இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கர்ணன்’.
இத்திரைப்படத்தில் மலையாள நடிகரும், இயக்குநருமான லால், ‘ஏமராஜன்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்பு பிரமாதமாக இருந்ததாக பல்வேறு விமர்சகர்களும், ரசிகர்களும் தெரிவித்திருந்தனர்.
இருந்தாலும் அனைவரும் சொன்ன ஒரேயொரு குறை.. படத்தில் லால் தனது சொந்தக் குரலில் பேசவில்லை என்பதைத்தான். அவர் குரலிலேயே பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே.. தேசிய விருது, மாநில அரசின் விருதுகளுக்கு அனுப்பலாமே.. ஏன் விட்டுவிட்டார் லால்.. என்றெல்லாம் கேள்விக் கணைகள் எழுந்தன.
இதற்கு சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் சொல்லியிருக்கிறார் நடிகர் லால்.
லால் தன்னுடைய பதிலில், “கர்ணன்’ படத்தில் நீங்கள் ஏன் சொந்தக் குரலில் பேசவில்லை என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.
‘கர்ணன்’ படம் திருநெல்வேலி பின்னணியைக் கொண்ட திரைப்படம். திருநெல்வேலியின் தமிழ் என்பது சென்னையில் பேசப்படும் தமிழ் மொழியைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானது. மலையாளத்தில்கூட திருச்சூர் வட்டார மொழியை அந்நியர் ஒருவர் பேசவே முடியாது.
‘கர்ணன்’ திரைப்படம் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியவத்துவம் உள்ள ஒரு படம். மேலும் தனித்துவமான அந்த வட்டார மொழியைப் பேசுவதன் மூலமே அந்தக் கதாபாத்திரம் முழுமை பெறும்.
அதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் உள்ளூர்க்காரர்கள். எனவே, என்னுடைய மொழி மட்டும் படத்தில் தனியாகத் தெரிவதற்கு வாய்ப்பு இருந்தது. படத்தில் என்னுடைய பங்களிப்பு 100% இருக்கவேண்டும் என்று நான் விரும்பியதால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோரது கட்டாயத்தின் பேரில் டப்பிங் பணிகளுக்காக சென்னை சென்றேன். எனினும் படத்தின் நலனுக்காக என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரது குரல் பயன்படுத்தப்பட்டது. உங்கள் அனைவரது ஆதரவுக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி…” என்று லால் குறிப்பிட்டுள்ளார்.