full screen background image

படத்தின் பிரமோஷனுக்குக்கூட வரலைன்னா அவங்க என்ன ஹீரோயின்..?

படத்தின் பிரமோஷனுக்குக்கூட வரலைன்னா அவங்க என்ன ஹீரோயின்..?

படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அதில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் வந்தாலும் அது பப்ளிசிட்டிதான். வராவிட்டாலும் அது பப்ளிசிட்டிதான்.. எந்த பப்ளிசிட்டி கூடுதலாக கிடைக்கும் என்பது படத்தைப் பொறுத்ததுதான்..

‘காந்தர்வன்’ என்றொரு படம். ஆரம்பித்து 2 வருடங்களாகிவிட்டது. இப்போதுதான் பிரச்சினைகளையெல்லாம் தாண்டி ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதற்கு இப்படத்தில் ஹீரோயினாக நடித்த மலையாள நடிகை ஹனிரோஸ் வரவில்லை.

அந்த விழாவிலேயே படத்தின் இயக்குநர் சலங்கைதுரை இதனைக் குறிப்பிட்டு “அந்த நடிகையை போன் போட்டு கூப்பிட்டும் வர மறுத்துவிட்டார். என்ன செய்வது?” என்று கேள்வி கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை.. சென்னையில் வசிப்பவரென்றால் கேட்கலாம். மாநிலம்விட்டு மாநிலம் போய் கேட்க முடியுமா..?

இதோ இப்போது படம் ரிலீஸுக்குத் தயார். இந்த மாதம் 28-ம் தேதி கண்டிப்பாக ரிலீஸாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் தயாரிப்பாளரும், இயக்குநரும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசி கட்ட பிரஸ் மீட் நிகழ்ச்சிகளுக்காகவாவது ஹீரோயின் வந்து சென்றால் படத்திற்கு மிகப் பெரிய அளவுக்கு பப்ளிசிட்டி கிடைக்குமே என்று மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்களாம்.. ம்ஹூம் பலனில்லை. போனையே எடுக்கவில்லையாம்..

வேறு வழியில்லாமல் இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் இயக்குநர். “இப்படியிருந்தால் திரைத்துறை எப்படி முன்னேறுவது..? படம் எப்படி ஜெயிக்கும்..?” என்கிறார் இயக்குநர்.

இவர் என்றில்லை.. இப்போது தமிழில் நடித்து வரும் பெரிய நடிகைகள் அனைவருமே கோடம்பாக்கம் என்றாலே இளக்காரமாகத்தான் பேசுகிறார்கள். பார்க்கிறார்கள். கூப்பிட்டவுடன் ஓடி வந்து நடிக்கிறார்கள். கனத்த பையோடு ஊர் திரும்புகிறார்கள். ஆனால் பிரமோஷனுக்கு அழைத்தால் வர மாட்டார்கள்.

இதே சமயம் தெலுங்குலகில் சாதாரணமான ஒரு ஹீரோவுடன்கூட ஜோடி போட்டு நடிப்பார்கள். அங்கே நடக்கும் பிரமோஷன்களுக்காக மாவட்டம்தோறும் ஓடுவார்கள். மேடைகளில் சரளமாக பேசுகிறார்கள். ரசிகர்களுடன் உரையாடுகிறார்கள். ஆனால் இங்கே.. தமிழுக்கு மட்டும்தான் ஏன் இப்படி ஓரவஞ்சனை செய்கிறார்களோ தெரியவில்லை..?! நயன்தாரா, காஜல் அகர்வால், தமன்னா, ஹன்ஸிகா மோத்வானி என்று பெரிய நடிகைகளும் இதில் அடக்கம்..

இந்த காந்தர்வன் பட விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் என்ன செய்யும் என்று யாருக்கும் தெரியாது..! ஏதாவது செய்தால்.. அதிசயம் நடந்தால்.. அந்த நடிகையை சென்னையில் பார்க்கலாம். இல்லாவிடில் 2-வது ஹீரோயினை வைத்தே பிரஸ் மீ்ட் நிகழ்ச்சிகளை சமாளிக்க வேண்டியதுதான்..!

Our Score