full screen background image

“பிரசாத் ஸ்டூடியோவும் காணாமல் போகும்…” – இளையராஜாவின் மறைமுக ஆசை..!

“பிரசாத் ஸ்டூடியோவும் காணாமல் போகும்…” – இளையராஜாவின் மறைமுக ஆசை..!

இசைஞானி இளையராஜா நுங்கம்பாக்கத்தில் இருக்கும் எம்.எம்.தியேட்டரை விலைக்கு வாங்கி ‘இளையராஜா’ என்கிற தன்னுடைய பெயரிலேயே புதிதாக ரிக்கார்டிங் ஸ்டூடியோவை அதில் அமைத்துள்ளார்.

இந்த ஸ்டூடியோவின் பூஜை நிகழ்வும், புதிய பாடல் பதிவும் இன்று காலையில் நடைபெற்றது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் புதிய படத்திற்கான பாடலை இசைஞானி இளையராஜா இன்று இசையமைத்து ஒலிப்பதிவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் படக் குழுவினர் அனைவரும் அங்கே வந்திருந்து இசைஞானியை வாழ்த்தினார்கள்.

அதன் பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் இசைஞானி இளையராஜா.

அப்போது, “ஒரு காலத்தில் சென்னையில்தான் பல்வேறு மொழி திரைப்படங்கள் உருவாகின. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் இங்கேயே நடைபெற்றன.

அதேபோல் சென்னையில் ஏவி.எம்., விஜயா-வாஹினி, ஜெமினி, நெப்டியூன், சாரதா, பரணி, கற்பகம் என்று பல ஸ்டூடியோக்களும் இருந்தன. இப்போது அதெல்லாம் இல்லை. அதேபோல் பிரசாத் ஸ்டூடியோவும் இல்லாமல் போவதற்காக, நான் அந்த ஸ்டூடியோவில் இருந்து வெளியில் வந்துவிட்டேன்.

வெளியில் வந்த பின்பு எனக்காக ஒரு ஸ்டூடியோ தேவைப்பட்டதால் என்னுடைய சொந்தப் பணத்தில் இந்த இடத்தை விலைக்கு வாங்கி இதை ரிக்கார்டிங் ஸ்டூடியோவாக மாற்றியிருக்கிறேன்.

இன்றைக்கு முதல் நாள். ஸ்டூடியோவுக்கு பூஜை நடைபெற்றது. இயக்குநர் வெற்றி மாறனின் புதிய படத்திற்கான நான் இசையமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஸ்டூடியோவுக்குள் இன்னும் சில வேலைகள் பாக்கியிருக்கின்றன. அவையெல்லாம் முடிந்த பின்பு ஸ்டூடியோ முழு வீச்சில் இயங்கத் துவங்கும்..” என்றார்.

தொடர்ந்து “பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறியதில் உங்களுக்கு வருத்தம் இருக்கிறதா..?” என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த இளையராஜா, “கடந்த கால வாழ்க்கைக்கு வருத்தப்பட முடியுமா..? முடியாதுல்ல. அதுதான் வாழ்க்கை.. வாழ்க்கைன்னா எல்லாம் சேர்ந்துதான் இருக்கும். இதையெல்லாம் நாம தாண்டித்தான் போகணும்.. எல்லாத்தையும் எதிர் கொள்ளணும். எல்லாமே சவால்தான். மனிதனுக்குத்தான் இத்தனை எதிர்ப்புகளும் வரும். அதையும் தாண்டி நாம லட்சியத்தை நோக்கி ஓடணும்.. அப்பத்தான் நம்ம இடத்தை அடைய முடியும்..” என்றார்.

Our Score