‘ஐ’ படம் அமோக வசூல்..!

‘ஐ’ படம் அமோக வசூல்..!

இந்த வருட பொங்கல் திரையுலகத்தினருக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. பொங்கல் தினத்தன்று வெளியான, ‘ஐ’, ‘ஆம்பள’, ‘டார்லிங்’ ஆகிய மூன்று படங்களுமே இதே வரிசைப்படி வெற்றியையும், வசூலையும் பெற்றிருக்கின்றன.

பொங்கல் விடுமுறை தினங்கள் தொடர்ச்சியாக 4 நாட்கள் வந்துவிட்டபடியால் இந்த 4 நாட்களும் 5 ஷோக்கள் நடத்தலாம் என்று தமிழக அரசும் அனுமதி அளித்த்தால் கூடுதலாக 5 காட்சிகள் கிடைத்த சந்தோஷத்தோடு வசூலையும் அள்ளியுள்ளன திரையரங்குகள்.

‘ஐ’ திரைப்படம் உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஷங்கர், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான் என்பதால் படம் எப்படி என்கிற கேள்விக்குறியே இல்லாமல் பார்த்தே தீருவோம் என்று கங்கணம் கட்டி பார்த்துள்ளார்கள் தமிழ்ச் சினிமா ரசிகர்கள்.

100 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ரிலீஸின்போதே போட்ட பணத்தை எடுத்துவிட்டது. இப்போது திரையரங்குகளில் அள்ளிய வசூல் முழுவதும் லாபம்தான்.

ஏனெனில் ‘ஐ’ படத்தில் இடம் பெற்ற விளம்பரப் படங்களின் மூலமாகவே அப்படத்தின் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் கிடைத்திருப்பதாக சினிமா துறையினர் கூறுகின்றனர். மேலும், ஜெயா டிவி ஐ படத்தின் சேனல் உரிமைக்காக இதுவரையில் எந்தப் படத்துக்கும் கொடுக்காத அளவுக்கு பெரிய தொகையை அளித்துள்ளதாம். ‘இத்தோடு படத்தின் பட்ஜெட் சரியாகிவிட்டது’ என்று ஷங்கர் அலுவலகப் பக்கமாக கோழி கூவுகிறார்கள்.

லிங்கா படத்திற்குக் கிடைத்த பிரச்சினைகளை பார்த்துவிட்டு ‘ஐ’ படத்தை விநியோகஸ்தர்களுக்கு தராமல் நேரடியாக தியேட்டர்களில் வெளியிட்டார்கள். இது சதவிகித அடிப்படையில்தான். ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு தியேட்டருக்கும் இத்தனை லட்சங்கள் மினிம்ம் கியாரண்டி தருவதாகச் சொல்லித்தான் தயாரிப்பாளர் தியேட்டரில் வெளியிட்டார். அத்தொகையை இந்த 4 நாட்களிலேயே பெற்றுவிட்டதாம் ‘ஐ’.

இதனால் இனிமேல் இன்றிலிருந்து ‘ஐ’ படத்திற்குக் கிடைக்கும் வசூலில் 70 சதவிகிதத்தை தயாரிப்பாளரும், 30 சதவிகிதத்தை தியேட்டர்காரர்களும் பங்கு பிரித்துக் கொள்ளவிருக்கிறார்கள். இந்த சதவிகிதத் தொகை அடுத்த வாரம் 60 : 40 என்று மாறும்.

‘ஐ’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் கடந்த 4 நாட்கள் வசூலாக 35 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல். விமர்சனங்கள், கருத்து பேதங்கள், படம் பற்றிய சர்ச்சைகள் இதையெல்லாம் தாண்டியும் படம் நான்கு நாட்களும் ஹவுஸ்புல்லானது ஆச்சரியம்தான். இதில் மேலும் அதிசயமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கிடைத்த வசூல், தமிழக வசூலையும் மிஞ்சிவிட்டதாம். அங்கே 40 கோடி வசூல் என்கிறார்கள். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இதுவரையில் 10 கோடியை தாண்டியது அவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கேரளாவில் 232 திரையரங்குகளில் எதிர்க்கும் படங்களே இல்லாமல் அன் ஆப்போஸ்ட்டாக ஐ ரிலீஸாகியுள்ளது. கடந்த 4 நாட்களில் 11 கோடியை சுருட்டியுள்ளது. கேரளாவில் இந்த அளவுக்கு வசூல் செய்த தமிழ்ப் படம் வேறில்லை என்கிறார்கள். உலக அளவில் பார்த்தால், அமெரிக்காவில்  10 கோடி, இதனைத் தவிர்த்த மற்ற நாடுகளில் 10 கோடியை சம்பாதித்திருக்கிறது.

‘ஐ’ படத்தின் இந்தி மொழியாக்கமும் ஹிட் என்கிறார்கள். வட இந்தியா முழுவதிலும் இருக்கும் மால்களில் ‘ஐ’ படம்தான் அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. ‘ஐ’ படத்தின் ஹிந்தி பிரிண்ட்டின் வசூல் இதன் மூலம் 10 கோடியைப் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தம் ‘ஐ’ படத்தின் இப்போதைய வசூல் 127 கோடியையும் தாண்டியிருக்கிறது. அநேகமாக ஆஸ்கர் பிலிம்ஸ் வரலாற்றில் மிக அதிக வசூலை வாரிக் குவித்திருக்கும் படம் இதுவே என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த 127 கோடியும் தயாரிப்பாளருக்கு லாபமான தொகைதான் என்பதில் சந்தேகமில்லை.

இந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் முதல் மாதமே கிடைத்திருப்பது தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் லக்குதான்..!  

Our Score