ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘செம்பருத்தி’. இந்தத் தொடரில் நாயகன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். ‘செம்பருத்தி’ சீரியல் தமிழகத்தில் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானதால் கார்த்திக் ராஜூம் பிரபலமாகிவிட்டார்.
இந்த நிலையில் சென்ற ஆண்டு திடீரென ‘செம்பருத்தி’ தொடரிலிருந்து கார்த்திக் ராஜ் நீக்கப்படுவதாகவும் அவருக்குப் பதிலாக வேறொருவர் நடிப்பார் என்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதற்கான காரணம் என்னவென்று ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனம், கார்த்திக் ராஜ் இருவருமே இதுவரையிலும் பகிரங்கமாக சொல்லவில்லை.
இந்தத் தொடரில் இருந்து வெளியேறிய பிறகு கார்த்திக் ராஜ் எந்தவொரு தொலைக்காட்சித் தொடரிலும் நடிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை கார்த்திக் ராஜ் வெளியிட்டு இது குறித்துப் பேசியுள்ளார்.
அதில் “இந்த வீடியோவில் நான் என்னுடைய அடுத்த ‘புராஜெக்ட்’ குறித்துப் பேச வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. காரணம் என்னைச் சிலர் எந்த வேலையையும் செய்ய விடாமல் தடுக்கின்றனர். எனக்கெதிராக அரசியல் செய்து கொண்டிருகிறார்கள்.
சிலர் பலவித மறைமுக வேலைகளைச் செய்து நான் திரைப்படங்களில் நடிக்க முடியாதபடி செய்துவிட்டனர். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் ‘உன்னால் முடிந்தால் ஒரு சினிமாவிலாவது நடித்துக் காட்டு’ என்று சவால் விடுகிறார்கள்.
ரசிகர்களாகிய உங்களது ஆதரவு இருந்தால், கண்டிப்பாக நான் படங்களில் நடிக்க முடியும். அந்த நம்பிக்கையில் கே ஸ்டுடியோஸ் என்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். எனது முதல் படத்தினை அதன் மூலமாகத்தான் தயாரிக்க இருக்கிறேன்.
பெரிதாக முதலீடு செய்து பெரிய படம் எடுக்கும் அளவுக்கு எனக்குப் பின்னணி இல்லை. என் வாழ்க்கையில் இதுவரை எல்லாச் சூழ்நிலைகளிலும் எனக்கு ஆதரவாக இருந்தது நீங்கள் மட்டும்தான். இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதில்லை. இப்போது முதல்முறையாகக் கேட்கிறேன்.
சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, உங்களால் எவ்வளவு தொகை முடியுமோ அதை எனக்கு அனுப்புங்கள். நீங்கள் ஆதரவளித்தால்தான் இது முடியும்…” என்று அந்த வீடியோவில் பேசியிருக்கிறார் கார்த்திக் ராஜ்.
அத்துடன் தனது வங்கிக் கணக்கு விவரங்களையும் அந்த வீடியோவில் கார்த்திக் ராஜ் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக யாருடனாவது கூட்டு சேர்ந்து படத்தைத் தயாரிப்பாளர்கள். அல்லது கிரவுட் பண்டிங் என்று சொல்லி பல நபர்கள் ஒன்று சேர்ந்து படத்தினைத் தயாரிப்பாளர்கள்.
ஆனால், இப்போது சற்று வித்தியாசமாக ரசிகர், ரசிகைகளிடையே நன்கொடையாகப் பெற்று அதில் நான் நடிக்கப் போகிறேன் என்று ஒரு நடிகர் சொல்வது ஆச்சரியமாகத்தான் உள்ளது.