full screen background image

கட்டா குஸ்தி – சினிமா விமர்சனம்

கட்டா குஸ்தி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது விஷால் ஸ்டூயோஸ் நிறுவனத்தின் சார்பாகவும், தெலுங்கு நடிகரான ரவி தேஜா தனது RT TeamWorks நிறுவனத்தின் சார்பாகவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், காளி வெங்கட், கஜராஜ், லிஸி ஆண்டனி, ஜா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – செல்லா அய்யாவு, ஒளிப்பதிவு – ரிச்சர்டு எம்.நாதன், இசை – ஜஸ்டின் பிரபாகரன், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, கலை இயக்கம் – ஜெ.உமேஷ், சண்டை பயிற்சி இயக்கம் – அன்பறிவ், பாடல்கள் – விவேக், நடனப் பயிற்சி இயக்கம் – பிருந்தா, தினேஷ், சாண்டி, பத்திரிகை தொடர்பு – Team Aim.

வருடக் கடைசியில் குடும்பத்துடன் பார்த்து சிரிக்கும்படியாக வந்திருக்கும் படம் இது.

பெயர் தெரியாத ஊரில் அம்மா, அப்பா இல்லாத நிலையில் மச்சு வீட்டுடன், 20 ஏக்கர் தென்னந்தோப்புடன் கல்யாணத்துக்குத் தயாரான நிலையில் ஹாயாக, கபடி வீரராக வாழ்கிறார் விஷ்ணு விஷால்.

இவரது மாமனும், உள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவருமான கருணாஸ் கடைந்தெடுத்த ஆணாதிக்க சிந்தனை கொண்டவர். இவருடைய இந்த சிந்தனையை தத்தெடுத்துக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷால், கல்யாணத்துக்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்.

தனக்கு மனைவியாக வரப் போகும் மனைவிக்கு முடி நீளமாக இருக்க வேண்டும். தன்னைவிட குறைந்த படிப்பே படித்திருக்க வேண்டும் என்கிற ஆசையில் பெண் தேடும் படலத்தை நடத்தி வருகிறார் விஷ்ணு. பெண்தான் அமையவில்லை.

பாலக்காடு பக்கத்தில் வசித்து வரும் நாயகியான கீர்த்தி என்னும் ஐஸ்வர்யா லட்சுமி பி.எஸ்.சி. கணிதம் படித்தவர். குஸ்தி போட்டியில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்றவர். இவருடைய சித்தப்பாவான முனீஸ்காந்தும், கருணாஸும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

இந்த நண்பர்கள் எதிர்பாராத சூழலில் சந்தித்துக் கொள்ள.. விஷ்ணு விஷால் முனீஸ்காந்துக்கு அறிமுகமாகிறார். அவருடைய நிபந்தனைகளைக் கேட்டாலும் குஸ்தி வீராங்கனை என்பதாலேயே இன்னும் திருமணமாகாமல் இருக்கும் தனது அண்ணன் மகளை விஷ்ணுவின் தலையில் கட்ட திட்டம் தீட்டி அதில் வெற்றியும் காண்கிறார் முனீஸ்காந்த்.

முனீஸ்காந்தின் சதி வேலையறியாமல் வாழத் துவங்கும் விஷ்ணு அவ்வப்போது தனது மாமாவான கருணாஸின் மந்திராலோசனையைக் கேட்டு மனைவியிடம் ஆணாதிக்கத்தனமாக நடந்து கொள்கிறார். இந்த நேரத்தில் ஊராட்சி மன்றப் பணத்தில் கை வைத்ததற்காக கருணாஸ் ஜெயிலுக்குப் போகிறார்.

இவர் உள்ளே போன நேரத்தில் விஷ்ணுவின் உள்ளூர் எதிரியான பேக்டரி அதிபர் விஷ்ணுவை கொல்ல ஆட்களை அனுப்ப தனது கணவரை காப்பாற்ற சண்டையில் களம் இறங்குகிறார் குஸ்தி நாயகியான ஐஸ்வர்யா. முடிவில் கணவர் காப்பாற்றப்பட்டாலும் அவருடைய நீளமான ஒட்டு முடியின் தரிசனம் விஷ்ணுவுக்குத் தெரிந்து விடுகிறது.

உண்மை தெரிந்த விஷ்ணு அப்போதைக்கு அமைதியாகிறார். ஆனால் அதன் பின்பு ஊரிலும், வெளியிலும் மனைவிக்கு மட்டுமே தனித்து கிடைக்கும் மரியாதை அவருடைய ஈகோவைத் தூண்டிவிட மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் சிறையில் இருந்து வெளியில் வரும் மாமன் கருணாஸ் விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்து சண்டையிட இதில் ஐஸ்வர்யாவிடம் அடி வாங்கி அவமானப்படுகிறார் கருணாஸ்.

தகவல் விஷ்ணுவுக்குத் தெரிய வர.. மனைவியை பாலக்காட்டுக்கே திருப்பியனுப்புகிறார். இடையில் மாமன் கருணாஸ், விஷ்ணுவுக்கே தெரியாமல் ஐஸ்வர்யாவுக்கு டைவர்ஸ் நோட்டீஸும் அனுப்பி வைக்கிறார்.

ஆனாலும் மனைவி முன்னாள் தான் வெறும் பூஜ்யம் என்பதை சொல்லி சொல்லி ஊர்க்காரர்கள் வெறுப்பேற்ற பேசாமல் குஸ்தி மேடையில் மனைவியுடனேயே மோதி ஜெயித்தால் என்ன என்ற கிறுக்குத்தனமான ஐடியாவை உடன் இருக்கும் நபர்கள் ஊதிவிட.. பாலக்காட்டுக்கே போய் இதற்காக மோதி தேதியைக் குறித்து வாங்குகிறார்கள் விஷ்ணுவின் உறவுகள்.

இப்போது பிரிந்திருக்கும் கணவனும், மனைவியும் மோதும் குஸ்தி போட்டி என்ற விளம்பரத்துடன் பரபரப்பாகிறது குஸ்தி களம். குஸ்தி போட்டி நடந்ததா..? இல்லையா..? யார் ஜெயித்தார்கள்…? டைவர்ஸ் கேஸ் என்ன ஆனது..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

படத்தில் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லஷ்மி இருவரும் போட்டி போட்டி நடித்து கை தூக்கிவிட்டிருக்கிறார்கள்.

அப்பாவியான தோற்றத்தில் உள்ள விஷ்ணு விஷால் அதே மன நிலையையும் பிரதிபலித்திருக்கிறார். கருணாஸ் சொல்லும் ஆணாதிக்க சொல்லாடல்களை அப்படியே நம்பும் அவரது முகபாவனைகள்தான் தியேட்டரில் கை தட்ட வைத்திருக்கிறது.

தனது மனைவி தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்று நினைத்து அவர் செய்யும் சில தில்லாலங்கடி விஷயங்களில் மகளிரையே சிரிக்க வைத்திருக்கிறார் விஷ்ணு. தன் மனைவிக்குக் கிடைக்கும் பெருமையால் தான் அவமானப்படும் உணர்வையும் விஷ்ணு தனது நடிப்பில் உணர்த்தியிருக்கிறார்.

படத்தின் பிற்பாதியில் விஷ்ணுவின் ஆதிக்கம்தான். ஹரீஸ் பெராடியிடம் அவருடைய மனைவியைப் பற்றிக் கேட்டு தான்தான் அவசரப்பட்டு விட்டோமோ என்றெண்ணி வருந்தும் காட்சியிலும் அந்த டோனை தனது நடிப்பிலேயே வரழைத்திருக்கிறார்.

கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் தனது கோபம், ஆத்திரம், இயலாமை, மனைவி மீதான பாசம் என்று அனைத்தையும் காட்டி சண்டையிட்டிருக்கிறார். இதுவே சிறப்புதான்.

நாயகன் விஷ்ணுவா.. அல்லது ஐஸ்வர்யா லக்ஷ்மியா என்ற சந்தேகமே வந்துவிட்டது.

குஸ்தி வீராங்கனையாக அறிமுகமாகும் காட்சியில் அச்சு அசலாக நிஜ வீராங்கனையை ஜெராக்ஸ் எடுத்ததுபோலவே இருக்கிறார். அந்த ஆக்ரோஷமும், அவர் காட்டும் உடல் மொழியும் மிரள வைக்கிறது.

திருமணமானவுடன் அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு கணவருக்காக அமைதியாக, அடக்கமான மனைவியாக வலம் வருபவர், கணவரைக் காப்பாற்ற சேலையைத் தூக்கிக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கும்போது சபாஷ் என்று கை தட்ட வைத்திருக்கிறார். தமிழுக்கு நல்ல ஆக்‌ஷன் ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

ஆணாதிக்க மாமனான கருணாஸ் பேசும் பல வசனங்கள் அப்பாவி கணவன்மார்களை தியேட்டரில் கை தட்ட வைத்து வீட்டில் உதை வாங்க வைக்கிறது. அப்படியொரு ஆம்பள திமிரை வசனத்திலும், நடிப்பிலும் காண்பித்திருக்கிறார் கருணாஸ்.

சித்தப்பாவாக தொந்தியுடன் நடித்திருக்கும் முனீஸ்காந்த் ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தை நடத்துவதில் தவறில்லை என்பதுபோல் கல்யாணத்தை செய்துவைத்துவிட்டு தவிப்பதும், அண்ணன் மகளுக்காகக் கடைசியில் இவர்களிடத்தில் கெஞ்சும்போதும் தனது தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார்.

மேலும் வக்கீல் நண்பனாக நடித்திருக்கும் காளி வெங்கட்டின் மேக்கப் பாக்ஸ் காமெடியும் அவ்வப்போது அடிக்கும் சிற்சில விட்டுகளும் கை தட்ட வைக்கிறது. கிங்க்ஸ்லீயின் சில காமெடி வசனங்களும் கை தட்டலுக்கு உதவியிருக்கிறது.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு முதல் காட்சியில் இருந்தே படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. பாலக்காட்டு காட்சிகளில் கேரளத்தின் அழகையும் கொடுத்திருக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமியின் அழகை பாடல் காட்சிகளில் இன்னும் கூட்டியிருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் அதைவிட பின்னணி இசை அபாரம். அதிலும் அந்தக் கோவில் சண்டை காட்சியில் ஐஸ்வர்யாவின் ருத்ர தாண்டவத்திற்கு லீட் கொடுக்கும் காட்சியில் அசத்தல் பி.ஜி.எம்.மை கொடுத்து கவர்ந்திழுக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் அன்பறிவ் சகோதரர்கள் பிரிந்து மேய்ந்திருக்கிறார்கள். குஸ்தி சண்டையைவிடவும் அந்தக் கோவில் சண்டை காட்சிதான் சூப்பர். ஐஸ்வர்யாவுக்கு ஏற்றபடி காட்சிகளை வடிவமைத்து தந்து படத்திற்கு மிகப் பெரிய ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.  

படத் தொகுப்பாளரான ஜி.கே.பிரசன்னாவின் படத் தொகுப்புப் பணியில் இயக்குநரின் பங்களிப்பும் மிகச் சரியாகவே அமைந்திருக்கிறது. அதனால்தான் கச்சிதமான நறுக்கலில் படத்தின் திரைக்கதை சரியாக விறுவிறுப்பு குறையாமல் கடைசிவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

காட்சிக்கு காட்சி காமெடி தெறிக்க, திரையரங்கில் மக்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்டாக அமைந்திருக்கிறது இத்திரைப்படம்.

மிக பிரமாதமான வசனங்களை எழுதியிருக்கிறார் இயக்குநர். காமெடி காட்சி, சீரியஸ் காட்சி, சென்டிமெண்ட் காட்சிகள் என்று அனைத்திலும் தற்போதைய காலக்கட்டத்திற்கேற்ப ஆண், பெண்களை ஒட்டு மொத்தமாய் உரித்திருக்கிறார் இயக்குநர்.

கருணாஸ் மனைவிகளைப் பற்றிப் பேசும் காட்சியில் மனைவிகளே சிரித்துவிடுவார்கள்.  அதேபோல் காளி வெங்கட் தன் மனைவி பற்றிப் பேசிவிட்டு நொடியில் மாறும் காட்சியில் ஆண்களும் சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஆண்களைப் பற்றி பெண்களும், பெண்களைப் பற்றி ஆண்களும் மாறி, மாறிப் பேசும் அந்த நகைச்சுவைக் காட்சியில் மொத்தக் குடும்பமும் ஜோராக கை தட்டி ரசிக்கின்றனர். இந்தக் காட்சி இனிமேல் சமூக வலைத்தளங்களில் வைரலானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சவரி முடியைத் துவைக்கும் காட்சியிலும் மொத்தத் தியேட்டரும் அதிர்கிறது. அந்தக் காட்சியில் தன்னுடைய வலியை வெளிக்காட்ட முடியாமல் தவித்து ஐஸ்வர்யா தன் நடிப்பையும் தாண்டி ஒரு சோக உணர்வை நமக்குள் கடத்தியிருக்கிறார்.

“மத்த நாட்டுல எல்லாம் போட்டியில ஜெயிக்க எதிரிகளோட சண்டை போடணும். ஆனால் இந்தியால மட்டும்தான் முதல்ல நம்ம குடும்பத்தோட சண்டை போடணும்” போன்ற வசனங்கள் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் யதார்த்த வாழ்க்கையை சொல்கிறது.

கருணாஸின் மனைவியான லிஸி பேசும் பெண் விடுதலைக்கான வசனங்கள் ஏற்கக் கூடியதுதான் என்றாலும் அவரது கதாப்பாத்திரம் லாஜிக் எல்லை மீறலாக இருப்பது ஒரு நெருடலாகவும் இருக்கிறது. பி.ஏ. இங்கிலீஸ் லிட்ரேச்சர் படித்தவரா இத்தனையாண்டுகளாக அடிமைத்தனத்தில் உழன்று கொண்டிருக்கிறார்..? நம்ப முடியவில்லை.

படத்தின் இடைவேளைக்குப் பின்னான காட்சிகளிலும் சிற்சில இடங்களிலும் இயக்குநர் தனக்குத் தோதாக திரைக்கதையை நகர்த்தியிருப்பது தெரிகிறது. உதாரணமாக  கருணாஸ் ஜெயிலுக்குப் போயிருக்கும் நேரத்தில் இங்கே ஐஸ்வர்யா பற்றிய உண்மை தெரிய வருவது.. ஐஸ்வர்யாவின் மெடல்கள் விஷ்ணுவின் வீட்டில் இருப்பது.. விஷ்ணுவுக்குத் தெரியாமல் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவது.. கோச், விஷ்ணு-ஐஸ்வர்யா சந்திப்பை நடத்தவிடாமல் செய்வது.. கிளைமாக்ஸில் ஐஸ்வர்யா பற்றிய உண்மையை வெளியிடாமல் மறைப்பது.. என்று சில காட்சிகளை வழக்கான சினிமா பார்மெட்டில் கொடுத்திருந்தாலும் ரசிப்பதுபோலத்தான் வைத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முதல் பாதியில் வெறுமனே சிரிக்க மட்டுமே வைத்து, இரண்டாம் பாதியில் சிரிப்புடன் சீரியஸாகவும் சில விஷயங்களை பேசியுள்ளது படம். தற்போதைய குடும்ப வாழ்க்கையில் பெண்ணின் முக்கியத்துவத்தை ஆண்களே ஏற்றுக் கொள்ளும் வகையில் இத்திரைப்படம் பேசியிருப்பதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி..!

இதுவரையிலும் நாம் பார்த்திராத ஒரு வித்தியாசமான கதைக் களத்தில், அதைவிட வித்தியாசமான திரைக்கதையில் அனைத்துத் தரப்பினரும் ரசிக்கக் கூடிய வகையில் வசனங்களை எழுதி, மிகத் திறமையான இயக்கத்தால் அழகுபடி படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.

படத்தின் கதைக் கரு என்னவோ பெண்களுக்கு வேண்டிய சுதந்திரத்தையும், குடும்பப் பாரத்தை சுமக்கும் நிலையில் அவர்கள் வெளிப்படுத்தாத வலிகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த வலி கடத்தல் காட்சிகளை வித்தியாசமான முறையில் நகைச்சுவை கலந்து காட்சிப்படுத்தியிருப்பதுதான் படத்தின் வெற்றிக்குக் காரணம்.

சொல்வதற்கு சிற்சில  குறைகள் இருந்தாலும், இப்போதைய காலக்கட்டத்திற்குத் தேவையான விஷயத்தை, ஏற்கத் தகுந்தவகையில் சொல்லி, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் உருவாகியிருக்கும் படம் என்பதால் இந்தப் படத்தை வாழ்த்தி வரவேற்போம்.

RATING : 4 / 5

Our Score