பீனிக்ஸ் மால் – ஐமேக்ஸ் தியேட்டர் கட்டணம் 360 ரூபாயாம்..!

பீனிக்ஸ் மால் – ஐமேக்ஸ் தியேட்டர் கட்டணம் 360 ரூபாயாம்..!

வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் கட்டப்பட்டிருக்கும் 'லூக்ஸ்' திரையரங்க வளாகத்தில் 'ஐமேக்ஸ்' என்கிற பிரமாண்டமான திரை கொண்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பீனிக்ஸ் மால் துவங்கப்பட்ட நாட்களில் இருந்தே இந்ந 'ஐமேக்ஸ்' திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த தியேட்டர் வளாகம் முழுவதுமே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலாவுக்கு சொந்தமான 'ஜாஸ் சினிமாஸ்' நிறுவனத்தின் வசம் கைமாறியதும் இப்போது உடனடியாக ஐமேக்ஸ் தியேட்டர்களுக்குஅனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமையான நவம்பர் 20-ம் தேதி முதல் இந்த 'ஐமேக்ஸ்' தியேட்டர் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் படமாக புதிய ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்பெக்ட்ரா’ வெளியாகவுள்ளது.

imax theatre-ticket

ஆனால் இந்த 'ஐமேக்ஸ்' திரையரங்கின் தியேட்டர் கட்டணங்கள் 360 ரூபாய் என்று அறிவித்திருப்பதுதான் கொடுமையாக உள்ளது.

தமிழகத்தில் எங்குமே 120 ரூபாய்க்கு மேல் தியேட்டர் கட்டணங்கள் இல்லை என்பதும், இதற்கு மேல் வசூலிக்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது என்பதும் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் எந்தவித அரசாணையும் புதிதாக அறிவிக்கப்படாத சூழலில் இந்த 'ஐமேக்ஸ்' தியேட்டருக்கு மட்டும் 360 ரூபாய் கட்டணமாக வைத்துக் கொள்ள அனுமதியளித்த்து யார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்தத் தியேட்டருக்கு மட்டும் தனியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்கிற கேள்வியும் திரையுலகத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது உலகம் முழுவதிலும் 66 நாடுகளில் இருக்கும் இந்த 'ஐமேக்ஸ்' தியேட்டர்களின் தொழில் நுட்ப வசதிகள் மற்ற திரையரங்குகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

பெரிய அகண்ட, 72 அடி உயரமும், 53 அடி அகலமும் கொண்ட திரை இந்த 'ஐமேக்ஸ்' தியேட்டரில் இருக்கும். மேலும் ரசிகர்கள் அமரும் சீட்டுக்களில் எந்தப் பக்கம் உட்கார்ந்து பார்த்தாலும் படம் ஒரே மாதிரியாகத் தோன்றும்வண்ணம் திரைகள் அமைக்கப்பட்டிருப்பது இதன் தனி சிறப்பு. மேலும் சவுண்டு சிஸ்டமும் துல்லியமாக ரசிகர்களுக்குக் கேட்கும்.

இப்படி பல வசதிகள் கொண்ட இந்த 'ஐமேக்ஸ்' தொழில் நுட்பம் சினிமாவுக்குத் தேவைதான் என்றாலும் இந்த அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி வைத்தால் சாதாரண ரசிகர்கள் இது போன்ற தியேட்டர்களுக்கு வரவே முடியாது. கடைசியில் சினிமாவே பணக்காரர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பது போலாகிவிடும்..!

அரசின் அனுமதி இல்லாமல் அரசு பதவியில் இருப்பவர்களே இது போன்று தன்னிச்சையாக டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொண்டால் இந்தக் கொடுமையை யாரிடம் போய் சொல்லி நியாயம் கேட்பது..?