full screen background image

“100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவை வளர்க்கவில்லை” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

“100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவை வளர்க்கவில்லை” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

100 கோடி, 200 கோடி என்று சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் தமிழ் சினிமாவை வாழ வைக்கவில்லை” என்று தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் ‘ஹே சகோ’ என்ற இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழாவில் பேசும்போது கே.ராஜன் இதைத் தெரிவித்தார்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “இங்கே இயக்குநர் பேரரசு வந்திருக்கிறார். நானும் அவரும்தான் சிறிய படங்களின் விழாக்களில் அடிக்கடி வந்து வாழ்த்தி விட்டுச் செல்கிறோம். அவர் பெரிய படங்கள் எடுத்தாலும்  பெரிய நடிகர்களை வைத்து பெரிய வெற்றிப் படங்கள் கொடுத்தாலும் சிறிய படங்களுக்கு  வந்து வாழ்த்தி ஆதரவு தருகிறார்.

பெரிய தயாரிப்பாளர், பெரிய நடிகர்கள் படத்தை வாழ்த்துவதற்கு யார் வேண்டுமானாலும் வருவார்கள். ஆனால் சிறிய படங்களை வாழ்த்துவதற்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை. நாங்கள்தான் வருவோம். சிறிய தயாரிப்பாளர்களை வரவேற்பதற்கும் வாழ்த்துவதற்கும்  நாங்கள்தான் வர வேண்டும்.

சிறிய தயாரிப்பாளர்கள் வாழ்ந்தால், அவர்கள் எடுத்த படம் வெற்றி பெற்றால்தான் சினிமா வாழும். பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்களால்  சினிமாவிற்கு ஒரு பயனும் கிடையாது.100 கோடி 200 கோடி வாங்கும் நடிகர்களால் சினிமா வாழ முடியாது. அவர்களால் சினிமாவே வளர்க்கவே முடியாது.

சினிமா வாழ்வது சிறிய படத் தயாரிப்பாளர்களால்தான். ஒரு சிறிய தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் நூறு தயாரிப்பாளர்கள் திரையுலகில் உள்ளே வருவார்கள். ஆயிரம் குடும்பங்கள் திரையுலகில் வாழும். அதனால்தான் நாங்கள் சிறிய தயாரிப்பாளர்கள் வர வேண்டும்; வளர வேண்டும் என்று நினைக்கிறோம்.

இப்போதெல்லாம் நம் ஹீரோக்கள் தெலுங்கு திரையுலகை வாழ வைக்கப் புறப்பட்டு விட்டார்கள். இங்கே உள்ள தயாரிப்பாளர்கள் எல்லாரும் பெரிதாக வளர்ந்து விட்டதுபோல்  இவர்கள் தெலுங்குப் பக்கம் போகிறார்கள்.

இன்னும் சிலர் சாப்பாட்டுக்கே வழியில்லாத ஸ்ரீதேவியின் கணவர்  குடும்பத்திற்குப் படங்கள் கொடுக்கிறார்கள். ஆனால் நானும் பேரரசுவும் சின்ன படங்களையும், சின்ன தயாரிப்பாளர்களையும் வாழ்த்துகிறோம். அதனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

சின்ன தயாரிப்பாளர் முதலில் நன்றாக இருந்தால் இன்னொரு படம்தான் எடுப்பான். ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்று நன்றாக இருந்தால் தொழிலாளிகள் நன்றாக இருப்பார்கள்; இயக்குநர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் நன்றாக இருப்பார்கள்; நடிகர்கள் மிக, மிக நன்றாக இருப்பார்கள். அதிக சம்பளம் எதுவும் கிடையாது.ஒரு யுகத்தை காப்பாற்றும் அளவுக்கு இன்று ஹீரோக்கள் சம்பளம் வாங்குகிறார்கள். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு யாரைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லை…” என்றார்.

 
Our Score