‘திரிஷ்யம்-2’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுமா…? அதில் கமல்ஹாசன் நடிப்பாரா..? எப்போது படம் துவங்கும்..? என்பதெல்லாம் பின்னுக்குப் போய் தற்போது “நடிகை நதியா கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கப் போகிறாரா..?” என்கிற கேள்விதான் தமிழ்த் திரையுலகத்தில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.
நடிகை நதியா 1985-ம் ஆண்டு ‘பூவே பூச்சூட வா’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானார். அதன் பின்பு ஏராளமான தமிழ்த் திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவக்குமார். சத்யராஜ், பிரபு, மோகன், சுரேஷ், ராம்கி, ரகுவரன் என்று பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
நதியா தனது கல்யாணத்திற்கு முன்பாக 1994-ம் ஆண்டு கடைசியாக தமிழில் நாயகியாக நடித்த படம் ‘ராஜகுமாரன்’. இந்தப் படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திரையுலகத்தில் இருந்து தற்காலிகமாக விடைபெற்றார்.
இந்தக் காலக்கட்டத்தில் அவர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவேயில்லை. ‘காதல் பரிசு’ படத்தில் ராதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் அட்வான்ஸ்கூட வாங்கியிருந்த நதியா பின்பு அதில் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகு அவர் கமலுடன் இணைந்து நடிக்க அழைக்கப்படவேயில்லை என்கிறார்கள் திரையுலகப் பிரமுகர்கள்.
ஆனால் இப்போது இத்தனையாண்டுகள் கழித்து நதியா, கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாகத் தெரிகிறது.
‘திரிஷ்யம்-2’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்காக முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்த கவுதமியிடம் பேசியுள்ளனர். அவர் மறுத்துவிடவே தற்போது நதியாவிடம் நடிக்கக் கேட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நதியா ஏற்கெனவே ‘திரிஷ்யம்-1’ மற்றும் ‘திரிஷ்யம்-2’ தெலுங்கு ரீமேக்குகளில் மலையாளத்தில் ஆஷா சரத் நடித்திருந்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் இவர் கவுதமி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.
அப்படி நதியா இந்தப் படத்தில் நடித்தால் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களுக்கும், நதியாவின் தீவிர ரசிகர்களுக்கும் ஒரு மன திருப்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.