full screen background image

பாலா இயக்கும் படமே இசைஞானியின் 1000-மாவது படம்..!

பாலா இயக்கும் படமே இசைஞானியின் 1000-மாவது படம்..!

பாரதிராஜாவுக்கே கிடைக்காத ஒரு பெருமை, இயக்குநர் பாலாவுக்குக் கிடைத்திருக்கிறது..!

இயக்குநர் பாலா தற்போது இயக்கி வரும் படமே இசைஞானிக்கு 1000-மாவது படம் என்று உறுதியாகச் சொல்லப்படுகிறது.. 1976-ல் ‘அன்னக்கிளி’க்கு இசையமைத்து தனது ராக ராஜாங்கத்தை துவக்கிய இசைஞானி இப்போதுவரையிலும் உச்சாணி கொம்பிலேயே இருக்கிறார்..!

4 முறை தேசிய விருது, 6 முறை தமிழக அரசின் மாநில விருது.. 4 முறை ஆந்திர அரசின் நந்தி விருது, 3 முறை கேரள அரசின் விருது, 5 முறை பிலிம்பேர் விருதுகள் என்று விருதுகளை வாரிக் குவித்திருக்கும் ராஜாவுக்கு இது எல்லாவற்றையும்விட மிகப் பெரிய விருது, தமிழகத்து மக்களின் மனதில் அவருக்கென்று இருக்கும் ஒரு தனியிடம்.

இப்போது பாலா கரகாட்டத்தை மையமாக வைத்து எடுத்துக் கொண்டிருக்கும் படமே இசைஞானியின் 1000-வது படம் என்று இசைஞானிக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். இந்தப் படத்தின் இசை வெளியீட்டின்போது இதற்கான அறிவிப்பு முறையாக வெளியிடப்பட்டு, மிகப் பெரிய அளவுக்கு பிரமாண்டமான முறையில் இசைஞானிக்கு பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

பாலா இயக்கும் இந்தப் படத்தின் கதை கரகாட்டத்தை மையப்படுத்தியது என்பதால் இதில் இடம் பெற்றிருக்கும் 12 பாடல்களின் இசைக்கும், பல்வேறு கிராமப்புற இசைக் கருவிகளைப் பயன்படுத்தியே மெட்டுக்கள் போடப்பட்டிருப்பதாகவும், அனைத்து பாடல்களுமே திரும்பத் திரும்ப கேட்கும்வகையில் உயிர்ப்புடன் இருப்பதாகவும் ஸ்டூடியோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1000 திரைப்படங்கள் என்பது சாதாரணமானதல்ல.. அதிலும் இசைஞானி அதிகப்பட்சம் ஒரு படத்திற்கு பாடல்களுக்கு இசையமைக்க 3 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதில்லை.

அவருடைய புகழ் பெற்ற பாடல்களெல்லாம் 1 மணி நேரத்தில் போடப்பட்டவையாகவும் இருக்கின்றன. ‘வருஷம் 16’, ‘சின்னத்தம்பி’, ‘கரகாட்டக்காரன்’ படங்களின் இசை வடிவும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே தயார் செய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட இயக்குநர்களே கூறியிருந்தார்கள்.

ஒரு நாள்கூட ஓய்வில்லாமல் வருடந்தோறும் அந்த ஆர்மோனியப் பெட்டியைத் தடவியபடியே ராகங்களை கொண்டு வந்து கொட்டிய அந்த தெய்வீக அறிவு.. இத்தனையாண்டுகளாக தமிழ்த் திரையுலகையும் சேர்த்தே வாழ வைத்திருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இன்றும் ஓய்வில்லாமல் இசைக்கப்படும் இசைஞானியின் இசை மென்மேலும் தொடர வேண்டும். தமிழர்களின் வாழ்வில் இன்றியைமையாத ஒரு இடத்தை இன்றுபோல் என்றும் இசைஞானியின் இசை இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்..!

Our Score