“மாநாடு படத்தில் எனக்கு லாபம் வரவில்லை…” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் விளக்கம்

“மாநாடு படத்தில் எனக்கு லாபம் வரவில்லை…” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் விளக்கம்

“கடந்த வாரம் வெளியான ‘மாநாடு’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சுமார் 10 முதல் 15 கோடிவரை லாபம் சம்பாதித்திருக்கிறார்…” என்று தமிழ்ச் சினிமா துறையில் இருக்கும் குபீர், திடீர் வர்த்தக ஆய்வாளர்கள் மற்றும் வல்லுநர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எட்டுத் திக்கும் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியோ, “இந்த மாநாடு’ படத்தினால் எனக்கு எந்தவித லாபமும் இல்லை. ஜஸ்ட் எஸ்கேப் ஆகியிருக்கிறேன். அவ்வளவுதான்…” என்று அதிர்ச்சி பதிலை அளித்திருக்கிறார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவான ‘மாநாடு’ திரைப்படம் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானது. இப்படத்தை வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் ‘மாநாடு’ திரைப்படம் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த அதிர்ச்சி தகவலை ஊடகங்களுக்கு அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ”எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நம்மால் கடந்து வந்துவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. படத்தின் பிசினஸ் தொகைக்கு மேலாக கடன் வாங்கினால்தான் நமக்குப் பிரச்சனை. நான் இந்தப் படத்தின் பிசினஸ் என்னவென்று தெரிந்து, அதற்குள்தான் நின்றேன்.

படம் தொடங்கியதிலிருந்து முடிவுவரை பல பிரச்சனைகள் இருந்தன. முடியும்போது அனைத்தும் வெற்றியாக முடிந்தது. படம் தொடங்கும்போதே இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது.

அதனால்தான் சிம்புவிற்கு பிசினஸ் டவுனாக இருந்தபோதிலும், ‘மங்காத்தா’விற்குப் பிறகு வெங்கட் பிரபு பெரிய ஹிட் கொடுக்காதபோதிலும் 30 கோடியில் பட்ஜெட் போட்டேன். அந்த நம்பிக்கை இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேன்.

பட ரிலீஸ் நேரத்தில் இவர்கள் சொல்வதுபோல எதுவும் நடக்கவில்லை. நடந்தது என்ன… நடந்தது என்ன… என்று பல பேட்டிகளில் சொல்லிவிட்டேன். இதெல்லாம் பட ரிலீஸில் சகஜம்தான்.

சேட்டிலைட் உரிமை விற்பனையான பிறகு படத்தை வெளியிடலாம் என்பதில் மட்டும் நான் உறுதியாக இருந்தேன். படத்திற்கு எந்தவிதமான மலிவான விளம்பரத்தையும் நான் செய்யவில்லை. அதற்கான தேவை எனக்கு எந்த இடத்திலும் வரவில்லை.

பட்ஜெட்டை மீறி சில விஷயங்கள் சென்றன. ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று இறங்கிவிட்டோம். அதில் சமரசம் செய்தால் மக்கள் காரித் துப்பிவிடுவார்கள். எந்த அளவிற்கு சமாளிக்க முடியுமோ அந்த அளவிற்கு சமாளித்து வந்துவிடுவோம் என்றுதான் நினைத்தேன்.

முதல் நாள் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும்போதே படத்தின் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை வந்துவிட்டது. ஒரு படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரம் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ அந்த அளவிற்குப் படம் வெற்றி பெறும்.

சிம்புவே கூப்பிட்டு இந்த வாய்ப்பைக் கொடுத்ததால் நிச்சயம் நல்லபடியாக நடித்துக் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இந்தப் படத்தைத் தயாரித்தேன். அதன் பிறகு, அவரிடமிருந்து சரியாக ஒத்துழைப்பு இல்லை என்றவுடன் அதிலிருந்து விலகிவிட்டேன்.

அந்த இடத்திலும் தயாரிக்கிறேன் என்று நின்றிருந்தால் நான் தோற்றிருப்பேன். பின் அனைவரும் உட்கார்ந்து பேசி முறைப்படி அக்ரிமெண்ட் போட்டு படத்தை ஆரம்பித்தோம்.

அதேதான் ரிலீஸ் நேரத்திலும் நடந்தது. நான் மட்டும் ஏன் கடன்காரனாக நிற்க வேண்டும்… சேட்டிலைட் உரிமையை விற்றுவிட்டு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தேன்.

ஒரு தயாரிப்பாளராக நான் எல்லா நேரத்திலும் உறுதியாக நின்றிருக்கிறேன். ஒரு முடிவு எடுத்துவிட்டு பின்னர் உங்களால்தான் தோல்வி என்று மற்றொருவரைக் குற்றம் சாட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய படங்களின் வெற்றிக்கும், தோல்விக்கும் நான்தான் பொறுப்பு.

புது முயற்சி எடுத்துள்ளோம். அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியாது என வெங்கட் பிரபுவே சில நேர்காணல்களில் சொல்லியிருக்கிறார். ஆனால், நான் எந்த நேர்காணலிலும் அப்படிச் சொல்லவில்லை. ஏனென்றால், இந்தக் கான்சப்ட் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

இப்போது இந்த மாநாடு’ படத்தை வாங்கிய அனைவருக்குமே லாபம் கிடைத்திருக்கிறது. தியேட்டர் ரைட்ஸ், சேட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கிய அனைவருக்குமே லாபம் கிடைத்திருந்தாலும் தயாரிப்பளரான எனக்கு லாபம் இல்லை. அதற்குக் காரணம் சிம்புவின் முந்தைய பட வசூல்.

ரிலீஸிற்குப் பிறகு படம் வெற்றி பெறுவது என்பது வேறு. ரிலீஸிற்கு முன்பு சில விஷயங்கள் உள்ளன. அது எனக்குக் கிடைக்கவில்லை. என்னுடைய படம் வெற்றி அவ்வளவுதான். இதற்கு யாரையும் குறை சொல்லவும் முடியாது.

சிம்புவின் முந்தைய படம் வெற்றி பெற்றிருந்தால் எனக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும். என்னுடைய படத்திற்குப் பிறகு சிம்பு நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு இந்த மாநாடு’ படத்தின் வெற்றியினால் நிச்சயமாக நல்ல லாபம் கிடைக்கும். அந்த வகையிலும் எனக்கு மகிழ்ச்சிதான்…” என்றார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

Our Score