full screen background image

குட் டே – சினிமா விமர்சனம்

குட் டே – சினிமா விமர்சனம்

நாம் எதிர்பார்க்காத நல்ல விஷயங்களும், பண வரவுகளும், இனிய அதிர்ச்சிகளும் ஒரு நாளில் நமக்கு கிடைத்தால் அந்த நாளை நாம் குட் டே என்று சொல்லுவோம். அதுபோல இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக இந்த நாள் ஒரு இனிய நாள் என்றுதான் சொல்வார்கள்.

இதற்குப் பொருத்தமாக படத்துக்கு குட் டே என்று தலைப்பு வைத்திருக்கும் இந்தப் படக் குழுவினருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஒரு சின்ன பட்ஜெட் படம். அறிமுகம் இல்லாத ஹீரோ. முதல் பட இயக்குநர்.. இவர்களெல்லாம் சேர்ந்து என்ன செய்துவிட முடியும் என்று திரையுலகை நன்கு கூர்ந்து கவனித்து வரும் பல விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள். இந்தப் படம் அப்படிப்பட்டவர்களுக்குப் பதில் சொல்லும்விதமாகத்தான் வந்திருக்கிறது.

நாயகன் பிருத்விராஜ் தன்னுடைய கிராமத்தில் தன்னுடைய மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு திருப்பூரில் ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

அந்த நிறுவனத்தின் மேனேஜருடன் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால், சண்டையினால் அந்த மேனேஜர் பிருத்விராஜை கன்னத்தில் அறைந்து விடுகிறார். அவமானத்தில் துடிக்கும் பிருத்விராஜிக்கு எதுவும் பேச முடியாத நிலைமை.

ஊரிலிருக்கும் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் பணம் அனுப்ப வேண்டும். அம்மாவிற்கு பணம் அனுப்ப வேண்டும். பண பிரச்சினை.. வீட்டு வாடகை கொடுக்க வேண்டும். கடன் பிரச்சனை என்று பல்வேறு பிரச்சனைகள் அவரை அழுத்தி தள்ள மவுனமாகவே அன்றைய வேலை நாளை கழிக்கிறார்.

அன்று மழையே அவருக்கு சம்பளமும் கிடைத்துவிட எப்போதும் போல் பணத்தை மொத்தமாக எடுத்து தன்னுடைய மனைவிக்கும், அம்மாவிற்கும் தனித்தனியாக பிரித்து அனுப்பிவிட்டு தனக்கென்று சேர்த்து வைத்திருக்கும் பணத்தில் டாஸ்மாக் கடைக்கு செல்கிறார். அங்கேதான் படம் துவங்குகிறது.

பிருத்விராஜ் வீட்டில் மது குடித்துக் கொண்டிருக்கும் வீட்டு ஓனர் வந்து வாடகை ரசீதை கொடுக்கிறார். அதில் இருக்கும் மெயின்டனன்ஸ் செலவு பற்றி வீட்டு ஓனரிடம் பிருத்விராஜ் கேட்க இருவருக்கிடையில் வாக்குவாதம் நடக்கிறது. அதன் முடிவில் கோபம் தலைக்கேறி போதையில் கல்லை எடுத்து வீட்டு ஓனரின் மண்டையை உடைத்து விட்டு தப்பித்து ஓடுகிறார் பிருத்விராஜ்.

இன்னொரு இடத்தில் போனில் பேசிக் கொண்டிருக்கும்பொழுது தொந்தரவு செய்து கொண்டே இருக்கும் ஒரு லாரி டிரைவரை கண்டிக்கும்விதமாக கல்லை எடுத்து அந்த லாரியின் கண்ணாடியை உடைத்து விடுகிறார் பிருத்வி.

தான் கல்லூரியில் படிக்கும்போது ஒருதலையாய் காதலித்த வீணா என்ற பெண்ணின் வீட்டிற்கு தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட கையில் கேக் உடன் போய் ஒரு அலம்பு அலம்ப அங்கேயும் அடிதடி ஆகிறது.

கடைசியாக வீணாவிடம் போனில் பேசியபடியே தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சொல்ல அந்த நேரத்தில் ரோந்து வரும் இன்ஸ்பெக்டர் விஜய் முருகன் அவரை ஸ்டேஷனுக்கு இழுத்து வருகிறார்.

பிருத்வியை ஸ்டேஷனில் வைத்து நாலு அப்பு அப்பி ஓரமாக உட்கார வைக்கிறார்கள். அந்த நேரத்திலும் புலம்பிக் கொண்டிருக்கும் பிருத்விக்கு அங்கேயிருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. கிடைத்த கேப்பில் இன்ஸ்பெக்டரின் சட்டையையும், வாக்கி டாக்கியையும் எடுத்துக் கொண்டு ஸ்டேஷனை விட்டு ஓடுகிறார் பிரிதிவி.

அவரைப் போலீஸ் நல்லா பக்கமும் தேட ஆரம்பிக்க போதையினால் தான் என்ன செய்கிறோம் என்பதுகூட தெரியாத அளவுக்கு தன்னுடைய அட்ராசிட்டியை தொடர்ந்து செய்கிறார் பிருத்விராஜ்.

கடைசியாக இந்த போதை அவரை எங்கே கொண்டு போய்விட்டது..? காவல் துறையினர் அவரை மீட்டார்களா..? இல்லையா…? கடைசியில் படம் என்னதான் சொல்கிறது?.. என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

தயாரிப்பாளரும், நடிகருமான பிருத்விராஜ் இந்தப் படத்தில் அறிமுக நாயகனாக நடித்திருக்கிறார். 40 வயது மத்திம வயதை உடைய ஒரு குடிகாரன் எப்படி இருப்பான் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே திகழ்ந்து இருக்கிறார்.

கார்மெண்ட்ஸ் கம்பெனியில் நடக்கும் நிகழ்வுகளில் தான் அவமானப்பட்டு அசிங்கப்பட்டு அமர்ந்திருக்கும் அந்த நேரத்தில் அவருடைய முக பாவனைகளும், அவருடைய நடிப்பும் ஐயோ என்று நம்மையும் கொஞ்சம் பரிதாபப்பட வைக்கிறது.

போதை உள்ளே இறங்கியவுடன் அவர் காட்டுகின்ற அட்ராசிட்டியில் கொஞ்சம், கொஞ்சம் சிரிப்பொலிகள் வந்தாலும் போகப் போக குடியின் ஆதிக்கம் அவருக்குள் அதிகமாகி இருப்பதை தன்னுடைய நடிப்பு திறனால் காட்டி இருக்கிறார் பிருத்விராஜ்.

அவரும் காளி வெங்கட்டும் செய்யும் அட்டூழியம் காமெடி என்றாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. அந்த போதையிலும் சப் இன்ஸ்பெக்டர் ஜீவாவிடம் ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்.. ஐ லவ் யூ..”  என்றெல்லாம் அவர் சொல்கின்ற இடத்தில் அது அத்துமீறிய செயலாக நமக்குத் தோன்றவில்லை. மாறாக, அவருக்குள் இருக்கும் ஒரு ரசிப்பு தன்மையே நமக்குத் தெரிகிறது.

அந்த சின்ன குழந்தையை மீட்டவுடன் அதனுடைய காலில் ஷூவை மாட்டிவிட்டு பிருத்விராஜ் பார்க்கும் அந்தப் பார்வையில் நூறு படங்களில் நடித்த ஒரு நடிகரின் நடிப்பை காண முடிந்திருக்கிறது.

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் விஜய் முருகன் மிக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். அதிலும் இறுதிக் காட்சியில் தான் தவறு செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வில் பிருத்வியைப் பார்க்கின்ற அந்த ஒரு சின்ன ஷாட்டே அவருடைய நடிப்பு திறமையைக் காண்பிக்கிறது.

திருநங்கை சப் இன்ஸ்பெக்டர் நடித்திருக்கும் ஜீவா சிறப்பாகவே நடித்திருக்கிறார். சில இடங்களில் அவருடைய குளோசப் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. கார்மெண்ட்ஸ் கம்பெனியின் ஓனராக நடித்தவர் தன்னுடைய இரட்டை முகம் வெளிப்படும் வகையில் நடித்திருப்பது சுவையான ஒரு காட்சி.

வீணாவாக நடித்திருக்கும் மைனா நந்திரியும் அவருடைய கணவர் ஆடுகளம் முருகதாஸ் அலப்பறை செய்து இருக்கிறார்கள். அதிலும் வீணா போனில் பிருத்வியிடம் செத்து தொலைடா.. நான் நிம்மதியா இருப்பேன்…” என்று சொல்லும்போது நிச்சயம் மைனாவை நிரம்ப ரசிக்கலாம்.

கார்மெண்ட்ஸ் கம்பெனி மேனேஜராக நடித்தவர், வீட்டு ஓனராக நடித்தவர், லாரி டிரைவராக நடித்தவர் என்று அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

முகம் காட்டாமல் செல்போனில் குரலை வைத்து மட்டுமே தனது நடிப்பைக் காண்பித்திருக்கும் மனைவி கேரக்டருக்கு வாய்ஸ் கொடுத்திருக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட்டை மனதாரப் பாராட்டுகிறோம்.

ஒரே ஒரு காட்சி என்றாலும் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா அசத்தி விட்டார். குடியை மறக்கவே முடியாத ஒருவன் எப்படி எல்லாம் செய்து குடிப்பான் என்பதை அந்த ஒரு காட்சியில் செய்து காட்டியிருக்கிறார் கார்த்திக் நேத்தா. பாராட்டுக்கள்.

அதேபோல் டாஸ்மாக் கடைசியில் பேசியே கொலை செய்யும் பக்ஸ் என்ற பகவதி பெருமாளும் குடிகாரர்கள் சங்கத்தின் தலைவராகும் அளவுக்கு சிறப்பாகப் பேசி நடித்திருக்கிறார்.

இதுவரையிலும் திருப்பூர் மாநகரத்தை சுற்றிப் பார்க்காதவர்கள் இந்தப் படத்தின் மூலமாக பார்த்துவிடலாம். மதன் குணாதேவ்வின் ஒளிப்பதிவு திருப்பூர் நகரை சுற்றி சுற்றி வளைத்து வளைத்து நமக்கு காட்டி இருக்கிறது.

இரவு நேர காட்சிகளில் ஒளிப்பதிவின் தரம் சூப்பர். அதேபோல் இறுதியாக நரபலி கொடுக்கப்பட்ட அந்த இடத்தை அவ்வளவு அழகாக தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதற்காகவே நமது பாராட்டுக்கள்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் இறுதியாக ஒலிக்கும் அஞ்சு வண்ண பூவே பாடல் மனதை கொல்கிறது. அவ்வளவு அழகான இசை. அழகான குரல். பாடலைப் படமாக்கிய விதமும் சூப்பர்.

படத்தின் பின்னணி இசையும் ஒரு கேரக்டராகவே மாறி இருக்கிறது. எந்த இடத்திலும் கதாபாத்திரத்தை மீறி நடிகர்களை மீறி ஒலிக்காமல் ஒரு மெல்லிய இசையோடு அதுவும் கூடவே கடைசிவரையில் பவனி வந்திருக்கிறது.

படத் தொகுப்பாளரும் பாராட்டுக்குரியவர். பல காட்சிகள் அடுத்தடுத்த காட்சிகளாக நகர வேண்டிய இடங்களில் எல்லாம் எந்த உறுத்தலும் இல்லாமல் எந்த சிக்கலும் இல்லாமல் உடனுக்குடன் அதே மூடோடு அந்தக் காட்சிகள் நமக்குத் திரையில் வருகிறது. இது சின்ன பட்ஜெட் படம் அல்ல: இது பெரிய பட்ஜெட் படம்தான் என்றுதான் சொல்ல வைத்திருக்கிறது.

குடியினால் ஏற்படும் தீங்குகளை சொல்வதற்கு ஏற்கனவே பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில் இந்த திரைப்படமும் ஒரு வித்தியாசமான ஒரு திரைக் கதையோடு நம்மை சந்தித்து இருக்கிறது.

குடிகாரர்கள் அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை பாசம்தான். அளவுக்கு அதிகமான பாசமும், பாசத்தைப் பகிர்ந்து கொடுக்க தெரியாமலும் அவர்கள் மதுவில் மூழ்கிறார்கள்.

குழந்தைகளின் முகத்தை பார்த்து அவர்களுக்காகவாது குடியை விடு என்று பலரும் சொல்வார்கள். அதுபோல தம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்காகவாது குடியை நாம் விட்டுவிட வேண்டும். குழந்தைகள்தான் நமக்கு முக்கியம் என்பதை அழுத்தந்திருத்தமாக சொல்லி இருக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் வரவேற்கத்தக்கது.

பிருத்விராஜ் குடியை விட்டுவிட்டதாக சொல்கின்ற அந்தக் காட்சி அபாரமான ஒரு திரைக்கதை. எந்த ஓவர் சென்டிமென்டும் இல்லாமல் மிக இயல்பாக அந்தக் காட்சியை இன்னொரு குடிகாரர் மூலமாக சொல்ல வைத்திருப்பது இயக்குநரின் இயக்கத் திறமையையும், திரைக்கதை எழுத்தாளரின் திறமையையும் காட்டுகிறது.

இத்திரைப்படம் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம்தான்.

அவசியம் தியேட்டரில் குடும்பத்தோடு சென்று பாருங்கள்.

RATING : 4 / 5

Our Score