‘மங்கை’ என்னும் தொலைக்காட்சி தொடரின் பிரமாண்டமான வெற்றிக்குப் பிறகு அதனை இயக்கிய இயக்குநர் அரிராஜன், ‘மங்கை அரிராஜன்’ என்றே இன்றுவரையிலும் அழைக்கப்படுகிறார்.
இவர் சில திரைப்படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். 2014-ம் ஆண்டு 6 ஹீரோயின்களை வைத்து இவர் தயாரிக்கத் துவங்கிய படம் ‘மன்மத ராஜாக்கள்’. அந்தப் படம் இதோ.. இதோ என்று இழுத்து கடைசியாக இந்த வருடம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறதாம்.
இப்போது இந்தப் படத்தின் பெயரை ‘இளமை ஊஞ்சல்’ என்று மாற்றியிருக்கிறார்கள்..! 6 ஹீரோயின்களில் 4 பேர் முக்கியமான கேரக்டர்களில் வருவதால் ‘இளமை ஊஞ்சல்’ பெயர் பொருத்தமானது என்கிறார் இயக்குநர்.
கிரண், மேக்னா நாயுடு, கீர்த்தி சாவ்லா, ஆர்த்தி ஆகிய நான்கு ஹீரோயின்களும் அடர்ந்த காட்டுக்குள் சுற்றுலா செல்கிறார்கள். அப்படி சென்றிருக்கும்போது இவர்களது டச்சப் பாய்ஸ்களான ஸ்ராவந்த், மணீஷ், அணீஷ், மங்கை அரிராஜன் ஆகிய நால்வருமே கூட்டு சேர்ந்து நான்கு ஹீரோயின்களையும் கடத்திச் செல்கிறார்கள். ஒரே நேரத்தில் 4 ஹீரோயின்கள் கடத்தப்பட்டதால் தமிழகமே பரபரப்பாகிறது. திரையுலகம் கவலை கொள்கிறது.
இந்த நிலையில் இவர்களைக் கண்டுபிடிக்க தமிழக அரசு ஐபிஎஸ் அதிகாரியான நமீதாவை நியமிக்கிறது. போலீஸ் இவர்களைத் தேட துவங்க.. இன்னொரு பக்கம் தங்களது டச்சப் பாய்ஸ்களிடமிருந்து ஹீரோயின்களும் தப்பித்து இன்னொரு பக்கம் ஓடுகிறார்கள். இவர்களைத் தேடி போலீஸும், கடத்தியவர்களும் தேடத் துவங்க.. காட்டுக்குள் ஒரு அதகளமே நடக்கிறது. முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதையாம்..!
இந்தப் படத்தில் இவர்களுடன் இயக்குநர் டி.பி.கஜேந்திரன், நடிகர் பாண்டு, அபிநயஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் பூபதிராஜா இசையமைக்க பிறைசூடன் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். எஸ்.ஆர்.மனோகர் தயாரித்துள்ளார்.