full screen background image

“கொடுத்தால் ஜெயலலிதாவிடம்தான் கொடுப்பேன்”-போயஸ் கார்டனில் சண்டையிட்ட நடிகர் வீரமணி..!

“கொடுத்தால் ஜெயலலிதாவிடம்தான் கொடுப்பேன்”-போயஸ் கார்டனில் சண்டையிட்ட நடிகர் வீரமணி..!

திரைப்பட நடிகரும், டப்பிங் கலைஞரும், டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான வீரமணி சமீபத்தில் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.

கவியரசு கண்ணதாசனின் மகனும், திரைப்பட இயக்குநருமான அண்ணாதுரை கண்ணதாசன், வீரமணியுடனான தனது அனுபவங்களைப் பற்றி தனது முக நூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.

அது இங்கே :

“இப்படி ஒரு பதிவினைப் போடுகின்ற துர்பாக்கியமான நிலைமை ஏற்படும் என்று நான் நினைக்கவே இல்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்த வீரமணி, கொரோனாவின் பிடியில் சிக்கி அவர் வணங்கிய ஸ்ரீராகவேந்திரரின் திருவடியை அடைந்து விட்டார்.

1960-களில்தான் அவர் எங்களுக்கு அறிமுகமானார். நான் அப்போது சிறுவன். ஒரு பெரிய நடிகனாக சினிமாவில் வரவேண்டும் என்பதற்காக ஊரை விட்டு ஓடி வந்து வாய்ப்புத் தேடி அலைந்து, வயிற்றுப் பிழைப்புக்காக பல்வேறு தொழில்களை செய்து வந்தார். பிஸ்கட் விற்பவராகத்தான் எனக்கு அவரைத் தெரியும்.

அப்பா தினமும் வெளியே புறப்படும்போது வாசலில் வீரமணியைப் பார்க்கலாம். அவர் மீது பரிதாபப்பட்டு, அப்பா, தனது ஹோட்டல் ரம்பா’ படத்தில், படம் முழுக்க வரும் ஒரு ரூம் பாய் வேடம் தந்தார். வீரமணியின் துரதிருஷ்டம், அந்தப் படம் பாதியில் நின்று போனது.

ஹோட்டல் ரம்பாவில் இடம் பெற்ற “அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு“ பாடல் வரிகளை எனக்கு சொன்னது வீரமணிதான். அதே போல அதுதான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் சினிமாவில் பாடிய முதல் பாடல் என்பதை எனக்கு சொல்லியதும் அவரே.

நானும் உங்க வீட்டு பிள்ளைதான்ப்பா என்று அவர் சொல்லாத நாளே இல்லை. எங்கள் வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அழைக்கப்பட வேண்டிய உறவினர்கள் பட்டியலில் வீரமணியின் பெயர் நிச்சயம் இருக்கும். அவருக்கு திருமணமாகி புது மனைவியுடன் முதலில் வந்தது எங்கள் வீட்டுக்குத்தான். என் அம்மாவிடம்தான் முதல் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று உறுதியாக இருந்தார் வீரமணி.

பயங்கரமான கோபக்காரன். ஆனால், அவர் மனம் முழுவதும் இரக்கம் நிறைந்து இருந்தது. அவரை அறிந்தவர்களுக்கு அது தெரியும்.

இந்த ஐம்பது ஆண்டுகளில்தான் அவர் தொடர்புடைய எத்தனை, எத்தனை வேடிக்கையான சம்பவங்கள்.. அவரைப் பார்க்கும்போதெல்லாம் என் நினவிற்கு வந்து சிரிக்க வைத்த அந்த சம்பவங்களை இனி ஒருவித மன வலியோடுதான் நினைத்துப் பார்க்க முடியும்.

நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் நாடகக் குழுவில் வீரமணி நடித்துக் கொண்டிருந்த நேரம். ரத்தக் கண்ணீர்’ நாடகத்தில் அவர்தான் ராமன்’ என்ற அந்த பிரதான வேலைக்காரன் கதாபாத்திரம். அப்போது நடந்த சம்பவங்களை சொல்ல ஒரு பதிவு போதாது.

வருடா வருடம் ராதாரவி மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் அய்யப்பன் கோவிலுக்கு போக  மாலை போட்டு விரதம் இருப்பார்கள். எம்.ஆர்.ராதா அவர்கள் தி.க. ஆதரவாளராக இருந்தாலும் பிள்ளைகளின் நம்பிக்கையில் குறுக்கிட மாட்டார்.

ஒரு முறை வீரமணி தவிர மற்ற அனைவரும் மாலை போட்டு கறுப்பு உடை அணிந்து இருந்தார்கள். சாதாரண உடையில் இருந்த வீரமணியைப் பார்த்து “ஏன்டா நீ கோயிலுக்கு போகலையா..?” என்று கேட்டார் எம்.ஆர்.ராதா . “ இல்லை… இந்தத் தடவை அய்யப்பன் என்னைக் கூப்பிடலை “ என்றார் வீரமணி.

“ஓஹோ.. மத்தவங்களுக்கு எல்லாம் அய்யப்பன் லெட்டர் போட்டாரு. உனக்கு மட்டும் போடலையா..?” என்று கேட்டாராம் எம்.ஆர்.ராதா. இதைச் சொல்லி நாங்கள் சிரிக்காத நாள் இல்லை.

வீரமணியின் உயரம், உடலசைவு எல்லாமே நடிகர் நாகேஷை போல இருக்கும். திரு.நாகேஷ் அவர்கள் மிகவும் பிசியாக இருந்த நேரம். ஒரே நாளில் மூன்று படப்பிடிப்பிற்குப் போவார். அவர் வரும்வரை மற்ற படப்பிடிப்பில் நாகேஷுக்கு டூப் நடிகராக வீரமணி நடிப்பார். பேர் வராவிட்டாலும் நல்ல வருமானம். ஆனால் சுற்றி இருந்தவர்களால் ஏமாற்றப்பட்டு அனைத்தையும் இழந்து விட்டார்.

நாகேஷுக்கு டூப் போட்டு நடிக்கும்போதுதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், செல்வி ஜெயலலிதா, ஜெய்சங்கர் போன்றோரிடம் வீரமணிக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர். அவர்களின் படம் ஒன்று. பெயர் ஞாபகம் இல்லை. தனக்கு தரப்பட்ட ஊதியம் குறைவு என்று வீரமணிக்கு தோன்றியது. வழக்கமாக எல்லோருமே அந்த கம்பெனி மேனேஜரிடம்தான் அது குறித்துப் பேசுவார்கள். ஆனால் வீரமணி நேரே எம்.ஜி.ஆர். அவர்களிடம் போய் கோபமாய் முறையிட்டு இருக்கிறார்.

அதை வீரமணி இப்படி சொல்லுவார். “சத்யா ஸ்டூடியோவில எம்.ஜி.ஆருக்கு எதிரே கை நீட்டி கோபமா பேசுனேன். என்னை கட்டி அப்படியே அடையாறு ஆத்துல தூக்கிப் போட்டிருந்தாங்கன்னா ஏன்னு கேட்கக் கூட ஆள் இருந்திருக்காது. ஆனால் எம்.ஜி.ஆர். ஆள் அனுப்பி கூடுதலா பணம் வாங்கித் தந்தாரு.. அது மட்டும் இல்லை அவரோட அடுத்த படத்தில நல்ல வேஷமும் தந்தாரு…”

இதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வைத் துவக்கியபோது வீரமணி,  அதில் உறுப்பினராகி எம்.ஜி.ஆர். உயிருடன் இருக்கும்வரையிலும் அந்தக் கட்சியில்தான் இருந்தார்.

பின்னாளில் சிவாஜி அவர்கள் கட்சி ஆரம்பித்தபோது அதில் இணைந்தார். எனக்குத் தெரிந்து அந்தக் கட்சியின் கொடியை சைக்கிளில் கட்டிக் கொண்டு ஸ்டூடியோ, ஸ்டூடியோவாக சுற்றித் திரிந்தது வீரமணி மட்டுமே. சிவாஜியுடன் வீரமணி அவன்தான் மனிதன்’ படத்தில் நடித்தபோது நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தை இங்கு சொல்ல முடியாது. அது எங்களுக்கான நினைவுப் பதிவு மட்டுமே.

ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரம்.  அவரது கட்சியின் அமைச்சர்களே அவரை நேரே பார்த்துப் பேச அஞ்சுவார்கள். வீரமணி தன் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை ஏற்பாடு செய்துவிட்டு அந்த விழாவிற்கான அழைப்பிதழை தருவதற்காக போயஸ் கார்டனுக்கு போய் இருக்கிறார்.

வாசலில் தான் ஒரு நடிகர்.. அம்மாவுக்குத் தெரிந்தவர் என்று சொன்னதால், அவரை உள்ளே வரவேற்பறைக்கு அனுப்பி இருக்கிறார்கள். அங்கிருந்த உதவியாளர், வீரமணி யார் என்பதை கேட்டுக் கொண்டு உள்ளே யாருடனோ இண்டர்காமில் பேசினார்.

பின்னர் வீரமணியிடம், ”மேடம் அந்த இன்விடேஷனை இங்க தந்திட்டு போக சொன்னாங்க…“ என்று சொன்னார். உடனே வீரமணி, “அவங்களால வாங்கிக்க முடியலைனா பரவாயில்லை.. கொடுத்தா அவங்ககிட்டதான் கொடுப்பேன். உங்ககிட்ட தர்றதுக்காக நான் வரலை“ என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டார்.

உதவியாளருக்கு ஒன்றும் புரியவில்லை. பார்க்க சாதரணமா இருக்கிற இந்த ஆளு அம்மா வீட்டுக்குள்ளேயே வந்து இவ்வுளவு கோபமா பேசுறாரேன்னு, யோசிச்சிக்கிட்டு இருக்கும்போது, ஜெயலலிதா அவர்கள் இண்டர்காமில் தன் உதவியாளரை கூப்பிட்டு வீரமணியை அழைத்து வரும்படி சொல்கிறார்.

நடந்ததை எல்லாம் அவர் cctv மூலமாக பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். உள்ளே அழைத்து வரப்பட்ட வீரமணியிடம் பத்திரிக்கையை வாங்கிக் கொள்கிறார்.  “நீங்க அவசியம் வரணும் அம்மா…“ என்று வீரமணி சொல்ல, “என்கிட்ட முன்னாடியே தேதி கேட்டீங்களா..? விழா அன்னைக்கு நான் சென்னையிலயே இல்லை. ஒரு முதலமைச்சருக்கு எவ்வுளவு வேலைங்க இருக்கும். முன்னாடியே சொல்லி இருந்த நான் ஒரு தேதி தந்திருப்பேன் இல்லையா.. சரி போங்க , அன்னைக்கு என் சார்பா விழாவுக்கு வருவாங்க” என்று சொன்னார் செல்வி ஜெயலலிதா.

அவர் சொன்னது போலவே விழா அன்று அவரது உதவியாளர்கள் விழாவிற்கு வந்து “அம்மா அனுப்புனாங்க” என்று சொல்லி  இரண்டு குத்து விளக்குகளை பரிசளித்துவிட்டுப் போனார்கள்.

ராதாரவியின் மகனுக்கு திருமணம். செல்வி ஜெயலலிதா அவர்கள் வந்திருந்து வாழ்த்திவிட்டு கிளம்புகிறார்கள். வாசலில் பலத்த செக்யூரிட்டி.. ஜெயலலிதா அவர்கள் காரில் ஏறப் போகும்போது சற்று தூரத்தில் கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டிருந்த வீரமணியைப் பார்த்து விடுகிறார்.

ஒரு சிறு புன்னகையுடன் “வீரமணி நல்லா இருக்கீங்களா?” என்று கேட்கிறார். வீரமணி மகிழ்ச்சியுடன் “நல்லா இருக்கேன்மா” என்று சொல்கிறார். பின்னர் ஜெயலலிதா புறப்பட்டு போய் விடுகிறார். ஜெயலலிதா அந்த திருமணத்திற்கு வந்ததைவிட வீரமணியை நலம் விசாரித்தது வைரலாகிப் போனது. அம்மாவை உங்களுக்கு அவ்வுளவு நல்லா தெரியுமா என்று கேட்காதவர்களே இல்லை.

வீரமணியைப் பொருத்தவரையில் அவர் எவ்வுளவுக்கு எவ்வுளவு கோபக்காரனோ அதே அளவு பாசமானவரும்கூட. அவரோடு பழகியவர்களுக்கு மட்டும்தான் இது தெரியும்.

இயக்குநர் மதுரை திருமாறன் என் தாய் வழியில் என் பெரியம்மா மகளை திருமணம் செய்து கொண்டவர். அப்பா தன் செலவில் நடத்தி வைத்த திருமணம். அவர் மிகப் பெரிய இயக்குநராகி, பின்னர் சொந்தப் படம் எடுத்து அனைத்தயும் இழந்து விட்டார். அவர் படங்களில் எல்லாம் வீரமணி நடித்து இருக்கிறார்.

மதுரை திருமாறன் அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவரது சொத்துக்கள் அனைத்தும் கடனுக்கு ஈடாகப் போய்விட்டன. அவர் குடும்பம் கஷ்டப்படுவதை காணப் பொறுக்காத வீரமணி தனக்குத் தெரிந்த, திரை உலகத்தினரை விடாமல் தொந்தரவு செய்து அவர்களிடம் நன்கொடை பெற்று, அந்தக் குடும்பத்திற்கு மாதா மாதம் ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வழி செய்து தந்தார்.

விஜயகாந்த் சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்த காலத்தில் இருந்து அவரை வீரமணிக்கு தெரியும்.  அவர் மிகப் பெரிய நடிகராக ஆன பிறகு நடந்த ஒரு நிகழ்வு.

விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்க வீரமணியை அழைத்து சென்றார்கள். வீரமணி மேக்கப் போட்டு ரெடியாகி செட்டுக்கு வந்தபோது ,அவரைப் பார்த்த விஜயகாந்த் அவரை கிண்டல் செய்ய எண்னி, ”இந்த பாத்திரத்தை வீரமணி அண்ணன் செஞ்சிருவாரா.. அவர் பிலிம் சாப்பிடுவாரே…(அதாவது அதிக டேக்ஸ் வங்குவார் என்பதை அப்படி சொன்னார்) இது வீரமணிக்கு கேட்டுவிட்டது.  

அது விஜயகாந்த் படம், அவர் அப்போது மிகப் பெரிய கதாநாயகன் என்பதை எல்லாம் பார்க்காமல் நேரே விஜகாந்திடம் போய், “விஜி உன்னை அத்தனை வருஷமா பாக்கிறேன், என்னைக்காவது உங்கிட்ட வந்து எனக்கு வேஷம் தா அப்படீனு கேட்டு இருக்கேனா..? நீ வேஷம் குடுத்து பிழைக்கிற அளவுக்கு நான் அவ்வுளவு மானம் கெட்டு போகலை. பிலிம் சாப்பிடுறவனு சொன்னியே, உன் படத்துல எதிலயாவது நான் நடிச்சு இருக்கேனா..?“ என்று பலவாறாக சத்தம் போட்டுவிட்டு நான் நடிக்க மாட்டேன்’ என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டார்.

சுற்றி இருந்தவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி. டைரக்டர்களே விஜயகாந்த்கிட்ட அப்படி பேச மாட்டாங்க. இந்த ஆள் இப்படி தைரியமா பேசுறானே.. கேப்டனுக்கு கோவம் வந்தா என்ன ஆகும்? என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்திவிட்டார்கள்.

ஆனால். விஜயகாந்த் நேரே வீரமணியிடம் போய், அவரை அணைத்துக் கொண்டு “கோவிச்சுக்காதீங்க.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்…” என்று சமாதானம் செய்து அழைத்து வந்தார்.

தலித் எழில்மலை என்ற மத்திய மந்திரி ஒருவர், தாம்பரம் பகுதியில் குடியிருந்தார். அவர் வீட்டுக்கு அருகில் ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சத்யராஜ், நெப்போலியன் நடித்த படம். அதில் நடிக்க காலையில் தனது ஸ்கூட்டரில் வீரமணி போய்க் கொண்டிருந்தார்.

தலித் எழில்மலை அவர்களின் வீட்டருகே வந்தபோது வீரமணிக்கு போன் வர, அவர் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு போனில் பேசிக்கொண்டு இருந்தார். தலித் எழில்மலை அவர்களின் மகள், மாடியில் இருந்து இதைப் பார்த்துவிட்டு, “இது மத்திய அமைச்சரின் வீடு.. தள்ளிப் போய் பேசு“ என்று சற்று மரியாதைக் குறைவாக பேச, வீரமணியும் திருப்பி பேச, அது சண்டையாகி, தலித் எழில்மலையின் ஆட்கள் வீரமணியை நன்றாக அடித்துவிட்டார்கள்.

இதைக் கேள்விப்பட்டதும், படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ், நெப்போலியன் எல்லோரும் அங்கு வந்து சத்தம் போட்டு சண்டைக்கு போக, ஒரு பெரிய கலவரம் நடக்க இருக்கிறது என்ற அளவிற்கு போய்விட்டது. விஜயகாந்த், ராதாரவி எல்லோரும் களத்தில் குதிக்க, கடைசியில், அந்தப் பெண் மன்னிப்பு கேட்டார். அத்துடன் அது முடிந்து விட்டது.

ஒரு நல்ல நண்பரை நான் இழந்துவிட்டேன். ஆனால் இது போன்ற அவரது நினைவுகள் என்றும் என்னுடன் இருக்கும்…” என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாதுரை கண்ணதாசன்.

 
Our Score