சென்னை, வடபழனியில் தமிழ்ச் சினிமாவின் அடையாள சின்னமாகவே விளங்கிவரும் ஏவி.எம். ஸ்டூடியோவின் ஒரு பகுதி, அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் மற்றும் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் நிறுவனம்தான், ஏவி.எம். ஸ்டூடியோவின் ஒரு பகுதியை விலை கொடுத்து வாங்கியுள்ளது என்று வர்த்தகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏவி.எம். மெய்யப்பச் செட்டியாரின் மறைவிற்கு பிறகும் ஏவி.எம்.மின் மைந்தர்கள் நால்வரும் ஒரே பேனரின் கீழ் படங்களைத் தயாரித்து வந்தனர். காலப்போக்கில் ஏவி.எம்.சரவணனும், ஏவி.எம். பாலசுப்ரமணியனும் இணைந்து படங்களை தயாரித்து வந்தனர். ஏவி.எம்.குமரன் தனியே சென்றுவிட்டார். ஏவி.எம். முருகனும் தனியே போய்விட்டார். கடைசியாக ஒட்டு மொத்தமாக மெய்யப்பச் செட்டியார் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த உயிலின்படி ஏவி.எம். ஸ்டூடியோ பங்கு பிரிக்கப்பட்டது.
இதில் தங்களுக்குக் கிடைத்த பகுதியில் ஒரு பகுதியை ஏவி.எம்.குமரன் தனியாருக்கு விற்பனை செய்துவிட. அங்கே இப்போது போர்டீஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. அதேபோல் ஏவி.எம்.சரவணனுக்குச் சொந்தமான இடத்தில் நடிகர் விஜய் ஆண்டனி ரிக்கார்டிங் ஸ்டூடியோ கட்டி பணியாற்றி வருகிறார். ஏவி.எம்.முருகனும் தனக்குரிய பங்கு நிலத்தை விற்பனை செய்துவிட்டார்.
இப்போது ஏவி.எம்.பாலசுப்ரமணியனுக்கு சொந்தமான இடத்தை ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாம். அந்த இடத்தில் சுமார் ஏழு லட்சம் சதுர அடியில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டுமானத்தின் மதிப்பு 400 கோடி என்கிறார்கள். நிலத்தை 180 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ள ஸ்ரீராம் நிறுவனம் கட்டுமானத்தை ஏவி.எம்.பாலசுப்ரமணியனுடன் இணைந்தே உருவாக்க இருக்கிறதாம். இதனுடைய பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் கடந்த ஜூலை மாதமே முடிந்து இப்போது ஒப்பந்தம் இறுதியாகிவிட்டதாம். முழு பணமும் ஏவி.எம். பாலசுப்ரமணியன் தரப்பிற்கு செட்டில் ஆனவுடன் கட்டுமான வேலைகள் தொடங்கும் என்கிறது பிஸினஸ் வட்டாரத் தகவல்.
ஏற்கெனவே சென்னையில் இருந்த ஸ்டூடியோக்கள் பலவும் அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறிக் கொண்டேயிருக்க.. இப்போது இதில் தமிழ்ச் சினிமாவுடன் நகமும், சதையுமான தொடர்பில் இருக்கும் ஏவி.எம். ஸ்டூடியோவும் குடியிருப்புகளாக மாறப் போகும் விஷயம்.. உண்மையாகவே தமிழ்ச் சினிமா துறையை பொறுத்தமட்டில் வருத்தமான விஷயம்தான்.
ஒரு காலத்தில் இதே ஏவி.எம். ஸ்டூடியோவில் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்கள்கூட தயாராகி வந்தன. எட்டு புளோர்களிலும் எப்போதும் ஷூட்டிங் நடந்து கொண்டேயிருந்த நேரமெல்லாம் தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். சினிமாக்களின் கதையாடலும், திரைக்கதையும், படப்பிடிப்பும் வெளிப்புறத்திற்கு சென்றபோதே ஸ்டூடியோக்களின் மவுசு கொஞ்சம், கொஞ்சமாக குறையத் துவங்கியது. படத்திற்கு படம் வித்தியாசமான லொகேஷன்களை காட்டி ரசிகர்களை அசர வைக்க இயக்குநர்கள் நினைக்க.. அது ஸ்டூடியோக்களை அடியோடு அழித்துவிட்டது..
கற்பகம் ஸ்டூடியோவில் இப்போது குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அருணாச்சலம் ஸ்டூடியோ இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.. விஜயா-வாஹினி ஸ்டூடியோக்கள் ஹோட்டலாகவும், ஷாப்பிங் மால் ஆகவும் உருமாறிவிட்டது.. எஞ்சியிருப்பது பிரசாத் ஸ்டூடியோ மட்டுமே..!
இனி தமிழ்ச் சினிமாக்களில் ஸ்டூடியோக்களை காண்பதே ஒரு கனவாகவும், பழைய சினிமாக்களில் மட்டுமே பார்க்கக் கூடியதாக இருக்கும்..!