‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் லீக்கானது..!

‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் லீக்கானது..!

திருப்பதி பிரதர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில், இயக்குநர் லிங்குசாமி, மற்றும் அவரது தம்பியான சுபாஷ் சந்திரபோஸ் இருவரின் தயாரிப்பில், பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதைக்கு, இயக்குனர் சீனு ராமசாமி திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் ‘இடம் பொருள் ஏவல்’.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் முதன்முதலாக இணையும் திரைப்படம் இதுவென்பது இப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.

திரை ஆர்வலர்கள் மத்தியிலும், இசைப் பிரியர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த கூட்டணியின் பாடல்களை வருகிற 18-ம் தேதி வெளியிடலாம் என முடிவு செய்து, அதற்குரிய ஏற்பாடுகளில் பட நிறுவனம் இறங்கியிருந்தது.

இந்த நிலையில் இணையத்தில் திருட்டுத்தனமாக இப்படத்தின் பாடல்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகத் துவங்கின. இதைத் தடுத்து நிறுத்த முனைந்து அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்குள், எல்லா தளங்களிலும் இந்தப் படத்தின் பாடல்கள் இலவச தரவிறக்கத்திற்கு கிடைக்கத் துவங்கின. இசை ரசிகர்களும் அந்த தளங்களில் இருந்து பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்கத் துவங்கியுள்ளனர்.

18-ம் தேதி வெளியாக வேண்டிய பாடல்கள், ஒரு வாரத்திற்கு முன்பே இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால், தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் உள்ளிட்ட படக் குழுவினர் வருத்தத்திலும் அதிர்ச்சியிலும் உள்ளனர்.

இது குறித்து இயக்குனர் சீனு ராமசாமியிடம் கேட்டபோது, “முதன்முறையாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், கவிஞர் வைரமுத்துவும் இணையும் படம் இது என்பதால், இருவரின் ரசிகர்கள் மத்தியிலும் பொதுவான திரை ஆர்வலர்கள் மத்தியிலும் படத்தின் பாடல்கள் குறித்த பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக வந்துள்ளன. அதனை டிசம்பர் 18-ம் தேதி, அனைவர் முன்னிலையிலும் வெளியிடலாம் என்ற திட்டத்தில் அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபட்டு வந்தோம்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் பாடல்கள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். வேறு எந்த தொழிலும் திரைத்துறையில் இருக்குமளவிற்கு பாதுகாப்பற்ற தன்மையுடன் இருக்குமா என்று தெரியவில்லை. மொத்தத் துறையும் ஒரு முறையான, முழுமையான, பாதுகாப்பற்ற சூழலிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது.

யார் மூலம், எப்படி இந்த பாடல்கள் இணையத்தில் வெளியாகின என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் மிகுந்த சிரத்தையெடுத்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு இப்படி திருட்டுத்தனமாக மக்களை சென்றடைந்தது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தையும் மன உளைச்சலையும் தருகிறது.

‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது’ என்பார்கள். ஆனால் இங்கே எங்களுக்கு நிலம்கூட மிஞ்சாத நிலை உள்ளது. இதனை தடுப்பதற்கான வலிமையான முறைகளை விரைந்து உருவாக்க வேண்டிய தேவையும், அவசரமும் உள்ளது. ஆனால் அனைவரும் இந்த நிலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது..” என்று தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

மேலும், “இடம் பொருள் ஏவல் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் விரைவில் படம் திரைக்கு வரும்..” என்றும் அவர் தெரிவித்தார்.   

Our Score