full screen background image

ஒரு ரவுடியின் உண்மைக் கதைதான் ‘இமை’ திரைப்படம்

ஒரு ரவுடியின் உண்மைக் கதைதான் ‘இமை’ திரைப்படம்

கே.பி. பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஹார்திக் வி.டோரி தயாரித்துள்ள புதிய படம் ‘இமை’. இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ளனர்.

படத்தின் நாயகனாக சரிஷ், நாயகியாக அக்ஷயப் பிரியா நடித்துள்ளனர். ஒளிப்பதிவு –  கே.பிரதீப், இசை – மிக்கு காவில், ஆதிப், பாடல்கள் – சீர்காழி சிற்பி, எழுத்து, இயக்கம் – விஜய் கே.மோகன்.

‘இமை’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மதியம் பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், முன்னிலையில்  படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. 

நிகழ்ச்சியில் இயக்குநர் விஜய் கே.மோகன் பேசும்போது,  “நான் ஒரு முறை ரயிலில் பயணம் செய்தபோது ஒருவர் என் எதிர் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். அவரிடம் மெல்லப் பேச்சு கொடுத்தேன். தன்னுடைய ஊர் கோயமுத்தூர் என்றார். என்ன வேலை பார்க்கிறீர்கள் என்றபோது ரவுடியாக இருக்கிறேன் என்றார். அவர் ஒரு ரவுடி  என்றதும் எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.  

அவரிடம் சற்றுநேரம் பேசினேன். அவரிடத்தில் நல்ல கதை இருக்கும் போல் தோன்றியது. அவரது போன் நம்பரைக் கேட்டேன். கொடுத்தார்.  ஊர் வந்ததும் இறங்கிக் கொண்டார்.

அவரைத் தொடர்பு கொண்டு மீண்டும் அவரை நேரில் சந்தித்து பேசினேன். அவருக்குள் ஒரு காதல் இருந்தது தெரிந்தது. அது பற்றி அவரிடம் விரிவாகப் பேசினேன். அந்தக் காதல் கதை மிக, மிக சுவாரசியமாக இருந்தது.

‘அவரது காதல் கதையைப் படமாக எடுக்க விரும்புகிறேன்’ என்று அனுமதி கேட்டேன். அனுமதி கொடுத்தார். அவரது கதையைத் திரைக்கதையாக மாற்றி மறுபடியும் கூறினேன். ‘க்ளைமாக்ஸ் மாறியுள்ளதே?’ என்றார்.  சினிமாவுக்காக மாற்றங்கள் செய்திருப்பதையும் சொன்னேன். 

அப்படி உருவான கதைதான் இந்த ‘இமை’ திரைப்படம். இப்படத்தில் நாயகனாக நடிக்க சரிஷ் கிடைத்தார். அவர் 15 ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் போராடி வருபவர். அவர் மூலமாக தயாரிப்பாளரும் கிடைத்தார். அவர் குஜராத்திக்காரர். ஆனால், எங்களை நம்பி தயாரிக்க முன் வந்திருக்கிறார். நாயகி அக்ஷயா, சில கன்னடப் படங்களில் நடித்தவர்.

இப்படி படக் குழு தாயராகி படம் முடித்து இன்று ஆடியோ வெளியீடு  நடந்துள்ளது. வரும் அக்டோபர் மாதம்  படம் வெளியாகவுள்ளது.

உண்மைக் கதையின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருப்பதால் எங்கள் படத்துக்கு கூடுதல் பலமும் நம்பிக்கையும் உள்ளன…” என்றார்.

actor sarish 

நாயகன் சரிஷ் பேசும்போது, “எனது ஆசை, கனவு, லட்சியம் எல்லாமே நடிப்புதான். சரியான வாய்ப்பு தேடியபோது இயக்குநர் விஜய் கே.மோகன் சொன்ன கதை பிடித்து இருந்தது. ஒரு கனவு போல படம் முடிந்து விட்டது. இதில் நடிப்பதற்கு எனக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அனைவருக்கும் பிடித்த படமாக  ‘இமை’  இருக்கும்…” என்றார்.

akshaya priya

நாயகி அக்ஷயப்பிரியா பேசும்போது, “தமிழில் இது எனக்கு முதல் படம். நல்ல கதையம்சம் உள்ள படம் இது. இதில் எனக்கு முரட்டு சுபாவமும், ரவுடித்தனமும் கொண்ட ரவுடியை துரத்தித் துரத்திக் காதலிக்கும் பெண் பாத்திரம் . தமிழில் முதல் பட வாய்ப்பு இது என்றாலும், எனக்கு ஏதோ பிக்னிக் போய் வந்தது போல  படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

படப்பிடிப்பில் எல்லாரும் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். படக் குழுவினர் என் சௌகரியம் முக்கியம் என்பதை உணர்ந்து  நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். அனைவருக்கும் நன்றி…” என்றார். 

பாடலாசிரியர் சீர்காழி சிற்பி பேசும்போது,  “இமை’ படத்தில் நான் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறேன். ‘வால் முளச்ச பொண்ணு பிளேடு வச்ச கண்ணு’, ‘காதல் வந்தால்’, ‘விழிகள் மூடும்போது’ என்ற பாடல்கள் சிறப்பாக அமைந்திருப்பதாக படக் குழுவினர் கூறினார்கள். பாடல் காட்சிகளும் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. படமும் எல்லாரையும் கவரும் ஜனரஞ்சகப் படமாக இருக்கும்..” என்றார்.

விழாவில்  ஒளிப்பதிவாளர்  வி.கே,பிரதீப், இசையமைப்பாளர்கள் மிக்கு காவில், ஆதிப், நடிகர் வெற்றிவேல் ஆகியோரும் பேசினார்கள்.

Our Score