ஸ்ரீஆர்க் மீடியா சார்பில் தயாரிப்பாளர்கள் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நாடு’. இந்தப் படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடிக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி, இன்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இன்றைக்கும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத ‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் சரவணன்தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் நாயகியான மஹிமா நம்பியார் பேசும்போது, “இந்தப் படம் குறித்து இயக்குநர் முதலில் என்னிடம் தொலைபேசியில் 20 நிமிடங்கள் கதை சொன்னார். அப்போதே இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதன் பிறகு நானே அவருக்கு போன் செய்து “இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் ஸார்” என்றேன். அவரும் பெரிய அளவில் ஆச்சரியம் காட்டாமல் “அப்படியா?” என்று சொல்லி ஒப்புக் கொண்டார். அதைக் கேட்டதும் ஒருவேளை வேறு யாரிடமோ பேசுவதற்கு பதிலாக தவறிப்போய் என்னிடம் கதை சொல்லிவிட்டாரோ என்றுகூட குழம்பினேன்.
படப்பிடிப்புக்கு சென்றபோது அவரிடம் “என்னை இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய என்ன காரணம்..?” என நேரிலேயே கேட்டு விட்டேன். அதற்கு அவர் சிம்பிளாக, “இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க சில பேரை அணுகலாம் என ஒரு பட்டியல் தயாரித்து வைத்திருந்தேன். அவர்களுக்கெல்லாம் போன் செய்து பேசியபோது அதில் எனக்கு மதிப்பளித்து திரும்பவும் பதிலளித்தவர் நீங்கள் ஒருவர்தான். அதனால்தான் உங்களையே கதாநாயகியாக தேர்வு செய்துவிட்டேன்…” என்றார்.

ஒளிப்பதிவாளர் சக்திக்கு மைக்ராஸ்கோப் கண்கள். இதுவரை நான் நடித்த பல படங்களில் எளிமையான கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து இருந்தேன் அதனால் எனக்கு மேக்கப்பும் ரொம்பவே எளிமையாகவே இருக்கும். இந்தப் படத்தில் கொஞ்சம் ரிச்சாக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதற்காக அழகாக மேக்கப் செய்து கொண்டு வந்தால், அவரோ, இது கிராமத்தில் இருக்கும் டாக்டர் கதாபாத்திரம். இதற்கு இவ்வளவு மேக்கப் தேவையில்லை என்று கூறி அவற்றை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக நீக்க வைத்துவிடுவார். இதனால் ஒவ்வொரு முறை மேக்கப் போடும்போதும் சக்தி சாருக்கு பிடிக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு வந்து விட்டேன். என்னை பொறுத்தவரை அவர் ஒளிப்பதிவில் நான் பயந்து, பயந்துதான் வேலை பார்த்தேன்.
இந்த படத்தில் எனக்கு ஒரே ஒரு பாடல்தான் என்றாலும் திருமண விசேஷ வீடுகளில் ஒலிக்கும்விதமாக ஒரு அருமையான குத்துப் பாடலை கொடுத்துள்ளார்கள். தீனா மாஸ்டர் நடனத்தில் அது அற்புதமான பாடலாக உருவாகியுள்ளது. படத்தில் என்னைவிட தர்ஷன்-இன்பா கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஒரு கதாநாயகன் என்கிற ஆரம்ப நிலையில் இருக்கும் தர்ஷனுக்கு இப்படி ஒரு போல்டான கேரக்டர் கிடைத்திருப்பது அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்” என்றார்.









