இசைஞானி இளையராஜாவின் 1000-மாவது திரைப்பட சாதனை என்ற பட்டியலுக்கு முன்னோடியாக 999-வது படமாக ‘ஒரு ஊர்ல’ என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாம் ஏற்கெனவே இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளபடி பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம்தான் இசைஞானி இசையமைக்கும் 1000-மாவது படம் என்று உறுதியாகிவிட்டது.
இந்தச் சாதனையை முறைப்படி உலகத்திற்கு அறிவித்து சாதனைப் பட்டியலில் இணைத்துவிடத்தான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தி்ன அங்கீகாரத்தையும் இசைஞானி கேட்டிருந்தார் என்று இதில் குறிப்பிட்டிருந்தோம்.
இதன் முதல் கட்டமாக இப்போது இசைஞானி இசையமைத்து வரும் ‘ஒரு ஊர்ல’ என்ற திரைப்படத்தை அவருடைய 999-வது படமாக அறிவித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. இந்த படத்தில் ‘பருத்திவீரன்’ வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ‘பருத்திவீரன்’ படத்தில் பிரியாமணியின் முறை மாமன் வேடத்தில் நடித்தவர். கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர்.
இந்திரஜித், அன்னபூரணி,’நான் கடவுள்’ முரளி, சுந்தர், சிவா, ஜப்பான் கண்ணன், முல்லை ஆடலரசு கோதண்டபாணி, மாதவி, வன ஜோதி, பேபி சௌந்தர்யா என புதுமுக நடிகர்களுடன் கதாப்பாதிரங்களுக்கேற்ப ஏராளமான கிராம மக்களும் இதில் நடிகர், நடிகைகளாக நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கூறியபோது… “கெட்டவன் மாதிரி இருக்கும் நல்லவன் வெங்கடேஷ்! நல்லவன் மாதிரி இருக்கிற கெட்டவன் இந்திரஜித் உட்பட பதினான்கு விதமான கதாபாத்திரங்களின் கிராமத்து யதார்த்த வாழ்க்கைதான் இந்தப் படம். படத்தில் வரும் ஒரு இரும்புக் கடையின் பிரம்மாண்டத்தை இதுவரை யாரும் திரையில் பார்த்திருக்க முடியாது.
இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி பதினெட்டு நாட்கள் படமாக்கப்பட்டது. ஈ , காக்காகூட பறக்க முடியாத 250 ஏக்கர் பொட்டல் காடு… அந்தக் காட்டில் ஒரு மரம் கிடையாது. அங்கு பதினெட்டு நாட்கள் படப்பிடிப்பு என்றால் யோசித்துப் பாருங்கள்.
முழு படத்தையும் பார்த்துவிட்டுத்தான் இசைஞானி இளையராஜா பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்தார். ஐந்து பாடல்களிலும் கிராமத்து மண்ணின் மணம் இருக்கும். அவருடைய 999-வது படமாக எங்களது படம் அமைந்தது எங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பெருமை..” என்றார்.