திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தக் கேளிக்கை வரிச்சட்டத்தின்படி புத்தம் புதிய படங்கள் 30 சதவிகித வரிவிலக்கையும், பழைய படங்கள் 25 சதவிகித வரி விலக்கும் பெறுகின்றன. ஆனால் பெறப்படும் இந்த வரி விலக்கினால் தயாரிப்பாளருக்கு மட்டுமே பலன் கிடைக்கிறதே ஒழிய.. திரையரங்குகளுக்கு ஓடி வரும் ரசிகர்களுக்கு எந்தப் புண்ணியமும் இல்லை. மாறாக அவர்களிடத்தில்தான் பணம் சுரண்டப்படுகிறது.
அரசு கேளிக்கை வரி அளிக்கிறதென்றால், அந்த வரியை தியேட்டர் கட்டணத்தில் நீக்கிவிட்டு குறைந்த கட்டணத்தில்தான் டிக்கெட்டுகளை விற்க வேண்டும். ஆனால் அனைத்து தியேட்டர்களுமே அதே கட்டணத்தில் டிக்கெட்டுகளை விற்றுவிட்டு, வரி விலக்கின் மூலம் பெறும் பணத்தை தயாரிப்பாளர்களுடன் பங்கு போட்டுக் கொள்கின்றன. இதனால் இந்த கேளிக்கை வரிச் சட்டமே கேலிக்கூத்தானது என்று பலரும் பொறுமிக் கொண்டிருந்தார்கள்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த ஜி.பி.மோட்சம் என்ற வழக்கறிஞர் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தி்ல வழக்கு தொடுத்துள்ளார். அவர் தொடுத்துள்ள மனுவில், “தமிழ்நாடு கேளிக்கை வரிச்சலுகை சட்டப் பிரிவு 8-ன்படி திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் வரியை ரத்து செய்ய வணிக வரித்துறை முதன்மை செயலாளருக்கு அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில் தமிழில் பெயர் வைக்கும் புதிய படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து 2006-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி வணிக வரித்துறை முதன்மை செயலாளர் அரசாணை பிறப்பித்தார். இதன் பின்னர் 2007-ம் ஆண்டு பிறப்பித்த மற்றொரு அரசாணை மூலம் தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ள பழைய படங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் தமிழக அரசு 2011-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி பிறப்பித்த அரசாணையில் தணிக்கைக் குழுவிடம் யு சான்றிதழ் பெற்ற திரைப்படங்களுக்கும், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை வளர்க்கும்விதமாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களுக்கும், பெரும்பான்மையான வசனங்கள் தமிழில் உள்ள திரைப்படங்களுக்கும் கேளி்ககை வரி விலக்கு அளிக்கலாம்..” என்று கூறியிருந்தது.
இதன் பின்னர் இந்த விதிமுறைகளின்படி வரி விலக்கு பெறும் தகுதியுள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய 4 அரசு அதிகாரிகள், 22 திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கொண்ட கமிட்டியை தமிழக அரசு அமைத்தது.
வரி விலக்குக் கோரும் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் இதற்கான விண்ணப்பத்தை பத்தாயிரம் ரூபாய் கட்டணத்துடன் வணிகவரித்துறை முதன்மை ஆணையரிடம் கொடுக்க வேண்டும். இதன் பின்னர் அந்த படத்தை 7 பேர் கொண்ட கமிட்டி பார்வையிட்டு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யும்.
இவ்வாறு கேளிக்கை வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடும்போது பொதுமக்களிடமிருந்து கேளிக்கை வரியை தியேட்டர் உரிமையாளர்கள் வசூலிக்கக் கூடாது.
இதற்காக கேளிக்கை வரி விதிக்கப்பட்ட திரைப்படங்களுக்கும், வரி விலக்கு அளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கும் தனித்தனி நுழைவுச் சீட்டினை தியேட்டர் உரிமையாளர்கள் அச்சடித்து அதன்படி பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டும்.
அண்மையில் ராஜாராணி என்ற படத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரிவிலக்கு அளித்தது. ஆனால் அந்தப் படத்தை சென்னையில் உள்ள தியேட்டரில் நான் பார்க்கச் சென்றபோது கேளிக்கை வரியுடன்தான் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர் வசூலித்தார்.
இதுபோல்தான் மாநிலம் முழுவதும் தியேட்டர் உரிமையாளர்கள் கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்ட திரைப்படங்களை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து வழக்கமான கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதில் மிகப் பெரிய மோசடி நடக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு வழங்கும் இந்த வரி விலக்கு மக்களைச் சென்றடைவதில்லை.
எனவே பொதுமக்கள் நலன் கருதி, கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளர், வணிக வரித்துறை முதன்மைச் செயலாளர், ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்..” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி பொறுப்பில் இருக்கும் சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். இவர்கள் நேற்று அளித்த இடைக்கால உத்தரவில், “இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பதிலளிக்க அரசுக்கு தகுந்த கால அவகாசமும் தரப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் பதிலளிக்கவோ, பதில் மனு தாக்கல் செய்யவோ தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. இந்த வழக்கில் பதில் சொல்வதற்கு ஏதுமில்லை என்பது போல அரசின் நடவடிக்கைகள் உள்ளன.
எனவே திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக 4 நிபந்தனைகளுடன் தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கின்றோம். இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைக்கின்றோம்..” என்று கூறியுள்ளனர்.
இதன் விளைவாக அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகக் காத்திருக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கும், குறிப்பாக பல கோடிகளைக் கொட்டி உருவாகியிருக்கும் கோச்சடையான் படத்திற்கும் வரிவிலக்குக் கிடைக்காது என்கிற சூழ்நிலையை இது உருவாக்கியுள்ளது.
தமிழக அரசின் அலட்சிய மனப்பான்மையே இந்த நிலைமைக்குக் காரணம். உடனேயே தமிழ்த் திரையுலகம் பொங்கியெழுந்து, அரசின் அலட்சியத்தை விமர்சனம் செய்து தங்களது கடமையுணர்ச்சியை ஆற்றுவார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். ஒருத்தரும் வாயே திறக்க மாட்டார்கள். ஏனெனில் இதில் அவர்களும் ஒரு குற்றவாளிகள்தான்..!