு, ஆறப் போட்டு நேற்றைக்கு பிரஸ் மீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். மலையாளம் கலந்த தெள்ளுத் தமிழில் மிக ஈர்ப்பாகப் பேசினார் சந்தோஷ்சிவன்.

“என் பிரெண்ட் ஒருத்தரை பார்க்கப் போனப்ப அங்க இலங்கை அகதி ஒருத்தர் இருந்தார். அவர் அதிகமா பேசலை. ஆனால் அவர் கண்ணுல ஒரு கதை தெரிஞ்சது.. அது என்ன்ன்னு கொஞ்சம் கேட்டப்போ.. ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு.. அப்படியே அந்தக் கதை நம்மளை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிச்சு.. அந்தக் கதைல ஒரு சின்னப் பொண்ணு இருக்கு. இந்தப் படத்தோட பேக்கிரவுண்ட் அந்தப் பொண்ணுதான்.. சுனாமில பாதிக்கப்பட்ட அந்தப் பொண்ணோட வாழ்க்கைக் கதைதான் இது.. அதோட கொஞ்சம் ஈழத்து பிரச்சினைகள்.. அரசியல்.. போர் எல்லாமே கலந்திருக்கு..

சில காட்சிகளை மட்டுமே இலங்கைல ஷூட் செஞ்சிருக்கோம். மத்தபடி ராமநாதபுரம், திருநெல்வேலி, கேரளால கொஞ்சம் பகுதிகள்ல ஷூட் செஞ்சோம்.. சென்சார்ல இந்தப் படத்தைப் பார்த்திட்டு எல்லாரும் ரொம்ப பாராட்டினாங்க. அந்தப் பாராட்டுல ரொம்ப முக்கியமானது லிங்குசாமி சாரோடது.. இந்தப் படத்தை நானே ரிலீஸ் செய்றேன்னு சொன்னது எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய பாராட்டா நினைக்கிறேன்..” என்றார்.

‘மல்லி’, ‘டெர்ரரிஸ்ட்’, ‘அசோகா’, ‘உருமி’ என்று பல படங்களை இயக்கியும், 11 தேசிய விருதுகளையும் பெற்றிருக்கும் சந்தோஷ்சிவனின் இயக்கத் திறமையும், ஒளிப்பதிவும் எப்போதும் ரசிக்க வைக்க்க் கூடியாதாகவே இருக்கும். கதை இதுதான் என்று சிவன் சொன்னாலும், படம் பார்த்தவர்களோ வேறு மாதிரிதான் சொல்கிறார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளின் வாழ்க்கை கதையில் ஒரு குறிப்பிட்ட சிறுமியைச் சுற்றியே கதை நகர்கிறதாம். சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்படும் அனாதை குழந்தைகள் மையமும் படத்தில் ஒரு முக்கிய இடமாம். இதனை பார்த்துக் கொள்ளும் பொறுப்பாளராக நடிகை சரிதா நடித்துள்ளாராம். இந்தப் படம் சென்ற ஆண்டு ‘போசன் சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடப்பட்டுள்ளது.

‘யு’ சர்டிபிகேட் வாங்கியிருந்தாலும் கதைக்களத்தை எண்ணி அனைவரும் சந்தேகத்துடன் இருக்கும் நிலையில் எதற்கும் அஞ்சானான லிங்குசாமி இதனை வாங்கியிருப்பதால் படம் நிச்சயம் திரைக்கு வரும் என்பதில் சந்தேகமேயில்லை..!

Our Score