full screen background image

ஹேப்பி ராஜ் – சினிமா விமர்சனம்

ஹேப்பி ராஜ் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மரியா இளஞ்செழியன் எழுதி, இயக்கியிருக்கிறார். ஜெய்காந்த் சுரேஷ் இணைத் தயாரிப்பாளராக உள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் ஸ்ரீகவுரிபிரியா இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருகிறார் அழகிய நடிகரான அப்பாஸ். மேலும் ஜார்ஜ் மரியம், ப்ரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மதன் கிரிஸ்டோபர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார், ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஆர்.கே. செல்வா எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார்; குமார் கங்கப்பா கலை இயக்கத்தைப் பார்கிறார். உடை வடிவமைப்பைப் பிரவீன் ராஜா கவனிக்கிறார். பத்திரிக்கை தொடர்பு பணிகளை ரேகா மேற்கொள்கிறார்.

இந்தக் கதை அடிப்படையில் தூய மற்றும் உண்மையான மகிழ்ச்சியை மையக் கருவாகக் கொண்டது. அதே சமயம் வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளையும் தொடுகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைதளங்களில்  உலாவும் வடிகட்டப்படாத எதிர்மறை உணர்வுகளால், நம் இயல்பு வாழ்க்கையில் அதிகரித்து வரும் மனக் குழப்பங்கள் ஆகியவற்றால் சூழப்பட்ட நிலைமைதான் இருக்கிறது. அப்படியொரு சூழலில் வாழ்ந்து வரும் ஒரு குடும்பத்தின் கதைதான் இந்த ஹேப்பி ராஜ் திரைப்படம்.

ஜி.வி.பிரகாஷின் அப்பாவான ஜார்ஜ் மரியம் ஒரு பள்ளி ஆசிரியர். அவருக்கு அந்த ஊர் முழுவதும் ஒரு பட்டப் பெயர் வைத்திருக்கிறார்கள். அந்த பட்டப் பெயரை சொல்லித்தான் அவரை கிண்டல் செய்கிறார்கள். இது ஜி,வி,பிரகாஷையும் தாக்குகிறது. “நீ அவரோட மகன்தானே?” என்று சொல்லி ஜி.வி.பிரகாஷையும் கிண்டல் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

சிறு வயதிலேயே இந்த அவமானத்தை சந்தித்துக் கொண்டே இருக்கும் ஜி.வி.பிரகாஷ் மனக் குழப்பத்தில் இருக்கிறார். இந்த மனக் குழப்பத்தை இன்னும் அதிகமாக்கும்விதமாக அவர் காதலித்த பெண் அதை ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருடைய அப்பாவின் பட்டப் பெயரை சொல்லி “நான் உன்னை திருமணம் செய்ய மாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் போகிறார்.

வீட்டுக்குள் தன்னுடைய அப்பாவிடம் சகஜமாக பேச முடியாமல், வெளியிலும் ஊர்க்காரர்கள் கேலி கிண்டலையும் தாங்க முடியாத ஜி.வி., தான் படித்த படிப்புக்கேற்ற வேலையை தேடி பெங்களூர் செல்கிறார்.

இங்கேதான் படத்தின் நாயகியான ஸ்ரீகௌரி பிரியாவை சந்திக்கிறார் முதல் சந்திப்பு மோதலாக இருக்கிறது. ஆனால் போகப் போக இருவருக்குள்ளும் பிடித்து போகிறது. ஸ்ரீகௌரிபிரியா மிகப் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் ஜி.வி.பிரகாஷின் அப்பாவித்தனமான பேச்சு.. அவருடைய நடத்தை, நடவடிக்கை அனைத்தையும் பார்த்துவிட்டு தன்னுடைய காதலில் உறுதியாக நிற்கிறார்.

கௌரிபிரியாவின் அப்பா, அம்மாவுக்கு திருமண நாள் வருகிறது. அதை மிகப் பெரிய அளவுக்கு ஹோட்டலில் கொண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில் கௌரியின் வீட்டில் பேசுவதற்காக தன்னுடைய அம்மாவை மட்டும் பெங்களூருக்கு வரச் சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால் அவருடைய அப்பா ஊரிலிருந்து சொந்த பந்தங்கள் அத்தனை பேரையும் மொத்தமாக அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார்.

இவ்வளவு கிராமத்து ஆட்களை பார்த்து அதிர்ச்சியில் கௌரி பிரியாவின் அப்பா அதிர்ச்சியாகிறார். இந்த நேரத்தில் ஜி.வி.பிரகாஷ் தரப்பினருக்கும் கௌரி பிரியாவின் அப்பா, அம்மாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட திருமணம் நின்று போகிறது.

இதன் பிறகு ஜி.வி.பிரகாஷ் என்ன செய்தார்?.. காதலியை தேடினாரா?.. அல்லது கௌரி பிரியா காதலனை தேடினாரா?.. இவர்களது திருமணம் நடந்ததா.. இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

காத்தமுத்து என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் தான் உண்மையாகவே இந்தப் படத்தின் ஹீரோ. தன்னுடைய உடல் அமைப்பு, முக அமைப்பு.. இதை வைத்து ஊர்க்காரர்கள் சொல்லும் கிண்டல் கேள்வியை எல்லாம் தாங்கிக்கொண்டு அவங்க கிடக்கிறானுக என்ற அலட்சியமாக சொல்லிவிட்டு மகனை வளர்ப்பதில் கண்ணும், கருத்துமாய் இருக்கும் அவருடைய அந்த பாசத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.  அழகாகவே நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ்சில் ஜிவி பிரகாஷை சமாதானம் செய்வதற்காக அவர் பேசுகின்ற அந்தப் பேச்சு 30 வருட கால அவருடைய மௌனத்தின் வெளிப்பாடாகவே நமக்குத் தெரிகிறது. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் ஜார்ஜ் மரியான். பாராட்டுக்கள்.

ஜி.வி.பிரகாஷுக்கு வழக்கமான அதே போன்ற கதாபாத்திரம்தான். அவருடைய தோற்றம் இப்போதும் கல்யாணம் ஆகாத ஒரு பள்ளி இறுதி ஆண்டு அல்லது கல்லூரி மாணவராக தோற்றமளிப்பதால் இதுபோன்ற எத்தனை படங்களில் வேண்டுமானாலும் அவர் நடிக்கலாம். அப்படி ஒரு கதை. திரைக்கதையில் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் அவமானத்தை சந்திக்கும்போதெல்லாம் அப்பாவை கண்டித்துப் பேசுவதிலும், கோபமாக பேசுவதிலும்.. தாங்க முடியாத வேதனைகள் இருப்பதாகவே காட்டிக் கொள்கிறார். அதோடு இடைவேளைக்கு பின்பு காதலியுடன் அந்த காதலை தொடர வேண்டும் என்கின்ற அவசரத்தில் இரண்டு பக்கம் இருப்பவர்களையும் சமாளிப்பதற்காக அவர் படுகின்ற அல்லல் கொஞ்சம் நமக்கு நகைச்சுவையை தந்திருக்கிறது.

நாயகி ஸ்ரீகௌரிப்பிரியா புதுமுக நடிகை. ஆனாலும் பல படங்களில் நடித்திருப்பது போன்ற ஒரு நடிப்பை காண்பித்திருக்கிறார். அப்பா பக்கமும் பேச முடியாமல், காதலன் பக்கமும் பேச முடியாமல்… சில இடங்களில் அவர் தவிக்கின்ற தவிப்பு “ஏண்டா இந்தப் பிள்ளையை போட்டு பாடா படுத்துறீங்க?” என்று நம்மை கேள்வி கேட்கவே வைத்துவிட்டது.

ஜார்ஜ் மரியானுக்கு மனைவியாக நடித்திருக்கும் கீதா கைலாசமும் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். அப்பா, மகனுக்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் சராசரி அம்மா, மனைவி என்ற கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.

நீண்ட வருடங்கள் கழித்து தமிழ் திரையில் முகம் காட்டியிருக்கும் நடிகர் அப்பாஸூக்கு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவர் என்கின்ற கெத்து கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. குடும்ப விழாவில் மிகப் பெரிய பணக்காரர்களை அழைத்து இருக்க அந்த நிகழ்வையே காமெடியாக்கும் விதத்தில் ஜார்ஜ் மரியான் தன்னுடைய உறவினர்களுடன் வர அங்கு நடக்கும் பிரச்சினைகளில் அப்பாஸ் தன்னுடைய பணக்கார திமிரான நடிப்பை காண்பித்திருக்கிறார்.

மதுரை முத்துவை ஜி.வி.பிரகாசுக்கு நண்பனாக காண்பித்திருப்பதே காமெடிதான். இவரும், இன்னொரு நண்பரும் சேர்ந்து பேசுகின்ற சில பிட்டுகள் கொஞ்சம் சிரிப்பை தந்தன. சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் பிரார்த்தனை நாதனும் நம்மை கவர்கிறார். அதிலும் முதல் காட்சிகளையே ஜி.வி.பிரகாஷை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு காரணமாக உங்க அப்பாதான் என்று இந்தப் படத்தின் மைய கருத்தை அவர் ஆன் செய்யும் பொழுது வெகுவாக ரசிக்க முடிகிறது.

ஆனாலும் ஹீரோவை உயர்த்த வேண்டும் என்பதற்காக பிரார்த்தனாவின் கதாப்பாத்திரத்தை பாதியாக உடைத்து அவருடைய வாழ்க்கை டைவர்ஸ் வரைக்கும் போய்விட்டதாக சொல்லி ஜி.வி.பிரகாஷை உயர்த்தி பிடித்து இருப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல இயக்குநரே..!

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு அழகு. அற்புதம். கிராமத்து காட்சிகளின் அழகு திரையில் தெரிகிறது. பெங்களூரையும் சுற்றி சுற்றி வளைத்து அழகாக்கி காட்டி இருக்கிறார். பாடல் காட்சிகளிலும் ஹீரோயினை மிக அழகாக காட்டி நல்ல பெயர் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களைவிடவும், பின்னணி இசையே ஓகே என்று சொல்லலாம். பாடல்களை இன்னும் கொஞ்சம் கேட்பது போல அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆர்.கே.செல்வா தன்னுடைய படத் தொகுப்பு வேளையில் இன்னும் கொஞ்சம் தீவிரம் காட்டி நிறைய ரிப்பீட் ஆகின்ற காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டு 20 நிமிடங்களைக் குறைத்து இருந்தால் படம் இன்னமும் ஈர்ப்பாக இருந்திருக்கும்.

இப்போது வருகின்ற திரைப்படங்களில் எல்லாம் ஒரு விஷயத்தை நேரடியாக 2 வார்த்தைகளில் சொல்லாமல், முறுக்கு சுற்றுவதை போல சுற்றி சுற்றி சுற்றி இடைவேளைவரைக்கும் கொண்டு வருகிறார்கள். அதன் பின்பு மறுபடியும் சுற்ற ஆரம்பித்து கிளைமாக்ஸில்தான் கையில் மாவோடு நிற்கிறார்கள். அப்படித்தான் இந்தப் படத்தையும் இயக்குநர் உருவாக்கி இருக்கிறார்.

ஹேப்பி ராஜ்’ என்ற பெயர் கதையின் மைய உணர்வை எப்போதும் நினைவூட்டும் ஒரு குறியீடு ஆகும். முழுப் படத்திலும் ‘ஹேப்பி’ என்ற வார்த்தை பல முறை ஒலிக்கிறது. அது வெறும் சொல் அல்ல… நம்பிக்கையூட்டும் ஒரு தாள லயம் சேர்ந்த மந்திரம் போன்றதாக நமக்குத் தோன்றுகிறது.

இந்த “ஹேப்பி ராஜ்” படம் மகிழ்ச்சியான மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு அனுபவமாக அமைந்துள்ளது. மனதை நிம்மதியாக்கும். கோபம், புன்னகை,  மகிழ்ச்சி அனைத்தும் நம் கையில்தான் உள்ளது என்பதை உணர்த்துகிறது.

வாழ்க்கையில் நம்பிக்கையுடன் போராடுபவர்களுக்கான ஒரு படைப்பாக இது வந்துள்ளது. படத்தில் வரும் காட்சிகள் அனைத்தையும், நமக்கானது, நம் வாழ்க்கைக்கானது என்ற உணர்வை பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளது.

உருவக் கேலி செய்வது ஒருவரை உயிருடன் சமாதி கட்டுவது போன்றது. இந்த விஷயத்தைத்தான் இயக்குநர் சொல்ல வந்திருக்கிறார். ஆனால் இடையிடையே கதை வேறு வேறு இடங்களில் எல்லாம் போய் உட்கார்ந்து கொண்டு நகர மறுத்ததினால் நமக்கும் கொஞ்சம் போர் அடிப்பது போலாகிவிட்டது.

ஒரு அப்பா மகனுக்குமான அந்த பாச போராட்டத்தை இன்னமும் நிறைய எமோஷன்ஸ் காட்சிகளை வைத்து காட்டி இருக்கலாம். இயக்குநர் இதுவே போதும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது. அவ்வப்பொழுது படத்தின் மையக் கதையில் நாம் மாட்டிக் கொள்ளும்போது, அடுத்த சில நிமிடங்களில் கதையை வேறு பக்கம் நகர்த்துவதாக படத்தைக் கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர்.

எல்லா பிள்ளைகளுக்கும் முதல் ஹீரோ அவர்களின் அப்பாவாகத்தான் இருக்கும். ஆனால் அதே அப்பாவை வைத்து கேலி கிண்டல் செய்து என்கின்ற விஷயத்தை பிள்ளைகள் எப்படி அணுக வேண்டும் என்பதை இந்த படத்தில் கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

ந்த ஒரு காரணத்துக்காகவே இந்தப் படத்தை நிச்சயமாக அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டும். அப்பா, அம்மாக்களின் தியாகம்தான் இன்றைக்கு அவர்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். உயர்ந்த பின்பு திரும்பி பார்க்கும் பொழுது தன்னுடைய தாய், தந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு தன்னை வளர்த்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்தாலே அந்த தாய் தந்தையர் நிச்சயம் மகிழ்வார்கள்.

அப்படி ஒரு விஷயத்தைத்தான் இந்தப் படத்தில் இயக்குநர் கொடுத்திருக்கிறார். இதையே இன்னமும் கொஞ்சம் சிறந்த திரைக்கதையிலும், வசனத்திலும் கொடுத்திருக்கலாம் என்பதுதான் நமது கருத்து.

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம் இது.

மிஸ் பண்ணிராதீங்க..!

RATING : 3.5 / 5

Our Score