full screen background image

‘கோலிசோடா-2’ படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கும் சமுத்திரக்கனி..!

‘கோலிசோடா-2’ படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கும் சமுத்திரக்கனி..!

ரஃப் நோட் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோலி சோடா-2’.

சமுத்திரக்கனி, பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிரிஷா குரூப் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்துக்கு அச்சு இசையமைத்திருக்கிறார்.

வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர்கள் சமுத்திரக்கனி, இசக்கி பரத், நாயகிகள் சுபிக்‌ஷா, கிரிஷா குரூப், கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் சத்தியமூர்த்தி, ‘பசங்க’ கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

goli_soda_2_movie_press_meet_stills_4

நிகழ்ச்சியில் படத் தொகுப்பாளர் தீபக் பேசுகையில், “படத் தொகுப்பு மற்றும் சண்டை காட்சிகளுக்காகவே பெரிய அளவில் பேசப்பட்ட படம் ‘கோலி சோடா’. ‘கடுகு’ படத்தில் ஒரு பகுதியை எடிட்டிங் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆனால் இந்த ‘கோலி சோடா-2’ படத்துக்கு முழு எடிட்டிங் வாய்ப்பே எனக்கு கிடைத்தது. இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் இதற்காக எனது நன்றிகள்..” என்றார்.

நடிகர் பரத் சீனி பேசுகையில், “அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் வேலை பார்த்தது எங்கள் கேரியரில் உதவும். இது ஒரு டீம் ஒர்க்..” என்றார்.

goli_soda_2_movie_press_meet_stills_6

நடிகர் வினோத் பேசும்போது, “சமுத்திரக்கனி சார் படப்பிடிப்பின்போது அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். விஜய் மில்டன் சார், ஸ்பாட்டில்தான் வசனங்களையே கொடுப்பார். ஆனால் கதைக்கு ஏற்றவாறு பேச சுதந்திரம் கொடுத்தார். ‘கோலி சோடா’ படத்தில் மார்க்கெட் ஃபைட் மாதிரி இந்த படத்திலும் ஒரு சண்டை காட்சி மிகவும் பேசப்படும். கௌதம் மேனன் சார் இந்த படத்துக்குள் வந்த பிறகு படம் பெரிய படமாக மாறியது. என் சித்தப்பா லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸுக்கும் நன்றி…” என்றார் வினோத்.

goli_soda_2_movie_press_meet_stills_2

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், “விஜய் மில்டன் இந்தப் படத்தில் என்னை நடிக்கக் கூப்பிட்டார். படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறாங்க என்று கேட்டேன். பெரிய ஆளுன்னா சமுத்திரக்கனி மட்டும்தான்.. மத்தவங்க எல்லாரும் புதுமுகம் என்றார் மில்டன். யாருக்கும் யோசிக்காமல் உதவிகளை செய்பவர் சமுத்திரக்கனி. அவர் எனக்கும் பல உதவிகளை செய்திருக்கிறார். அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பல இளைஞர்களுடன் வேலை செய்தது நல்ல அனுபவம்…” என்றார்.

படத்தின் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் பேசுகையில், இத்திரைப்படம் ‘கோலி சோடா’ மாதிரி இல்லைனு மக்கள் சொல்லிட கூடாதுன்னு நினைச்சு பார்த்து, பார்த்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

goli_soda_2_movie_press_meet_stills_3

‘கோலி சோடா’வுக்கு உதவிய பாண்டிராஜ், லிங்குசாமிக்கு நன்றி. ‘கோலி சோடா’ படத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சம் அடையாளம் கிடைக்கணும் என்பதை பற்றி பேசியிருக்கிறோம். இதில் அவர்களுக்கு கிடைத்த அடையாளம் அடுத்த நிலைக்கு போக விடாமல் தடுப்பதை பற்றி பேசியிருக்கிறோம்.

நான் கதை சொல்லிய, 4 மணி நேரத்தில் அச்சு ‘பொண்டாட்டி’ பாடலை போட்டுக் கொடுத்தார். படத்தின் பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக இருக்கும். அச்சுவை அடுத்து சண்டை காட்சிகளை அமைத்த சுப்ரீம் சுந்தர் சிறப்பாக பேசப்படுவார்.

சமுத்திரக்கனி ரியல் லைஃபில் நெஞ்சை நிமிர்த்தி, துணிச்சலாக இருப்பவர். ஆனால், படத்தில் தோல்வியடைந்த ஒரு மனிதராக, வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். ஒரு பைசா சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். கௌதம் சார் நடித்த காட்சிகளை பார்த்து நானே மிரண்டு போனேன். படம் ஒட்டு மொத்தமாய் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.

விளம்பரம் செய்யும் செலவை விட்டுவிட்டு, ஜி.எஸ்.டி. வண்டி என்ற ஒரு விஷயத்தை ஆரம்பித்தோம். அந்த வண்டியில் மோர், இளநீர், உணவு என மக்களுக்கு தேவையான விஷயங்களை கொடுப்போம் என முடிவு செய்தோம். சென்னையில் சூர்யா அதனை தொடங்கி வைத்திருக்கிறார். சென்னை உட்பட 6 ஊர்களில் 12 வண்டிகள் ஓடுகின்றன…” என்றார் இயக்குநர் விஜய் மில்டன்.

Our Score