ஐ – சினிமா விமர்சனம்

ஐ – சினிமா விமர்சனம்

கிட்டத்தட்ட 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்த படம். இயக்குநர் ஷங்கர் மற்றும் விக்ரம் நடித்த படங்களிலேயே அதிக எதிர்பார்ப்பில் ஏங்க வைத்த படம். ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் அதிக பொருட்செலவை இழுத்து வைத்த படம்.. இப்படி பலவைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த அளவுக்கு எதிர்பார்ப்பை கொண்டிருந்த இந்தப் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் கிராக்ஜாக் டிவி விளம்பரம் போலவே ‘பிப்டி பிப்டி’ என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

அர்னால்டு பெயரில் ஜிம் நடத்தி வருகிறார் விக்ரம் என்ற லிங்கேசன். அவருக்கு பாடி பில்டிங்கில் அளவு கடந்த ஆர்வம். ‘மிஸ்டர் தமிழ்நாடு’ என்ற பாடி பில்டிங்கின் மிகப் பெரிய பட்டத்தை பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

தினமும் காலையில் எழுந்தவுடன் முளைவிட்ட மொச்சப் பயிறு.. வெறும் காய்கறிகள்.. ஸ்பூனில் அளவோடு குடிக்கும் தண்ணீர்.. மதியம் மட்டுமே கோழிக்கறி என்று அந்த பாடி பில்டிங்கிற்கு தேவையான அளவுக்கு உணவுப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் விக்ரம்.

இவருக்குள்ளும் ஒரு அணையா தீயாக இருக்கிறது ஒரு தலைக் காதல். தியா என்ற எமி ஜாக்சன் மீது தீராத காதல் கொண்டிருக்கிறார். இந்தியாவின் பிரபல மாடலான தியா சானிட்டரி நாப்கின் முதல் செருப்பு வரையிலும் பல பிராண்டுகளுக்கு மாடலிங் செய்து வருகிறார். எமியின் விளம்பரப் புகைப்படங்களையெல்லாம் பழைய பேப்பர் கடைகளில் இருந்து வாங்கி சேகரிக்கும் அளவுக்கு விக்ரமுக்கு காதல் முற்றிப் போயிருக்கிறது.

மிகுந்த கஷ்டத்துக்கிடையில் ‘மிஸ்டர் தமிழ்நாடு’ பட்டத்தை வெல்கிறார் விக்ரம். ஒரு விளம்பரப் படத்தில் ச்சும்மா துணை கேரக்டரில் நிற்கவும் வாய்ப்பு வருகிறது. அந்த விளம்பரத்தில் நடிக்க எமி வருவதால் விக்ரம் ஓடோடிச் செல்கிறார். அங்கே எமியுடன் சந்திப்பு நிகழ்கிறது செல்பி புகைப்படங்கள் சின்ன செல்போனில் ஏறி ஒரு டூயட்டுக்கு வழி வகுக்கிறது.

எமிக்கு எப்போதும் ஒரு பிரச்சினை. உடன் நடிக்கும் பிரபல ஆண் மாடலான உபேன் பட்டேல் எமிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறான். தனக்கு இணங்கிப் போகுமாறு வற்புறுத்துகிறான். மிகப் பெரிய கோடீஸ்வரியான எமி இதற்கு மறுக்க.. எமிக்கு வாய்ப்புகள் கையை விட்டுப் போகின்றன. தன் கண் முன்பாகவே தனது மாடலிங் கேரியர் பறிபோவதை பார்த்து கலக்கமடையும் எமி, சீனாவில் அடுத்து நடக்கப் போகும் மிகப் பெரிய மாடலிங் கான்ட்ராக்டை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்.

இதற்காக உபேன் படேலை விட்டுவிட்டு வேறு மாடலை தேடுகிறார். கண்ணில் படுகிறார் விக்ரம். அவரை மாடலிங் கோ-ஆர்டினேட்டருக்கு அறிமுகப்படுத்திவைத்து அவரை சீனாவுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே நடக்கும் ஷூட்டிங்கில் விக்ரமுக்கு நடிப்பே வராமல் போக.. ஷூட்டிங் கேன்ஸலாகும் நிலைமை ஏற்படுகிறது.

விக்ரமுக்கு உண்மையான நடிப்பு வர வேண்டுமென்பதற்காக அவரை காதலிப்பதாக பொய் சொல்கிறார் எமி. இதை நம்பி விக்ரமும் உண்மையான நடிப்பையும், காதலையும் காட்ட.. இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி பின்னியெடுக்கிறது.

இதே நேரத்தில் எமியால் விக்ரமுக்கு மேக்கப்மேனாக அறிமுகப்படூத்தி வைக்கப்படும் திருநங்கையும் விக்ரமை விரும்புகிறார். டீப்பாக காதலிப்பதாக அவர் சொல்ல விக்ரம் அவரை உதாசீனப்படுத்துகிறார். இது அந்த திருநங்கைக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.

எமி காதலிப்பது போல் உன்னை ஏமாற்றுகிறாள் என்று திருநங்கை போட்டுக் கொடுக்க உண்மை தெரிந்து ஏமாற்றமாகிறார் விக்ரம். அப்படியிருந்தும் விக்ரம் திருநங்கை பக்கம் திரும்பாமல் இருக்கிறார். இதனால் இன்னும் கோபமான திருநங்கை உபேன் பட்டேலுக்கு தகவல் அனுப்ப.. உபேன் இந்தியாவில் இருந்தபடியே விக்ரமின் முகத்தைச் சிதைக்க ஆசீட் வீச ஆள் செட்டப் செய்கிறான். இதில் இருந்து தப்பிக்கும் விக்ரம் இதை யார் செய்தது என்று யோசிக்கிறார்.

விக்ரமின் தொடர்ச்சியான அப்பாவித்தனமான குணங்களில் ஈர்க்கப்படும் எமி, கடைசியில் உண்மையாகவே விக்ரமை காதலிக்கத் துவங்குகிறார். விக்ரமும் தான் ஆசைப்பட்ட எமியே கைக்குக் கிடைத்த சந்தோஷத்தில் இருக்க.. இருவரும் இணைந்து பல விளம்பரங்களுக்கு மாடலிங் செய்கிறார்கள். பணம் கொட்டோ, கொட்டொன்று கொட்டுகிறது.  ஈசிஆரில் மாட மாளிகை வாங்கி செட்டிலாகுகிறார் விக்ரம்.

விக்ரமுக்கும், எமிக்கும் நிச்சயத்தார்த்தம் நடக்கிறது. திருமணத்திற்கு நாள் குறித்து வைத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுக்கிறார் விக்ரம். அதில் நச்சுப் பொருள் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது என்று சொல்லி தன்னை வளர்த்த தொழிலதிபர் ராம்குமாரிடமே சொல்கிறார்.

விக்ரம் அந்த விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்துவிட்ட செய்தி மீடியாக்களில் பரவ.. அந்த குளிர்பான நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் அதிகரிக்கிறது. அந்த நிறுவனம் சீல் வைக்கப்படுகிறது. ஷேர் மார்க்கெட்டில் அதன் பங்குகளின் விலை குறைகிறது. அதன் உரிமையாளரான ராம்குமாருக்கு பலத்த நஷ்டம் ஏற்படுகிறது.

இப்போது ராம்குமார், திருநங்கை, உபேன் பட்டேல் மூவருமே விக்ரம் மீது கொலை வெறியில் இருக்கிறார்கள். இவர்களுடன் நான்காவதாக ஒருவர் வந்து சேர்கிறார். அவர் எமியின் குடும்ப நண்பராகவும், டாக்டராகவும் இருக்கும் சுரேஷ் கோபி. வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் சிறு வயதில் இருந்தே எமியை மிகவும் விரும்பியிருக்கும் சுரேஷ்கோபி தான் நேசித்த எமியை விக்ரம் திருமணம் செய்யப் போவதால் அவர் மீது கோபத்தில் இருக்கிறார்.

இவர்களது சதியாலோசனை விரிகிறது. “கை, காலை வெட்டி வீட்டில் படுக்க வைத்துவிடலாமா?” என்கிறார் உபேன். “அதுக்கும் மேல..” என்கிறார் டாக்டர். “கொலை செய்திரலாமா..?” என்கிறார் ராம்குமார். “அதுக்கும் மேல..” என்கிறார் டாக்டர். “மூஞ்சில ஆசிட் வீசிரலாமா..?” என்கிறார் திருநங்கை. “அதுக்கும் மேல..” என்கிறார் டாக்டர். கடைசியாக அந்த ‘அதுக்கும் மேல’ என்பதற்கான விளக்கத்தை அவரே சொல்கிறார்.

அதன்படி சுவிட்சர்லாந்தில் இருந்து அதிபயங்கர ‘ஐ’ என்ற வைரஸ் கிருமியை ராம்குமார் மூலமாக வரவழைத்து அதனை விக்ரமின் உடம்பில் செலுத்துகிறார்கள். அது விக்ரமை கூனனாக்கி, உடம்பெல்லாம் வீங்க வைத்து, முடியைக் கொட்ட வைத்து, முக அழகை சிதைத்து.. அலங்கோலமாக்கிவிடுகிறது.

ஏதோ எதிர்பாராத ஒரு மருத்துவ நோயினால் தான் பாதிக்கப்பட்டதாக முதலில் நம்பும் விக்ரம் பின்பு வேறொரு மருத்துவரால் தான் திட்டமிட்டு இப்படியொரு நிலைமைக்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை உணர்கிறார். தன்னை இந்தக் கதிக்கு ஆளானவர்களை பழிக்குப் பழியாக என்ன செய்கிறார் என்பதும், எமியுடனான அவரது காதல் என்னவானது என்பதுதும்தான் இந்த 2 மணி 53 நிமிட படத்தின் கதை.

இந்தப் படத்திற்கு நிச்சயமாக ‘டபுள் ஏ’ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும். ஏன் ‘யு/ஏ’ கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. விக்ரமின் முக மாற்றம், உடல் மாற்றம், தோற்றப் பொலிவு போன்றவை குழந்தைகளை நிச்சயமாக தொந்தரவு செய்யும். கூடவே இவரால் நவீன கருட புராணத்தின்படி தண்டிக்கப்படும் அந்த நால்வரும் கடைசியில் இருக்கும் தோற்றமும் நிச்சயம் பெரியவர்களாலேயே சட்டென ஜீரணிக்க முடியாது. இதை எப்படி குழந்தைகள் நல்லவிதமாக புரிந்து கொள்வார்கள்? சென்சார் போர்டின் விதிமுறைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இந்தப் படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கேட்டு போராடிய தயாரிப்பாளரை நாம் என்னவென்று சொல்வது..?

இது மட்டுமல்ல.. படத்தில் ஆபாசத்தின் எல்லையைத் தொடும் பல காட்சிகளும் உண்டு. எமி ஜாக்சன் அறிமுகமாகும் முதல் ஷாட்டின் நடன அசைவே அப்படித்தான் இருக்கிறது. மாடலிங் பாடல் காட்சிகள் முழுவதுமே அக்கிரமம்தான்.

சானிட்டரி நாப்கின் மற்றும் பெண்கள் அணியும் உள்ளாடைகளை விக்ரமின் அம்மாவிடமே காட்டி, ‘இதை வைச்சு உன் பையன் என்ன பண்ணப் போறான்?’ என்று கேட்கிறார் சந்தானம். அந்த அம்மாவோ உள்ளாடையை மட்டும் கேட்கிறார். “எதற்கு..?” என்று சந்தானம் கேட்க “இட்லி சுட யூஸ் பண்ணிக்கிறேன்..” என்கிறார். “ஏற்கெனவே குஷ்பு இட்லி இருக்கு. இப்போ இதா..?” என்கிறார் சந்தானம்.. மேலும் சுரேஷ்கோபி, எமியின் உள்ளாடையை எடுத்து பேண்ட் பாக்கெட்டில் திணித்துச் செல்லும் காட்சியும் அதிர்ச்சியானது. இதெல்லாம் கதைப்படி ஓகேதான். ஆனால் இதற்கு ‘யு’ சர்டிபிகேட் கேட்டால் எப்படி..?

திருநங்கைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இப்படித்தான். நாடு முழுவதிலும் இப்போதுதான் ‘அரவாணி’ என்கிற பெயரில் இருந்து ‘திருநங்கைகள்’ என்று நல்ல பெயர் கொடுத்து மரியாதை தரப்பட வேண்டும் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வரும் வேளையில் நன்கு படித்த, சிந்தனையுள்ள இயக்குநர் ஷங்கர் போன்றவர்கள் காமெடி என்ற பெயரில் அதைச் சிதைப்பது வருந்தத்தக்கது.

இன்றைக்கு மாடலிங் மற்றும் மேக்கப் கலைகளில் திருநங்கைகள்தான் அதிகம் பேர் உள்ளனர். நயன்தாரா, அனுஷ்கா, ஷகிலா ஆகியோரிடம்கூட திருநங்கைகள்தான் மேக்கப்மேனாக இருக்கிறார்கள். விக்ரமுக்கு மேக்கப் செய்ய வரும் திருநங்கை விக்ரமை பார்த்தவுடன் காதல் கொள்கிறார் என்றும் அவரது காதல் வேட்கையை சில காட்சிகள் மூலமாக காட்ட முயன்றிருப்பதும் தவறாக இருக்கிறது. காட்சிகளில் இருப்பது காதல் அல்ல. காமம்.

இவைகளை சட்டென விட்டொழித்தால் கண் முன்னே நிற்பது விக்ரமின் அசராத உழைப்புதான். பாடி பில்டிங்கிற்காக அப்படியொரு உடம்பை உருவாக்கி பேணி காத்து.. பின்பு சட்டென்று மூன்றே மாதங்களில் அரை உடலாக காட்சி தரும் அந்த அகோரமெல்லாம் நடிப்புப் பசியின்றி வேறில்லை. சென்னை தமிழ் மட்டும் அவருக்கு ஒத்துழைக்கவில்லையே தவிர.. விக்ரமின் மீது ஒரு குறையுமில்லை.

காதலுடன் இருக்கிறாளே என்று நினைக்கும்போது அழைக்கும் ‘மேட’த்திற்கும் காதல் இல்லை என்ற போதும் ‘மேடம்’.. என்ற உச்சரிப்பில் காட்டும் விரக்தியையும் புரிய முடிகிறது.. முகம் கோரமான நிலையில் தனது பழைய காதலை நினைத்து உருகும்போது அந்த முகத்தில் எதைப் பார்ப்பது என்கிற பயவுணர்வே வருகிறது. ஆனாலும் கோவில் வாசலில் தன் கையில் ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு செல்லும் எமியை நினைத்து ஒரு பார்வை பார்க்கிறாரே.. அதுவொன்று போதும்.. செம ஆக்சன்..

சுரேஷ்கோபி சொல்லும் ‘அதுக்கும் மேல’ என்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட விக்ரம் சொல்லும் ‘அதுக்கும் மேல’தான் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டது.. ‘என்னருகில் நீ இருந்தால்’ பாடல் காட்சிகளிலும் வேறுவிதமான மேக்கப்புடன் அவர் செய்திருக்கும் அந்த நடிப்பு வித்தையை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.. ஷங்கருக்கு தோள் கொடுக்க விக்ரம்தான் மிகச் சரியான ஆள்.

படத்தின் பாதி காட்சிகளை நகர்த்துவதே காமெடிகள்தான்.. கட் டூ பிளாஷ்பேக் காட்சிகளாக திரைக்கதையை அமைத்திருப்பதால் நகைச்சுவை சாத்தியமாகிவிட்டது இயக்குநருக்கு. சந்தானம் – பவர்ஸ்டார் கூட்டணி முதல் அரை மணி நேரத்தில் வயிற்றை பதம் பார்க்கிறது. சந்தானம் இன்னமும் சக மனிதர்களை கிண்டலடித்து காமெடியாக்கும் வித்தையை கைவிடவில்லை போலும். இதற்கு ஒத்து போகும் பவர்ஸ்டார் கடைசியாக சொல்லியிருக்கும், ‘நீங்க எவ்ளோதான் என்னை கேவலப்படுத்தினாலும் நான் மேல மேல உயர்ந்துக்கிட்டேதான் போவேன்’ என்பது அவருக்கு பொருத்தமானதுதான்..!

சுரேஷ்கோபி எப்படி இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டாரென்று தெரியவில்லை. மலையாளத்தில் அவர் நடித்திருப்பதில் கால்வாசிகூட இங்கே இல்லை. பெரிய ஸ்கோப்பும் இல்லாமலேயே அவரது கேரக்டரை முடித்திருக்கிறார்கள். உபேன் பட்டேல்தான் இருக்கின்ற வில்லன்களில் உருப்படியாகத் தெரிந்தவர். சிவாஜி ராம்குமார் மிக நீண்ட வருடங்கள் கழித்து மேக்கப் போட்டிருக்கிறார். கடைசியில் இப்படியாகிவிட்டதே..? ஆனாலும் ஒன்று.. ‘சரி.. போ நான் பார்த்துக்குறேன்’ என்று வெறுப்புடன் விக்ரமிடம் சொல்லும் அந்தக் காட்சியில் மட்டும் நடிகர் ராம்குமார் தனியாகத் தெரிகிறார். நல்ல அழுத்தமான நடிப்பு இந்தக் காட்சியில்.

எமி ஜாக்சன் மாடலிங்கிற்கு ஏற்ற முகம். லிப் லாக் வைப்பதற்கு மறுக்காமல் ஒத்துக் கொள்ளும் நடிகை. அதனால்தான் நடிக்க வைத்திருக்கிறார்கள் போலும். தன்னை விக்ரம் கடத்தி வந்து வைத்திருக்கும் காட்சியொன்றில் உருக்கமாக நடித்திருக்கிறார். மாடலிங் கோ-ஆர்டினேட்டர் மாயாவிடம் தன்னிலையை விளக்கும் காட்சியிலும் அதே போல.

அற்புதமாக காட்சிகளை வரைந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இந்தப் படத்தை டிஜிட்டலில் செய்யாமல் ஃபிலிமிலேயே பதிவாக்கியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் அது தெரியவில்லை. டிஜிட்டலிலேயே பார்த்து சலித்துப் போயிருந்த கண்களுக்கு புதுமையான ஒரு அனுபவம் இந்தப் படம். சீனாவில் படமாக்கப்பட்ட அனைத்துக் காட்சிகளுமே கொள்ளை அழகு. அந்தப் பூக்களுடன் கூடிய காட்சிகளில் நடிகர்களைவிடவும சுற்றுப்புறத்தையே கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. எத்தனை, எத்தனை புதிய கேமிராமேன்கள் வந்தாலும் கை தட்டல் வாங்கிய முதல் ஆள் நான்தான் என்பதை இப்போதும் நிரூபித்திருக்கிறார் பி.சி. ஸார்..

சண்டை காட்சிகளில் இருக்கின்ற அத்தனை சினிமா டெக்னிக்கலையும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். சீனாவில் நடக்கும் சண்டைகள் அந்நாட்டு படங்களில் மட்டுமே பார்த்திருக்கக் கூடியது. பாடி பில்டிங் போட்டியின்போது நடக்கும் சண்டைகளும் காதில் பூச்சுற்றியதுதான்.. அதேபோல உபேன் பட்டேலுடன் ஓடும் ரயிலில் மோதும் காட்சியும் அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அநியாயத்திற்கு நீளமாக இருக்கின்றன. இவைகளில் கத்திரியை போட்டிருக்கலாம்.

பெரிதும் ஏமாற்றிய இசையைப் பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் அவர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன், யேசுதாஸ், மனோ இவர்களிடத்தில் இருப்பது ஒரு கவன ஈர்ப்பு குரல். எங்கே, எந்த இடத்தில் ஒலித்தாலும் இசையையும் தாண்டி அவர்களது குரல் வசீகரிக்கும். திரும்பிப் பார்க்க வைக்கும்.

ஆனால் இப்போது ஒலிக்கின்ற ஆண் குரல்களும் பெண் குரல்களும் ஏதோவாகவே இருக்கிறதே தவிர, ஈர்ப்பாக இல்லை. ‘என்னருகில் நீ இருந்தால்’ பாடலையும், ‘மெர்சலாயிட்டேன்’ பாடலையும் கேட்டுப் பாருங்கள். குரலா அது..? இசையில் அமிழ்ந்துபோய்விட்டது. குரலே இல்லையெனில் பாடல்கள் எப்படி மனப்பாடமாகும்..?

எஸ்.பி.பி.யும், மனோவும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவர்களாக இருக்கலாம். ஆனால் உயிரோட்டமான குரலோடு பாடலுக்கே உயிர் கொடுப்பவர்கள். இந்தப் பாடல்களை இவர்களுக்குத்தான் கொடுத்திருக்க வேண்டும். பாடலையாவது தனித்து கேட்க சந்தோஷமாயிருந்திருக்கும். அத்தனையும் வீணாகத்தான் இருக்கிறது.

பின்னணி இசையிலும் ஏனோதானாவென்றுதான் இசைத்திருக்கிறார் இசைப்புயல். விக்ரமின் பழி வாங்கும் காட்சிகளில்லாம் வரும் இசையைத் தவிர மிச்சம், மீதி இடங்களிலெல்லாம் அந்தக் காலத்து இசை.. ஏதோ இருக்கிறது என்கிற ரீதியில்தான் இசைத்திருக்கிறார். ஷங்கர் எப்படி விட்டாரென்று தெரியவில்லை..!? ரொம்ப ஏமாத்திட்டீங்க ரஹ்மான் ஸார்..!

இயக்குநர் ஷங்கர் ஒவ்வொரு படத்திலும் வில்லன்களுக்கு கொடுக்கும் விதவிதமான தண்டனை காட்சிகளுக்கு  ரொம்பமே மெனக்கெடுவார். இதிலும் அவருக்குக் கை கொடுத்திருப்பது மெடிக்கல் டிக்சனரி.

வெறும் எஃப்.ஆர்.சி.எஸ். படித்த மூத்த டாக்டர் ஒருவர் விக்ரமனுக்கு நடந்தவைகளை விளக்க… அவர் துணையுடனேயே தான் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் நால்வரின் கதையை தீர்மானிக்கிறார் விக்ரம். அந்தத் தீர்மானங்களெல்லாம் ஓஹோவாகத்தான் தெரிகிறது.

ஆனால் அடுத்தடுத்த காட்சிகளிலெல்லாம் ‘பிரஸ்’ என்கிற போர்வையில் சந்தானம் வந்து பேசும் பேச்சுக்களால் ‘சீரியஸ்’ என்ற தளத்தில் இருந்து ‘காமெடி’ என்ற தளத்திற்கு கொண்டு வந்துவிட்டதால் சட்டென அவைகள் மறந்து போகின்றன. படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட் இதுதான்.

விக்ரமின் இத்தனை பெரிய உழைப்பு… இயக்குநர் ஷங்கரின் திறமை, உழைப்பு இவையெல்லாம் சந்தானத்தின் அந்த கடைசிகட்ட காமெடியில் புஸ்ஸாகிப் போனது. ‘இவ்ளோ கஷ்டப்படுத்திட்டாங்களே.. இவனுகளுக்கு நல்லா வேணும்’ என்கிற வார்த்தையை பார்வையாளனிடத்தில் இருந்து வரவழைக்காமல் போனது இயக்குநரின் தவறுதான்.

எத்தனையோ கமர்ஷியல் படங்கள் வரும்போது இது அவற்றில் இருந்து மேலாக ‘அதுக்கும் மேல்’ என்று பேசப்படும் அளவுக்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் விக்ரமின் உடல் உழைப்பையும் தாண்டி மற்றவை போலவே இதுவும் ஒன்று, என்று சொல்லும் அளவுக்கு போனது திரைக்கதையின் விளைவு..!

 புதிய புதிய சிந்தனைகள்.. புதிய கதைக் கருக்கள்.. புதிய திரைக்கதை.. புதிய படமாக்கல்.. வித்தைகள் என்று பலவற்றையும் தனது ஒவ்வொரு படத்திலும் செய்துவரும் இயக்குநர் ஷங்கரை பொருத்தமட்டில் இது அவருக்கொரு வெற்றி படம்தான். ஆனால் மற்றவைகளில் இருக்கும்.. இருந்த.. ஏதோவொன்று இதில் மிஸ்ஸிங் ஆகியிருக்கிறது.

இயக்குநர் ஷங்கரின் அடுத்த படங்களில் ‘இதுக்கும் மேல’  ஒன்றை எதிர்பார்க்கிறோம்..!

Our Score