சினிமா துறையில் ஆர்வமும், திறமையும் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச சினிமா பயிற்சியை தருவதற்காக ‘திரை பண்பாட்டு ஆய்வகம்’ என்ற பெயரில் கல்வி நிறுவனம் ஒன்று கடந்த ஏப்ரல் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று துவக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தை இயக்குநர் வெற்றி மாறன், டாக்டர்.ராஜநாயகம் மற்றும் வெற்றி துரைசாமி ஆகியோர் இணைந்து துவக்கியுள்ளனர்.
இந்த பயிற்சி நிறுவனத்தில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கிய தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் எழுத, பேச தெரிந்த பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் சேர்ந்து சினிமா துறையின் அனைத்துப் பிரிவுகளையும் கற்றுக் கொள்ளலாம்.
இந்தப் பயிற்சி வகுப்பில் சேருவதற்கு ஊடக துறையைத் தவிர்த்து மற்ற அனைத்து துறையிலும் பட்டம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அவர்களுடைய வயது வரம்பு 21 வயது முதல் 25 வயது வரையாகும்.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு மாணவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்.
இந்த முதுகலை பட்டயப் படிப்பின் முதல் ஆண்டில் 40 மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளது.
இந்தப் பட்டயப் படிப்பின் கல்வி காலம் 1 வருடமாகும்.
இதில் பயிற்சி பெற தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி, தங்குமிடம் மற்றும் உணவுக்கு என்று எதற்குமே கட்டணங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயிற்சி வகுப்பு ஐந்து நிலைகளில் மாணவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
ஆரம்ப ஆய்வு, எழுத்து தேர்வு, கல்வி நேர்காணல், தொழில் முறை நேர்காணல், வீட்டு வருகை என்று 5 வகை தேர்வுகளையும் கடந்து தேர்வானவர்களே இதில் பயிற்சி பெற முடியும்.
இந்தப் பயிற்சி தேர்வுக்கான முதல் கட்டத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
தற்போது இதன் இரண்டாம் சுற்று எழுத்து தேர்வு வரும் அக்டோபர் 24-ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
தமிழகம் முழுவதும் 5 இடங்களில் (சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர், திருநெல்வேலி) இந்த எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 1450 மாணவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த கல்வி நிறுவனத்தின் இணையத்தளம் : https://www.iifcinstitute.com/