தயாரிப்பாளர்களான சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் இருவரும் இணைந்து நடத்தும் தயாரிப்பு நிறுவனமான பேஷன் ஸ்டுடியோஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்கு படங்களை உருவாக்கியுள்ளது.
நம்பிக்கைக்குரிய நிறைய படங்களை தயாரித்து இருந்தாலும் இந்த வருடம் 2023-லும் வித்தியாசமான கதைக் களங்களில் புதிய படங்களை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது.
அதில், I. அஹமது இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி- நயன்தாரா நடிப்பில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் ‘இறைவன்’ திரைப்படமும் ஒன்று. இதன் டைட்டில் மற்றும் முதல் பார்வையை சமீபத்தில் நடிகர் கார்த்தி வெளியிட்டார்.
இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தின் வில்லன் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன், விஜயலட்சுமி, சார்லி, அழகம் பெருமாள், வினோத் கிஷன், பக்ஸ், படவா கோபி, பொற்கொடி இன்னும் பலரும் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு – ஹரி கே.வேதாந்த், இசை – யுவன் ஷங்கர் ராஜா, படத் தொகுப்பு – மணிகண்ட பாலாஜி, கலை இயக்கம் – ஜாக்கி, சண்டை பயிற்சி இயக்கம் – டான் அசோக்.
இந்த இந்த ‘இறைவன்’ படம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசும்போது, “எங்களது இந்த ‘இறைவன்’ படத்தின் டைட்டில் & முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ‘இறைவன்’ படம் உருவான மொத்த புராசஸும் சுவாரஸ்யமானது.
‘ஜெயம்’ ரவி, நயன்தாரா போன்ற நட்சத்திரங்களுடன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தை இயக்குநர் அஹமத் உருவாக்கி இருக்கிறார். அவர் ஏற்கனவே திட்டமிட்டபடி சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்தது தயாரிப்பாளராக பேஷன் ஸ்டுடியோஸிற்கு மகிழ்ச்சியான விஷயம்.
எங்கள் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி சார் அவர்களுக்கு நன்றி. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதிகளை விரைவில் அறிவிப்போம்.
இயக்குநர் அஹமதுவின் முந்தைய படங்களான ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’, ‘ஜனகனமன’ ஆகிய படங்களைப் போலவே இந்த ‘இறைவன்’ திரைப்படமும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும்.
ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இது இருந்தாலும் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய சினிமா பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.
‘ஜெயம்’ ரவி சார், நயன்தாரா மேம் மற்றும் ஒட்டு மொத்த படக் குழுவின் ஆதரவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நடிகர்களது ஸ்டார் வேல்யூ மற்றும் கடந்த 2022-ல் வெளியாகி வெற்றி பெற்ற அவர்களது படங்களும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த ‘இறைவன்’ படம் எங்கள் ஒட்டு மொத்த குழுவுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நிச்சயம் ஒரு மைல் கல்லாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.









