full screen background image

“200 சினிமா கம்பெனிகளில் வாய்ப்பு கேட்டு அலைந்துள்ளேன்”  ‘கட்சிக்காரன்’ படத்தின் நாயகன் விஜித் சரவணனின் அனுபவம்!

“200 சினிமா கம்பெனிகளில் வாய்ப்பு கேட்டு அலைந்துள்ளேன்”  ‘கட்சிக்காரன்’ படத்தின் நாயகன் விஜித் சரவணனின் அனுபவம்!

பி.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள  படம் ‘கட்சிக்காரன் ‘.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இவ்விழாவில்  சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தலைவரும் தயாரிப்பாளருமான  கே.ராஜன் பாடல்களை வெளியிட இயக்குநர் பேரரசு பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் கதை நாயகனாக நடித்துள்ள விஜித் சரவணன் பேசும்போது, “இது எனக்கு முதல் மேடை. இது போன்றதொரு மேடை முன்பே அமைந்திருக்க வேண்டியது. சரியாக நேரம் அமையாததால்  தள்ளிப் போய் இப்போதுதான் இந்த வாய்ப்பு வந்திருக்கிறது.

இந்தப் படத்தின் இயக்குநர் ஐயப்பன் எனது இனிய நண்பர். அவர் ‘டோனி கபடிக் குழு ‘என்ற படம் எடுத்தார். அதில் எனக்கு வில்லன் வாய்ப்பு கொடுத்தார். இதில் கதையின் நாயகனாக நல்லதொரு கதாபாத்திரம் கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு எது தேவையோ அதைக் கேட்டு வாங்கினார். எது தேவை.. எது தேவையில்லை என்பதில் தெளிவாக இருந்தார். அண்ணன் அப்புக்குட்டி இந்தப் படத்தில் ஒரு  முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். தேசிய விருது வாங்கிய அவருடன் நடித்தது எனக்குப் பெருமை. இந்தப் படத்திற்காக எட்டு கிலோ நான் எடையைக் கூட்டியிருக்கிறேன்.

எண்ணம் போல் வாழ்க்கை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. நான் 200 சினிமா கம்பெனிகளுக்கு என்னுடைய போட்டோக்களை எடுத்துக் கொண்டு ஏறி, இறங்கியிருக்கிறேன். இப்போதுகூட எந்த கம்பெனிக்கு சென்று பார்த்தாலும் என்னுடைய போட்டோக்கள் இருக்கும்.

இப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது. சினிமா மீது எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. ஒரு கதை என்ன கேட்கிறதோ அப்படியே நடிப்பேன். நான் ஒரு நடிகன் அவ்வளவுதான். பாசிட்டிவ், நெகடிவ் என்ற பேதமெல்லாம் எனக்குக் கிடையாது” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவ சேனாதிபதி பேசும்போது, “நான் 2012-ம் ஆண்டிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். சினிமா பற்றி எதுவும் தெரியாத நிலையில் நான் ஒரு தெலுங்குப் படம் தயாரித்தேன். அது எனக்குச் சரியாக அமையவில்லை.

அடுத்து 2015-ம் ஆண்டு இஞ்சி முறப்பா’ என்று ஒரு படம் எடுத்தேன். அது வெளியானபோது ‘வேதாளம்’, ‘தூங்கா நகரம்’ என்று இரண்டு பெரிய படங்கள் வந்தன. எனக்குத் திரையரங்குகள் சரியாகக் கிடைக்காமல் ஒரு 60- 70 போல்தான் கிடைத்தன. அந்தப் படமும் எனக்குச் சரியாக அமையவில்லை. 2019 -ல் காதல் முன்னேற்ற கழகம்’ என்றொரு படம் தயாரித்தேன். இப்படி மூன்று படங்கள் தயாரித்து சில கோடிகள் இழந்தேன். ந்த அனுபவங்களோடுதான் இதில் நான் தயாரிப்பில் பங்கெடுத்தேன்.

ஆரம்பத்தில் நடிப்பதற்காகத்தான் நான் சினிமாவுக்குள் வந்தேன். பிறகு இங்கேயுள்ள சூழ்நிலையைப் பார்த்துவிட்டு தயாரிப்பில் இறங்கினேன். முதல் ஷெட்யூல் படப்பிடிப்புக்குப் போனபோது எனக்குத் திருப்தி இல்லாமல்தான் இருந்தது. இது சரியாக வருமா? இது ஓடுமா? எனச் சந்தேகப்பட்டேன். ஆனால் ஐயப்பன் தனது திறமையால் எண்ணத்தை மாற்றிவிட்டார். இதில் அவர் மிரட்டி இருக்கிறார். இந்தப் படம் நன்றாக வந்துள்ளது…” என்றார்.

படத்தின் நாயகி ஸ்வேதா டாரதி பேசும்போது, “இந்தப் பட வாய்ப்பு வந்தபோது அரசியல் சார்ந்த கதை என்றதும் முதலில் நான் யோசித்தேன். நடிப்பதற்குத் தயக்கமாக இருந்தது. பிறகு என் கதாபாத்திரத்தைக் கேட்டபோது பிடித்திருந்தது. ஒப்புக் கொண்டேன்.

நான் அரக்கோணத்தைச் சேர்ந்தவள். சினிமாவில் நடிப்பதற்காக என்னுடைய குடும்பமே சென்னை வந்தது. அந்த அளவுக்கு எனது பெற்றோர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்த படம் எனக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு. இது வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறேன். அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

இயக்குநர் ஐயப்பன் பேசும்போது, “முதலில் எனது குருநாதர்  இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப் பட வாய்ப்பு கொடுத்துள்ள தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

இதன் கதை என்னவென்றால். ஒரு தலைவனுக்கும், தொண்டனுக்கும் இடையில் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் இந்தப் படத்தின் கதை. இது தவறு செய்யும் தலைவனைத் தட்டிக் கேட்கும் ஒரு தொண்டனின் கதை.

இன்றைய அரசியலில் பல விஷயங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அரசியலைச் சீரழித்துக் கொண்டிருக்கும் சாதிக் கட்சிகள் ஒழிய வேண்டும். சாதிக் கட்சிகள்தான் தீவிரவாதத்தை வளர்க்கின்றன. சாதிக் கட்சிகளை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும். அரசியல் கட்சிகள் கூட்டணி வைப்பதைத் தடை செய்ய வேண்டும். அதுதான் ஊழலுக்கு வழி வகுக்கிறது. காமராஜர், கக்கன் போன்ற அரசியல் தலைவர்கள்   அரசியலுக்கு வர வேண்டும். அவர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்” என்றவர்,  படத்தில் பணியாற்றிய அனைவரது பெயர்களையும் ஒன்று விடாமல் பட்டியலிட்டு வாசித்து நன்றி கூறினார்.

நடிகர் அப்பு குட்டி பேசும்போது, “விஜித்  சரவணன் நல்ல மனிதர். படத்திற்காக ஒத்திகை பார்க்கும்போதெல்லாம் எப்படி நடித்திருக்கிறேன் என்று என்னிடம் கேட்பார். நானே பயந்து கொண்டுதான் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னிடம் அவர் அவ்வளவு ஆர்வமாகக் கேட்பார். அவர் இப்படி நடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஒரு படத்திற்கு இயக்குநர்தான் முக்கியம். இயக்குநர் இல்லை என்றால் எந்த நடிகர்களும் வெளியே தெரிய மாட்டார்கள். குறுகிய காலத்தில் 20 நாளில் இந்தப் படத்தை முடித்துள்ளார்கள். நான் கெஸ்ட் ரோலில்  இப்படத்தில் வருகிறேன். ஆனாலும் எனக்குத் திருப்தியான வாய்ப்பு இது..” என்றார்.

 

Our Score