2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிட குஜராத்தி படமான ‛செல்லோ ஷோ’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பேன் நலின் என்ற இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படம் 9 வயது சிறுவனை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
இந்தப் படத்தில் பவின் ராபரி, பவேஷ் மலி, ரிச்சா மீனா, திபேன் ராவல், பர்வேஸ் மேத்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இயக்குநரான பேன் நலின் ஏற்கெனவே ‘Angry Indian Goddesses’, ‘Samsara’ and ‘Valley of Flowers’ ஆகிய படங்களை இயக்கி புகழ் பெற்றவர்.
ஒரு 9 வயது எளிய கிராமத்து சிறுவனின் சினிமா மீதான காதல் பற்றி யதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஏற்கனவே சில சர்வதேச பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
Robert DeNiro’s Tribeca Film Festival-ல் முதல் திரைப்படமாக இந்தப் படம் திரையிடப்பட்டது. மேலும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற 66th Valladolid Film Festival-ல் தங்க விருதினை இந்தப் படம் பெற்றது. இத்திரைப்படம் இந்தியாவில் வரும் அக்டோபர் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள 95-வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் இந்தப் படம் அனுப்பப்படுவதாக இந்திய திரைப்பட சம்மேளனம் அறிவித்துள்ளது.
ஆஸ்கர் போட்டிக்கு அனுப்ப இந்தாண்டு இந்தியாவின் பல மொழிகளில் இருந்தும் படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. குறிப்பாக ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’, விவேக் அக்னி ஹோத்ரியின் ‘காஷ்மீர் பைல்ஸ்’ ஆகிய படங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. ஆனாலும், இறுதியில் ‛செல்லோ ஷோ’ படம் தேர்வாகியுள்ளது.









