தமிழ் திரையுலகில், தொடர்ந்து தரமான வெற்றி திரைப்படங்களை தந்து வருவதன் மூலம் மிகப்பெரும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனமாக புகழ் பெற்றுள்ளது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
தரமான திரைப்படங்களை தயாரிப்பதோடு, இளம் திறமையாளர்களின் நல்ல படைப்புகளை தேடி வெளியிட்டு, ஆதரவளித்து வருகிறது இந்நிறுவனம்.
அந்த வகையில் புதுமையான களத்தில், அருமையான படைப்பாக உருவாகியுள்ள ‘ஹர்காரா’ திரைப்படத்தினை ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.
இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார். ‘பிச்சைக்காரன்’ ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு நிறுவனம் – KALORFUL BETA MOVEMENT, தயாரிப்பு – N.A.ராமு / சரவணன் பொன்ராஜ், இணை தயாரிப்பு – அரவிந்த் தர்மராஜ் / தீனா, இயக்கம் – ராம் அருண் காஸ்ட்ரோ, ஒளிப்பதிவு – பிலிப் R.சுந்தர் / லோகேஷ் இளங்கோவன், இசை – ராம் சங்கர், படத் தொகுப்பு – டானி சார்லஸ், கலை இயக்கம் – V.R.K.ரமேஷ்.
‘வி-1 மர்டர் கேஸ்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராம் அருண் காஸ்ட்ரோ இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்த ‘ஹர்காரா’, இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையைச் சொல்லும் வித்தியாசமான படமாகும்.
தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக் கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரியமான எபிஸோடும் படத்தில் உள்ளது.
முழுக்க முழுக்க தேனி அருகில் உள்ள மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
மனதை மயக்கும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள இந்த ‘ஹர்காரா’ படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.









