full screen background image

நயன்தாராவுக்காகவே எழுதப்பட்ட கதைதான் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம்..!

நயன்தாராவுக்காகவே எழுதப்பட்ட கதைதான் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம்..!

கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘இமைக்கா நொடிகள்’.

‘டிமாண்டி காலனி’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு படத்தை பற்றி பேசினர்.

stun shiva

நிகழ்ச்சியில் சண்டை பயிற்சியாளர் ஸ்டன் சிவா பேசும்போது, “இந்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை பற்றி சொல்லும்போதே இயக்குநர் அஜய் புதுமையாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதற்காக கடினமாக உழைத்தோம்.

படத்தில் சைக்கிள் ஸ்டண்ட் ஒன்றுக்காக ஹாங்காங்கில் இருந்து டீம் ஒன்றை வரவழைத்தோம். எந்த தயக்கமும் இல்லாமல் செலவு செய்தார் தயாரிப்பாளர் ஜெயகுமார். எல்லோருடைய ஒத்துழைப்பால் படத்தில் சண்டைக் காட்சிகள்  மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படம் வெளியான பிறகு நன்றாக பேசப்படும்…” என்றார். 

pkp

இந்தப் படத்தில் எழுத்துப் பணியைச் செய்திருக்கும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசுகையில், “இந்தப் படம் எனக்கு ஒரு புதுமையான அனுபவம்.  இது என்னுடைய 24-வது படம், முதல்முறையாக இந்த படத்தில்தான் என்னுடைய எழுத்துப் பணிக்காக பூஜையன்றைக்கே முழு சம்பளத்தையும் பெற்றுள்ளேன். இதற்காக தயாரிப்பாளருக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அஜய் கதையை சொன்னபோதே அதற்குள் ஒரு வசீகரம் இருந்தது. நம்மை கட்டிப் போடும் பல விஷயங்கள் கதையில் இருப்பதை புரிந்து கொண்டேன். புதுமையான விஷயங்களை தேடுவது என்ற இயக்குநரின் தேடல் பெரியது. தனக்கு என்ன தேவை என்பதை கேட்டு வாங்கும் தெளிவு அவரிடம் இருந்தது. படம் 2 மணி நேரம் 50 நிமிடம் ஓடக் கூடியது. ஆனால் தலைப்புக்கேற்ற மாதிரி கொஞ்சம்கூட கண் இமைக்காமல் படத்தை நீங்கள் பார்ப்பீர்கள்…” என்றார்.

c.j.jayakumar

படத்தின் தயாரிப்பாளரான சி.ஜெ.ஜெயக்குமார் பேசுகையில், “இரண்டு வருட கடின உழைப்பு, பல அவமானங்கள் தாண்டி இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகிறது. ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையால் 5 நாட்களுக்கு முன்பே படத்தை பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்க இருக்கிறோம்.

அனுராக் காஷ்யாப் கேரக்டர் இளம் ரசிகர்களை மிகவும் கவரும். விஜய் சேதுபதி, நயன்தாரா காட்சிகள் ஆண்கள் கண்களிலும் கண்ணீரை வரவைக்கும். ஆக்‌ஷனில் நாங்கள் எந்த காம்ப்ரமைஸும் செய்யவில்லை. சண்டை காட்சிகளுக்கு தேவையான விஷயங்களை தயாரிப்பாளரிடம் எப்படி கேட்டு வாங்குவது என்ற கலை தெரிந்தவர் ஸ்டன் சிவா. ஆதியின் பின்னணி இசையோடு படத்தை பார்க்க நானும் ஆவலோடு இருக்கிறேன்…” என்றார்.

r.d.rajasekar

ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் பேசுகையில், “தமிழில் மல்ட்டி ஸ்டாரர் படம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனால் அதை செய்து காட்டியிருக்கிறார் தயாரிப்பாளர் ஜெயகுமார். எல்லா முன்னணி நடிகர்களுக்கும் எந்தவித குறையும் இல்லாதவாறு  கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறார் இயக்குநர். நயன்தாராவுக்காகவே எழுதப்பட்ட கதையாக எனக்கு தெரிகிறது. ஆக்ஷன் படம் என்றாலே பெரிய பட்ஜெட் படம்தான். நிச்சயம் அனைவரையும் திருப்திப்படுத்தும்…” என்றார்.

hip hop thamizha

படத்திற்கு இசையமைத்திருக்கும் ஹிப்ஹாப் தமிழா படம் பற்றிப் பேசுகையில், “இந்தப் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், படத்தின் பின்னணி இசைதான் படத்திற்கு மிகப் பெரிய தூணாக இருக்க போகிறது. இசை வெளியீட்டுக்கு பிறகு இரண்டு பாடல்களை உருவாக்கியிருக்கிறோம். படப்பிடிப்பின்போதே அவ்வப்போது ஸ்டுடியோவுக்கு வந்து பின்னணி இசையை பற்றி பேசிக் கொண்டே இருப்பார். படத்தின் மிகப் பெரிய பலம் ஆக்‌ஷன் மற்றும் ஒளிப்பதிவு. அவர்கள் பட்ட கஷ்டம்தான் என்னையும் நல்ல இசையை கொடுக்க ஊக்குவிக்கிறது.

எல்லா நடிகர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். நயன்தாரா கம்பீரமாக இருக்கிறார். படத்தின் சக்திக்கும் மீறி அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்…” என்றார்.

press meet-stage-2

படத்தின் இயக்குநரான அஜய் ஞானமுத்து பேசுகையில், “என்னுடைய முதல் படமான ‘டிமாண்டி காலனி’ படத்தின்போதே நான் பயந்திருந்தேன். அதை வெற்றிப் படமாக்கி விட்டீர்கள். இனிமேல் அந்த மாதிரி பயமே கூடாது என நினைத்தேன். அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய எல்லா தொழில் நுட்ப கலைஞர்களுமே மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். நான்தான் கத்துக்குட்டி. அவர்களுடன் வேலை பார்த்தது ஒரு ஜாலியான, நல்ல அனுபவம்.

என் குரு முருகதாஸ் சார் சொன்னது பாதி வெற்றி திரைக்கதையிலும், நடிகர்கள் தேர்வில் 25% வெற்றியும் இருக்கும். மீதி 25%தான் படப்பிடிப்பில் செய்ய வேண்டியவை. அதனால்தான் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுடன் உட்கார்ந்து சண்டை போட்டு திரைக்கதையை எழுதினோம்.

2013-ல் அதர்வாவிடம் இந்த கதையை சொன்னேன். அவரும் ஓகே சொன்னார். ஆனால் முதல் பட இயக்குனர் என்பதால் அப்போது தொடங்க முடியவில்லை. கிட்டத்தட்ட 5  ஆண்டுகள் கழித்து இப்போதுதான் படமாக வருகிறது. அதர்வா என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என நம்புகிறேன்.

ஆதி ரொம்பவே பாஸிடிவான மனிதர். நமக்கு தன்னம்பிக்கையை விதைத்து விடுவார். தயாரிப்பாளர் செய்த எல்லா விஷயங்களுமே படத்தின் மெறுகேற்றலுக்காக உதவியது, ஆகஸ்ட் 30-ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது…” என்றார் இயக்குநர் அஜய் ஞானமுத்து.

atharvaa

படத்தின் நாயகனான அதர்வா முரளி பேசுகையில். “இந்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் ரோலர் கோஸ்டர் ரைடைவிடவும் மிகவும் கஷ்டமான ஒரு ரைட். என்ன ஆனாலும் சரி… இந்தப் படத்தை எதற்காகவும், எப்படிப்பட்ட சமரசத்தோடும் எடுக்க வேண்டாம் என நானும் அஜய்யும் முன்பேயே முடிவெடுத்துவிட்டோம்.

நிறைய அலைச்சலுக்கு பிறகுதான் தயாரிப்பாளர் ஜெயகுமார் படத்துக்குள் வந்தார். அவர்தான் கதையை நம்பி செலவு செய்தார். நயன்தாரா, ஆர்.டி.ராஜசேகர், அனுராக் காஷ்யாப் என என் ஃபேவரைட் லிஸ்டில் உள்ள அத்தனை பேருடனும் ஒரே படத்தில் வேலை செய்தது பெரிய சர்ப்ரைஸ்.

இந்தப் படத்தின் ஆல்பம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த படத்தின் சண்டை காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது…” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நாயகி ராஷி கண்ணா, ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி, இணை தயாரிப்பாளர் அருண், விஜய், சைதன்யா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

Our Score