தமிழ்ச் சினிமாவில் திறமை மிக்க பெண் இயக்குநராக வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன், அழகான கதைகளை உருவாக்குவதோடு, அதை உயர்ந்த தரத்தில் சினிமாவாகவும் வழங்குபவர்.
‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய வித்தியாசமான படங்களை தமிழ்ச் சினிமாவுக்குக் கொடுத்திருக்கும் லஷ்மி ராமகிருஷ்ணன், இப்போது தனது அடுத்த படைப்பாக ‘ஹவுஸ் ஓனர்’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்தில் ‘ஆடுகளம்’ கிஷோர் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். ‘பசங்க’ படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்ற, ஸ்ரீரஞ்சனி ஒவ்வொரு வீட்டிலிருக்கும் அம்மாவை பிரதிபலிக்கும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற சிறப்பான தொழில் நுட்ப கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். ‘வாகை சூட வா’ தொடங்கி சமீபத்திய ‘ராட்சசன்’வரை அவரின் இசை பெரிதும் பேசப்படுகிறது. ‘மகளிர் மட்டும்’ புகழ் பிரேம் படத் தொகுப்பை கையாள்கிறார். கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்ய, தபஸ் நாயக் ஒலிப்பதிவை கவனிக்கிறார்.
சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
தன்னுடைய ‘ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன், “உள்ளதை உள்ளபடி செல்லும் உள்ளங்களை மட்டும்தான், நான் எனது படங்களின் பிரத்தியேக காட்சிகளுக்கு அழைப்பேன். அப்படித்தான் இந்தப் படத்தின் பிரத்யேக காட்சிக்கும் எனது தோழமைகளை அழைத்திருந்தேன். படம் பார்த்துவிட்டு அவர்கள் என்னையும், எனது குழுவினரையும் பெரிதும் பாராட்டினார்கள். நான் மிக மிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டியது என் மனதை நிறைய வைத்திருக்கிறது. அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டும், மரியாதையும் அளவிட முடியாது.
தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக் கொள்ளும் என்பதில் எனக்கு இங்கேதான் நம்பிக்கை பிறக்கிறது.
இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற பெரும் கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன். மதன் கார்க்கி மற்றும் அனுராதா இருவரும் பாடல் வரிகளை இயற்றியுள்ளார். பாடல்களுக்கு உயிருட்டும்விதமாக சின்மயி, சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர்.
இப்படத்தை வரும் கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். தற்போது தமிழ்த் திரையுலகத்தில் நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள்தான் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்று வருகின்றன, அந்த வரிசையில் இந்தப் படமும் வெற்றி பெறும் என நம்புகிறேன்…” என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் லஷ்மி ராமகிருஷ்ணன்.