full screen background image

‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீ்டடு விழா – ஒரு முழுமையான தொகுப்பு..!

‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீ்டடு விழா – ஒரு முழுமையான தொகுப்பு..!

நேற்று மாலை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பற்றிய ஒரு சிறிய தொகுப்பு :

வழக்கம்போல ‘கார்களை 2 கிலோ மீட்டர் தள்ளி நிறுத்திவிட்டு வரவும்’ என்று சொல்லி புதிதாக வந்தவர்களின் வாயில் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டது போலீஸ்.

X பிளஸ்.. Y பிளஸ்.. Z பிளஸ் அரசியல்வாதிகள் யாரும் வராததால் அதிகமான போலீஸ் கெடுபிடிகள் இல்லை..

விக்ரமின் ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து டிக்கெட்டுகள் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தனர். யாராவது ஒருவர் கையில் டிக்கெட்டுகளுடன் நின்றிருந்தால் அருகில் சென்று கேட்கவும் தயங்கவில்லை..

மாலை 4.30 மணிக்கு நாம் உள்ளே நுழைந்தபோது மீடியாக்களை மட்டும் முதலில் உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்களில் பொதுமக்களும் அனுமதிக்கப்பட விசில் சப்தங்களும், கைதட்டலும் அவ்வப்போது எழும்பி அடங்கின.

மேடையை அப்போதுதான் கூட்டிப் பெருக்கி தண்ணி தெளித்து துடைத்துவிட்டுக் கொண்டிருந்தார்கள். வண்ண விளக்குகளை ஒளிரச் செய்து செக்கப்பும் செய்து கொண்டிருந்தார்கள்.

இது நேரு ஸ்டேடியத்தில் சஜகமான விஷயம். அரசு நடத்தும் விழாக்கள் என்றால் காலையிலேயே அனைத்தையும் முடிக்க வைத்துவிடுவார்கள். கலை விழாக்களுக்கு ஒரு நாள் முன்னதாக மட்டுமே ஸ்டேடியத்தை ஒப்படைப்பதால், மேடை அமைத்து இந்த செட்டிங்க்ஸ்களை அமைப்பதற்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தாவு தீர்ந்துவிடும்..

மேடைக்கு முன்பாக விருந்தினர்கள் அமர்வதற்காக ஒரு சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்த்து. அதில் 5 சோபாக்கள் போடப்பட்டிருந்தன. அவர்களது தலைக்குப் பின்னால் படத்தின் தலைப்பு பேனர் வடிவில் வைக்கப்பட்டிருந்த்து..!

முதல் வருகையை ராய் லட்சுமி பதிவு செய்தார். ஆனால் அவரை மேடைக்கு தொலைவிலேயே அமர வைத்தார்கள். பின்புதான் தெரிந்தது. அனைவருக்குமே அங்கேதான் இடமென்று..!

இதன் பின்பு சிவப்புக் கலர் சட்டையில் சிங்குச்சா சிங்குச்சா என்று உள்ளே வந்தார் பவர் ஸ்டார் சீனிவாசன். ஸ்டேடியமே அதிர்ந்தது.. ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.. நம்மூரில் சூப்பர் ஸ்டார்களும், காமெடியன்களும் ஒன்றுதான் போல..!

ரஜினி காரில் வந்து இறங்கியது ஸ்கிரீனில் தெரிய கூட்டம் ஆர்ப்பரித்தது. ஆனால் வந்தவரை அப்படியே ரெஸ்ட் ரூமில் அமர வைத்துவிட்டார்கள்.

லதா ரஜினி செளந்தர்யா, ஐஸ்வர்யாவுடன் வந்து சேர்ந்தார். இவரும் மேடைக்கு தொலைவிலேயே அமர வைக்கப்பட்டார்.

கேயார் உள்ளிட்ட சில சினிமா புள்ளிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த்தால் பல பெரிய தலைகளை பார்க்க முடியவில்லை..!

அமலாபால் தனது கணவர் விஜய்யுடன் வந்திருந்தார். மற்றபடி சினிமா பிரபலங்கள் விரல் விட்டு எண்ணிவிடக் கூடியவர்கள்தான் வந்திருந்தார்கள்.

இதோ வருகிறார்.. அதோ வருகிறார்.. என்று பில்டப் காட்டி கடைசியில் 7.30 மணிக்கு ரஜினியை அழைத்து வந்தார்கள். வழக்கம்போல கூட்டத்தோடு கூட்டமாக நசுங்கிய நிலையில் வந்து சேர்ந்தார் ரஜினி. அடுத்த சில நிமிடங்களுக்கு அரங்கத்தில் காது கிழிந்துவிட்டது என்பதும் உண்மை.

ரஜினி மேடையில் அமர்ந்த்தும் அவருடைய சினிமா டயலாக்குகள், மற்றும் அவரை வாழ்த்திய பாடல்கள் ஒளிபரப்பாக… மனிதர் மிக சுவாரஸ்யமாக அதை ரசித்தார். அடிக்கடி அவரையே ஸ்கிரீனில் காட்டிக் கொண்டிருந்ததால் கைதட்டல்கள் பறந்து கொண்டேயிருந்தன.

இவரைத் தொடர்ந்து கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் வந்து சேர்ந்தார்.

கிடைத்த இடைவெளியில் யாரோ பவர் ஸ்டாரை உசுப்பிவிட்டுவிட.. அவர் மேடையேறி ரஜினிக்கு கை கொடுத்துவிட்டு வந்தார்..

ரஜினிக்கும் பின்பேதான் இயக்குநர் ஷங்கர் வந்தார். ரஜினிக்குக் கிடைத்த அதே வரவேற்பு ஷங்கருக்கும்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஏ.கே.47 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு அரங்கத்திற்குள் நுழைந்தார்.

இப்படியொரு கைதட்டலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்.. உள்ளே வந்ததில் இருந்து மிக பிரமிப்போடு ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

ரஜினியோடு கை குலுக்கிவிட்டு ஷங்கரின் அருகில் அமர்ந்து கொண்டார்.

இவருடைய அருகில் அமர்ந்த அர்னால்டின் செயலாளரை நிகழ்ச்சியின் பி.ஆர்.ஓ. வேறு சீட்டில் அமரும்படி கேட்டுக் கொள்ள அவரும் ஜம்ப்பானார்.

மேடையைச் சுற்றி நின்று கொண்டிருந்த போலீஸையே கீழே இறங்கும்படியும், அவரவர்கள் ஸ்பாட்டிற்கு போய் நிற்கும்படியும் பாடகி சின்மயி கேட்டுக் கொள்ள.. நமக்கேன் வம்பு என்று சொல்லி போலீஸ் ஒதுங்கிக் கொண்டது..

அர்னால்டின் அருகில் இருந்த இன்னொரு சீட்டு யாருக்கோ காத்திருக்கும்வேளையில் நிகழ்ச்சிகள் 8 மணிக்கு 2 மணி நேர தாமதத்துடன் துவங்கியது..

சின்மயி மைக்கை பிடித்து தான்தான் காம்பயரிங் என்று சொல்லிவிட்டு துணைக்கு ‘அசால்ட்டு சேது’ சிம்ஹாவை அழைத்தார்.

சிம்ஹாவை வந்தவுடன் சின்மயி “என்ன ஷங்கர் ஸார் இங்கதான் இருக்கார்.. உங்களை வைச்சு படம் பண்ண கூப்பிடலையா..?” என்றார் சின்மயி.. “கூப்பிடணும்.. ரொம்ப தூரத்துல உக்காந்திருக்கார்.. பங்ஷன் முடிஞ்சவுடனே தூக்கிர்றேன்…” என்றார்

ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான ஸ்ரீதர் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த இடைவேளையில் இசையைமப்பாளர் ரகுமான் மேடைக்கு வந்து அர்னால்டின் அருகில் அமர்ந்தார்.

தெலுங்கு நடிகர் ராணா டகுபதி விழாவுக்கு வரவேயில்லை. ஆனால் வந்தாரோ என்று நினைக்குமளவுக்கு அவரது பெயரைச் சொல்லிச் சொல்லி அழைத்தார்கள்..

அதேபோல் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் விழாவுக்கு வரவில்லை. ஏனென்று தெரியவில்லை.

முதலில் ஆஸ்கர் பிலிம்ஸ் பற்றிய ஒரு வீடியோ காட்சி காட்டப்பட்டது.

அடுத்து விக்ரம் பற்றிய ஒரு வீடியோ காட்சியும் காட்டப்பட்டது. இதில் விக்ரமின் கதாபாத்திரங்கள் அனைத்தும் அழகாகத் தொகுக்கப்பட்டிருந்தன.

இப்போ விக்ரம் வருவார் என்று சின்மயி சொல்ல அனைவரும் இருட்டில் காத்திருந்தனர். ஆனால் நேரம் போனதுதான் மிச்சம்.. கடைசியில் ஏதோ டெக்னிக்கல் பிராப்ளம் என்றார்கள்.

இந்த நேரத்தில் பேசிய சின்மயி, “பாடி பில்டிங்’னாலே நாம எல்லாரும் அர்னால்டைத்தான் சொல்லுவோம். அதே மாதிரி இன்னொருத்தரும் அவருக்குப் போட்டியா நம்மகிட்ட இருக்காரு… அவர் யாரு தெரியுமா…? அவர்தாங்க நம்ம அனிருத்..” என்று கிண்டலடித்துவிட்டு அனிருத்தை பாட அழைத்தார்.

இந்தப் படத்தில் தான் பாடியிருந்த ‘மெர்சலாயிட்டேன்’ பாடலை மேடையின் உச்சத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையில் நின்றபடியே பயமில்லாமல் பாடினார் அனிருத். ஆனால் பாடல் வழக்கம்போல இரைச்சலுடன்தான் இருந்தது.

பாடி முடித்ததும் ரஹ்மான் இசையில் பாடிய அனுபவம் பற்றி சின்மயி அனிருத்திடம் கேள்வி கேட்டார். “மொதல்ல பயமாத்தான் இருந்தது, அப்புறம் ரஹ்மான் ஸார் ரொம்ப பிரெண்ட்லியா பேசி என்னன்னு சொன்னார். அதுனால டென்ஷன் இல்லாம ஜாலியா பாடி முடிச்சேன். ரஹ்மான் என்னை அவரோட மகன் போல பார்த்துக்கிட்டாரு. ரொம்ப பெருமையா இருந்துச்சு.. ரஹ்மான் ஸார் தேங்ஸ்..” என்று அனிருத் சொல்ல.. மேடையில் இருந்த ரஹ்மான் சிரித்துக் கொண்டார்.

இப்படியே விட்டிருந்தால் பரவாயில்லை.. மைக்கை பிடித்துக் கொண்டு மேடைக்குக் கீழாக இறங்கிய சின்மயி காம்பயிரிங் செய்ய ஆரம்பிக்க போச்சுடா.. முடியறதுக்கு 11-ஐ தாண்டிரும்னு அப்பவே நம்ம உள் மனசு சொல்லியிருச்சு..

விக்ரமின் அம்மாவிடம் சென்ற சின்மயி விக்ரமின் கடும் உழைப்பைப் பற்றி அவரிடம் கேள்வி கேட்டார். “ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு.. என்னைவிட யாரு இதுல பெருமைபடப் போறா..?” என்றார் விக்ரமின் அம்மா. செம கைதட்டல்..

அப்படியே விருந்தினர்கள் மேடைக்கும் வந்த சின்மயி, ஷங்கரிடம் சென்று அனிருத் பற்றி கேட்டார். “இந்த பாடலை ரெடி பண்ணினவுடனேயே யாரை பாட வைக்கலாம்னு யோசிச்சோம். அப்போ ரஹ்மான்தான் ‘அனிருத்தை பாட வைச்சா என்ன?’ என்று கேட்டார். ஓகேன்னு அவரை கூப்பிட்டு பாட வைச்சோம். நாங்க எதிர்பார்த்ததைவிடவும் அற்புதமா பாடியிருக்கார்..” என்றார் ஷங்கர்.

அடுத்து அர்னால்டுவிடம் மைக்கை நீட்டி அவருடைய சென்னை வருகையைப் பற்றி கேட்டார் சின்மயி. “ரசிகர்கள் இல்லாமல் நாங்கள் வெற்றி பெற முடியாது. இப்படிப்பட்ட திறமைசாலிகளுடன் நான் இங்கு இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு…” என்றார்.

அடுத்து ‘தலைவா’ என்ற கூச்சலுடன் ரஜினியிடம் மைக்கை நீட்டி விக்ரம் பற்றி கருத்து கேட்டார் சின்மயி. சங்கடப்பட்ட ரஜினி.. “நான் இதை மேடைல பேசும்போது சொல்றனே..” என்றார்.

அடுத்து ரஹ்மானிடம் சென்ற சின்மயி, “ஷங்கர் ஸார்கூட இத்தனை வருஷமா ஒர்க் பண்ணியிருக்கீங்க.. எப்படி இப்போ பீல் பண்றீங்க…?” என்றார். “நான் ஷங்கர்கூட 20 வருஷமா ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கேன்.. ஒவ்வொரு படத்தையும் முதல் படம் மாதிரிதான் ஃபீல் பண்ணுவேன். பட் இந்தப் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் ரொம்ப புதுசா இருக்கும்..” என்றார் ஏ.ஆர். ரகுமான்.

அடுத்து புனித் ராஜ்குமாரிடம் மைக்கை நீட்டி இந்த விழாவுக்கு வந்த்து பற்றி கேட்டார் சின்மயி, அவரோ திடீர் கேள்வியால் ஷாக்காகி, “ரஜினி சார், ஏ.ஆர்.ரகுமான், அர்னால்டு இவர்கள் உள்ள மேடையில் இருப்பதை நான் ரொம்ப பெருமையா நினைக்கிறேன்.  இந்த டீமுக்கு என்னுடைய வாழ்த்துகள்…” என்றார் பட்டும்படாமல்.

அடுத்தாக பாடகர் ஹரிசரணும், பாடகி நடாலியா டி லுசியாவும் ஒரு பாடலைப் பாடினர்.

“இப்போது நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நம்ம சீயான் விக்ரம் வருகிறார்…” என்று சின்மயி சொல்ல.. ரசிகர்களை அதிர வைத்த அந்தக் காட்சி இந்த நொடியில் துவங்கிது.

மேடையின் உச்சத்தில் ஒரு சிம்மாசனத்தில் ‘ஓநாய் மனிதன்’ கெட்டப்பில் ஒரு அதிர்ச்சியான தோற்றத்தில் விக்ரம் வெளிப்பட்டார். அதற்கு நேர் கீழே ஒரு கூண்டுக்குள் எமி ஜாக்சன் இருந்தார். “என்னோடு நீ இருந்தால்…’ என்ற பாடலுக்கு திரையில் அவர்கள் எப்படி ஆடினார்களோ.. பாடினார்களோ… அதே போல இந்த 5 நிமிட பாடலும், ஆடலும் அரங்கத்தையே கட்டிப் போட்டுவிட்டது..

பாடலுக்கு ஆடியபடியே விக்ரம் மேடையில் இருந்து இறங்கி ரசிகர்கள் பக்கமாக வந்து நடித்துக் காண்பிக்க அரங்கே ஆர்ப்பரித்தது.. அட்டகாசமான நிகழ்வு இது.. இதைப் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி, ஷங்கரின் தோளைத் தட்டி பாராட்டினார். பாடல் முடிந்ததும் ரஜினியும், அர்னால்டும் எழுந்து நின்று கை தட்டிப் பாராட்ட… இதைப் பார்த்த கூட்டமும் ஜோராக கை தட்டியது.

பாடல் முடிந்தவுடன் சின்மயி விக்ரம், எமி ஜாக்சன் இருவரிடமும் பேட்டியெடுத்தார். விக்ரம், ரஜினியையும், அர்னால்டையும் வரவேற்றுப் பேசினார். கூடவே, “இந்த மேக்கப்பை 4 மணில இருந்தே போட ஆரம்பிச்சோம். ஆனா எமி ஜாக்சன் 3 மணில இருந்து மேக்கப் போட ஆரம்பிச்சு.. எனக்கப்புறமா முடிச்சாங்க..’’ என்றார் கிண்டலுடன்.

அடுத்து விக்ரமின் அந்த ஓநாய் மனிதன் தோற்றத்தை உருவாக்கிய நியூஸிலாந்தை சேர்ந்த Weta Workshop நிறுவனத்தின் சார்பாக, ஷான் பேசினார். தொடர்ந்து அந்த நிறுவனம் பற்றிய ஒரு வீடியோவும் திரையிடப்பட்டது.

அடுத்து, ஹரிசரண்,  ’பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…’ என்ற பாடலைப் பாடினார். பாடல் பாடிய அனுபவத்தைக் கேட்டால் ரஜினி புகழ் பாடித்தான் ஓய்ந்தார்..!

அடுத்ததுதான் முற்றிலும் எதிர்பாராத ஒரு விஷயம். அர்னால்டு உலக பாடி பில்டிங் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து பத்தாண்டுகள் பெற்றவர். அவர் வந்திருக்கும்போது அது பற்றிய நம்மூர் வீரர்களை காட்டாமல்விட்டால் எப்படி..? 11 ஆணழகர்கள் கலந்து கொண்ட ‘பாடி பில்டிங்’ ஷோ மேடையில் நடைபெற்றது.

அர்னால்டு அதை வெகுவாக ரசித்தார். ரசிகர்களுக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு புதுமையான நிகழ்வாக இருந்ததால் ரசித்துப் பார்த்தார்கள். நிகழ்ச்சியின் முடிவில் அவர் அமர்ந்திருந்த சிறிய மேடையை நோக்கி வரிசையாகச் சென்ற அனைத்து ‘பாடி பில்டிங்’ வீர்ர்களும் அவருக்கு சல்யூட் செய்து தலை குனிந்து நிற்க.. அர்னால்டே எழுந்து நின்று கை தட்டி வரவேற்றார்.

வேகமாக அவர்களது அருகில் வந்து ஒவ்வொருவருடனும் கை கொடுக்கத் துவங்க.. செம கைதட்டல்..  பின்னர் அவர்களை அழைத்துக் கொண்டு மேடையேறினார். மேடையில் இருந்த சிம்ஹா அர்னால்டிடம் அந்த ஷோவை பற்றி கேட்க.. “மிக அருமையான ஷோ இது… என்னுடைய காலத்தில் நான் செய்ததையெல்லாம் நினைத்துப் பார்க்க வைத்தது…” என்றார்.

தொடர்ந்து பாராட்டுவதற்கு அவர் தயாராக இருந்தும் சிம்ஹா மைக்கை அவரிடமிருந்து கிட்டத்தட்ட பிடுங்கினார். தொடர்ந்து பாடி பில்டர்கள் அர்னால்டிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளத் துவங்க.. சிம்ஹா அவர்களை ஒதுங்கிப் போகச் சொன்னார். ஆனால் அர்னால்டு அவர்களை வரிசையாக இரு புறமும் நின்று போஸ் கொடுக்கும்படி செய்தார்.

புகைப்படம் எடுத்த பின்பு சட்டென்று தொகுப்பாளினிகள் நின்று கொண்டிருந்த மேடையேறிய அர்னால்டு மைக்கை பிடித்துவிட்டார். ஏற்கெனவே என்ன பேச வேண்டும் என்பதை ஒரு பேப்பரில் எழுதி கையோடு கொண்டு வந்திருந்த அர்னால்டு அதனை பேசத் துவங்க.. திடீரென்று இடைமறித்த சிம்ஹா, அர்னால்டின் காதோரம் ஏதோ சொல்ல.. அதைக் கேட்டுவிட்டு சட்டென்று சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றி ஒரு வரியைச் சொல்லிவிட்டு தனது பேச்சை துவங்கிவிட்டார் அர்னால்டு.(அர்னால்டின் பேச்சு இந்தப் பதிவில் உள்ளது.)

அவர் பேசி முடிக்கும் தருவாயில் “I will be back” என்று உறுதியான குரலில் சொல்ல.. கூட்டம் கரவொலியை காற்றில் பறக்கவிட்டது.. அத்தனை சந்தோஷம் அத்தனை பேருக்கும்.

சட்டென்று மேடைக்கு ஓடிய ஆஸ்கர் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீதர் தனது மகனை தேடிப் பிடித்து இழுத்து வந்து அர்னால்டுடன் மேடை ஓரமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவ்வளவுதான்..

ஒரு கையை கூட ஆட்டாமல்.. போய் வருகிறேன் என்றுகூட சொல்லாமல்.. முறையான வழியனுப்பும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் சைடாக இருந்த வாசல் வழியாக வெளியேறினார் அர்னால்டு. பலரும் அவர் ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறார் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் போயே போய்விட்டார் என்பது பின்புதான் தெரிந்தது..

அர்னால்டு  சென்றதும் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஆஸ்கர் பிலிம்ஸ் இயக்குனர் ஸ்ரீதர்  பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, கபிலன், ஆகியோர் உடனிருக்க ‘ஐ’ படத்தின் இசையை  புனித் ராஜ்குமார் வெளியிட ரஜினி பெற்றுக் கொண்டார். ஆனால், நாயகன் விக்ரமும், நாயகி எமி ஜாக்சனும் இல்லை. விக்ரம் மேக்கப்பை கலைத்துக் கொண்டிருந்தாராம்.. எமி ஜாக்சன் அடுத்து தான் ஆடப் போகும் ஒரு நடனத்திற்காக டிரெஸ் அணிந்து கொண்டிருந்தாராம்..!

அப்படியே மேடையில் பேசிவிட்டு போகலாம் என்று ரஜினி நினைக்க.. “இல்ல ஸார்.. இன்னும் கொஞ்சம் நிகழ்ச்சிகள் இருக்கு..” என்று சின்மயி சொல்ல.. ரஜினி மறுப்பேதும் சொல்லாமல் ஷங்கருடன் இணைந்து மீண்டும் இருப்பிடத்திற்கே வந்து சேர்ந்தார்.

அடுத்து படத்தின் டீஸர் திரையிடப்பட்டது. அசத்தல். (ஐ படத்தின் டீஸர் இந்தப் பதிவில் உள்ளது)

இதையடுத்து ‘ஐ’ உருவான விதம் பற்றி கொஞ்சம் விரிவான அதே சமயம் ஆச்சரியமான வீடியோ தொகுப்பு ஒன்றும் காட்டப்பட்டது.

இந்தப் படத்தின் 25 சதவிகித காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டதாம். அது எப்படி படமாக்கப்பட்டது என்பதையும், சண்டை காட்சிகள் எப்படி தயாராகின என்பது பற்றியும் இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், சண்டை பயிற்சியாளர் என்று பலரும் மாறி மாறி பேசி பரவசப்படுத்தினார்கள்..!

இதையடுத்து ஆஸ்கர் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறினார். “என்னோடு நீ இருந்தால்…’ என்ற காதல் பாடலை பியானாவில் அவர் இசைக்க, பாடகர்களால் அந்தப் பாடல் உச்சஸ்தாயியில் பாடப்பட்டது.

அப்போது பேசிய ரஹ்மான் “இந்த படத்துக்கு இரண்டு வருஷமா மியூசிக் போட்டுக்கிட்டிருக்கேன். 2 மாசம் முன்னாடிதான் பாடலுக்கான மாஸ்டர் காப்பியையே கொடுத்தேன். ஆனா என்னை நிறைய ஆச்சரியப்படுத்திட்டாரு டைரக்டர் ஷங்கர். அவ்ளோ விஷயங்களை படத்துல புதுசா பண்ணியிருக்கோம்…” என்றார்.

அடுத்து ரஹ்மானிடமும் கேள்வி கேட்டு நேரத்தை ஓட்டினார்கள் சின்மயியும், சிம்ஹாவும். ஷங்கரின் இயக்கத்தில் ரஹ்மான் போட்ட டியூனிலேயே மிகவும் பிடித்ததை வரிசைப்படுத்தும்படி சின்மயி சொல்ல.. இசைக் கச்சேரி துவங்கியது..

“டேக் இட் ஈஸி ஊர்வசி, ஒட்டகத்தை கட்டிக்கோ, பேட்ட ராப், மாயா மச்சீந்திரா, ஷக்கலக்க பேபி, பால் போலே, கொலம்பஸ், அதிரடிக் காலம், இரும்பிலே” ஆகிய பாடல்கள் கொஞ்சம், கொஞ்சம் பாடப்பட்டன.

அடுத்து சீன நாட்டுக் கலைஞர் ஆனா யங் என்பவரின் ‘கஸாலியன் பபுள் ஷோ’ நிகழ்ச்சி, சோப் தண்ணீரில் குமிழ்களை உருவாக்கும் கலையை செய்து காட்டினார். ஆனால் இது அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. மேலும் நேரத்தைக் கடத்தாமல் முடிக்கும்படி சொல்லிவிட்டதால், பாதியிலேயே இவரை மூட்டையைக் கட்டி அனுப்பி வைத்தார்கள்.

“இதில் ஒரு காமெடியாக விக்ரமை பார்த்து இதுவரையிலும் ஓ போடு என்பார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு பின்பு ஐ போடுங்கள் என்றுதான் கேட்பார்கள்…” என்று புதிய விதிமுறையைச் சொன்ன சின்மயி அது போலவே செய்யும்படி கூட்டத்தை கேட்க விக்ரமின் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்..!

அடுத்து விக்ரம், ‘ஓநாய் மனிதன்’ மேக்கப்பை கலைத்துவிட்டு கோட் சூட் அணிந்து  வந்தார். அவரைத் தொடர்ந்து சிவப்பு நிற உடையில் எமி ஜாக்சனும் வந்தார். இருவரும் அழகான ‘ரேம்ப் ஷோ’ ஒன்றை நடத்திக் காட்டினர்கள். அட்டகாசமான அழகில் இருந்தார் எமி ஜாக்சன்..

இதையடுத்து விக்ரமிடம் பேட்டி எடுத்தார் சிம்ஹா.

சூப்பர் ஸ்டார் இத்தனை நேரம் பொறுமையாக இருக்கிறாரே என்று கடைசி நேரத்தில்தான் தெரிந்தது போலும்.. வேகமாக சூப்பர் ஸ்டாரிடம் ‘தலைவா’ என்று கூவியபடியே ஓடினார் சின்மயி. அவரிடம் மைக்கை நீட்டி விக்ரம் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் என்று சொல்ல.. இதுதான் சான்ஸ்.. இதுலயே எல்லாத்தையும் சொல்லிட்டு எஸ்கேப்பாயிரலாம் என்று நினைத்த சூப்பர் ஸ்டார் அனைத்தையும் உட்கார்ந்த நிலையிலேயே பேசி முடித்துவிட்டு வணக்கம் போட்டுவிட்டார்.(ரஜினி பேசியது இந்தப் பதிவில் உள்ளது)

இதற்காகவே காத்திருந்ததை போல கூட்டமும் கொஞ்சம், கொஞ்சமாக கலையத் துவங்கியது..!

சூப்பர் ஸ்டாரை அப்படியே வெளியேற்றினால் சிக்கலாகிவிடும் என்று நினைத்து, “ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் ஒரு முறை ‘ஐ’ படத்தின் டிரெயிலர்.. இதோ உங்களுக்காக..” என்று சொல்லி லைட்டை ஆஃப் செய்துவிட்டு டிரெயிலர் லைட் வெளிச்சத்தில் சூப்பர் ஸ்டாரை மேடையில் இருந்து கடத்திக் கொண்டு போய் காரில் ஏற்றிவிட்டு பெருமூச்சுவிட்டார்கள்.

கடைசியாக இயக்குனர் ஷங்கர் மேடையேறி அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.(ஷங்கர் பேசியது இந்தப் பதிவில் உள்ளது.)

இவருக்கு பின்பு நடிகர் விகரமும் மைக்கை பிடித்து தனது ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டு நிகழ்ச்சியை முடித்துவைக்க அப்போது மணி 10.45…!(விக்ரம் பேசியது இந்தப் பதிவில் உள்ளது.)

வெளியில் மிதமான தூறலுடன் பொழிந்து கொண்டிருந்த மழை, ரசிகர்களை அன்புடன் வரவேற்றது..!

விழாவின் புகைப்படங்கள் இந்தப் பதிவில் உள்ளது.

Our Score