full screen background image

கிராணி – சினிமா விமர்சனம்

கிராணி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை விஜய் மேரி யுனிவர்சல் மீடியா நிறுவனத்தின் சார்பில் டி.விஜயமேரி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் வடிவுக்கரசி, திலீபன், சிங்கம்புலி, ஜகராஜா, ஆனந்த்நாக், அபர்ணா, மாஸ்டர் கணேஷ்யம், பேபி சாண்ட்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஏ.மணிகண்டன், இசை – டாக்டர் செல்லையா பாண்டியன், எழுத்து, இயக்கம் – விஜயகுமாரன்.

ஆங்கிலத்தில் பாட்டியை குறிக்கும் GRANMY(கிராணி) என்ற வார்த்தையின் தமிழாக்கம்தான் இந்தப் படத்தின் தலைப்பு.

ஆனந்த் நாக் தன்னுடைய மனைவி, மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளிகளான மகன் மகளுடன் தன் மனைவியுடன் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார். லண்டன் வாழ்க்கை போரடித்து போக இனி அடுத்து தன்னுடைய கிராமத்திலேயே விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். அந்த ஊரிலேயே மிகப் பெரிய வீடு அவருடைய வீடு என்பதால் பணத்துக்கு பஞ்சமில்லை என்பதாலும் எப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்.

கேரளா – தமிழக எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், 10 வயதான ஒரு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் சப்-இன்ஸ்பெக்டரான தீலீபனுக்கு, ஒரு தகவல் கிடைக்கிறது. அந்த தகவலை வைத்து தன்னுடைய விசாரணையை தீவிரப்படுத்துகிறார். 

ஒரு நாள் ஆனந்த் நாக்கின் வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாட்டி மயங்கி விழுந்து கிடக்கிறார். அவரை வீட்டுக்குள் தூக்கி வந்து அவருக்கு உணவளித்து பாதுகாக்கிறார் ஆனந்த் நாக்.

ஊர்த் தலைவரான கஜராஜ் அந்த ஒச்சாயி பாட்டியைப் பற்றிய உண்மைக் கதையைச் சொல்கிறார். ஆனால் ஆனந்த் நாக் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இதே நேரம் ஒச்சாயி பாட்டிதான் அந்த வீட்டின் உண்மையான உரிமையாளர் என்பது கணவன்-மனைவி இருவருக்கும் தெரிய வருகிறது.

இதே நேரம் திலீபனின் விசாரணை கடைசியாக பாட்டி வடிவுக்கரசியையும் ஆனந்த நாக்கின் வீட்டையுமே காட்டுகிறது.

உடல் நலம் தேறும் பாட்டி வடிவுக்கரசியை குழந்தைகள் பார்த்தாலே பயம் கொள்கின்றன. பாட்டி செய்வதெல்லாமே ஒரு மர்மமும், திகிலும் கலந்த கலவையாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து அந்த வீட்டில் அடுத்தடுத்து சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. மாற்றுத் திறனாளியான அந்த இரண்டு குழந்தைகளையும் கொலை செய்ய முயல்கிறார் பாட்டி வடிவுக்கரசி.

இறுதியில் என்ன நடந்தது..? அந்தப் பாட்டி ஏன் கொலை செய்ய முயல்கிறார்?.. அந்த வீட்டில் என்னென்ன அசம்பாவிதங்கள் நடந்தன? கொலை குற்றவாளியை போலீஸார் கைது செய்தார்களா?.. இல்லையா?.. என்பதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.

சஸ்பென்ஸ், திகில் திரில்லர் என்று அனைத்தையும் கலந்து ஒரு படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விஜயகுமாரன். பேய் கதைகளில் இது ஒரு புதுமையான ட்ரெண்டாக அந்த குழந்தைகளின் இதயத்தை திருடுவதற்காக அந்த பாட்டி வடிவுக்கரசி இவ்வளவு வேலையும் செய்கிறார் என்று கதை எழுதப்பட்டிருப்பதால் அந்த இதயத்தை வைத்து அந்த பாட்டி என்ன செய்யப் போகிறார் என்பதற்கான முழு விளக்கத்தையும் கொடுக்காமலேயே இயக்குநர் நழுவி இருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

ஆனால் திகில் படத்தை கொடுப்பதற்காக வீட்டில் இருக்கும் அறைகள், கதவுகள், ஜன்னல்கள் ஒவ்வொன்றிற்கு பின்பும் மர்மம் இருப்பதாக படத்தை மிக மிக ஸ்லோவாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர்.

ஒரு வித்தியாசமான பயப்படும்படியான ஒரு மேக்கப்பில் பாட்டியாக நடித்திருக்கும் வடிவுக்கரசியை நிச்சயமாக மனதார பாராட்ட வேண்டும். இப்படி ஒரு மேக்கப் இந்த வயதில் போட்டு கொண்டு நடிப்பது என்பது சத்தியமாக யாராலும் முடியாது. ஏனென்றால் மேக்கப்புக்காக மட்டுமே 12 மணி நேரம் செலவழிக்க வேண்டும். தீவிரமான உழைப்பு, நம்பிக்கை, டெடிகேஷன், அர்ப்பணிப்பு தன்மை… இருந்தால் மட்டுமே இது எல்லாம் சாத்தியமாகும். வடிவுக்கரசி தன்னுடைய நடிப்புலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இந்த படத்தை நிச்சயமாக, தைரியமாக வெளியில் சொல்லலாம். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு மிரட்டலாக இருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக தான் யார் என்பதை அந்த வீட்டினருக்கு காட்டுகின்ற வகையில் அவர் வெறுமனே தன்னுடைய முகத்தை வைத்தே பயமுறுத்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் நமக்கும் திகிலை ஊட்டியிருக்கிறார். பாட்டிக்கு நமது வாழ்த்துக்களும்.. பாராட்டுக்களும்.

ஆனந்த் நாக்கும், அவருடைய மனைவியாக நடித்த அபர்ணாவும் தங்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள். ஓவராக பேசும் ஏட்டு சிங்கம் புலி, எப்படியாவது இந்தக் கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்துவிட துடிக்கும் சப்-இன்ஸ்பெக்டரான திலீபனும் சேர்ந்து படத்தை நகர்த்துவதற்கு திரைக்கதையில் பெரிதும் உதவி இருக்கிறார்கள். ஆனாலும், சிங்கம் புலியின் அந்த தொண தொண பேச்சு கொஞ்சம் நமக்கு எரிச்சலையும் தந்திருக்கிறது.

ஊர் தலைவரான கஜராஜ் ஊர் கோவிலில் சாமியாடிவிட்டு அந்த சாமியை இந்த வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்துகின்றபொழுது ஏதோ பெரிதாக செய்யப் போகிறார் என்று நினைத்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

இது சஸ்பென்ஸ், திரில்லர் திரைப்படம் என்பதால் ஒளிப்பதிவாளர் படம் முழுவதையும் இரவு நேர காட்சிகளாகவும், இருட்டு காட்சிகளாகவும் படமாக்கி இருக்கிறார். அந்த வீடு பல்வேறு அறைகளையும் இடங்களையும் கொண்டிருப்பதையும் ஒவ்வொரு இடத்தை வைத்தும் கேமரா கோணத்தில் நம்மை பயமுறுத்துவது போல படம் பிடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் செல்லையா பாண்டியனின் பின்னணி இசை கொஞ்சம் பயபுறுத்தலை கொடுத்திருக்கிறது. தேவையான நேரத்தில் பயப்பட வைக்கவும் செய்திருக்கிறது.

சஸ்பென்ஸ், திரில்லருக்கு ஏற்ற வகையில் படத்தை தொகுத்து வழங்கியிருக்கும் படத் தொகுப்பாளர் எம்.எஸ்.கோபி படத்தில் குழப்பம் இல்லாமல் கொண்டு சென்று நம்மையும் கடைசிவரையிலும் படத்தைப் பார்க்க வைத்திருக்கிறார்.

பிளாஷ்பேக்கில் சொல்லப்படும் கதையில் கொஞ்சம் வேகமும், விறுவிறுப்பும் இருந்தாலும் அதை நிகழ்காலத்தில் பார்க்கும்போது அந்த அளவுக்கு பரபரப்பு இல்லாததால் நம்மால் படத்தை ரசித்துப் பார்க்க முடியவில்லை. அதிலும் வடிவுக்கரசி போலீஸுடன் சண்டை போடும் காட்சிகளைகூட நம்ப முடியாத வகையில் எடுத்திருப்பதால் அது  காமெடியாகிவிட்டது.

ஒருவர் இளமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதை வைத்து, அதற்கு இப்படி ஒரு கதையை இட்டுக்கட்டி அந்தக் கதையை வைத்து திரைக்கதை எழுதி, அதையும் 2 மணி நேர படமாக ஆக்கி கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் விஜயகுமார்.

குழந்தைகளுக்கான மாய, மந்திரக் கதையில் ஒரு பேயின் கதையை திகிலோடு கொடுத்து, இதற்கு ஒச்சாயி என்ற கிழவியை பின்னணியில் வைச்து பயமுறுத்தியிருக்கிறார் இயக்குநர்.

பேய் படம் என்றாலும் திரைக்கதையை சுவாரஸ்யமாக சொல்லி, ஒச்சாயி பாட்டியை பயமுறுத்தும் கோணத்தில் திரையில் உலாவ வைத்து.. சின்னக் குழந்தைகளை கிழவியிடம் சிக்க வைத்து.. தப்பிப்பார்களா.. இல்லையா.. என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து கொடுத்திருக்கும் இந்தப் படத்தை நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்தான்..!

இந்த ஒச்சாயி பாட்டி நம்மையும், குழந்தைகளையும் கொஞ்சமாக பயமுறுத்தியிருக்கிறார்.

RATING : 3 / 5

Our Score