full screen background image

கோலிசோடாவின் வெற்றி விழா..!

கோலிசோடாவின் வெற்றி விழா..!

சில படங்களின் விளம்பரத்தில் வெற்றிகரமான 2-வது நாள் என்று கூட போட்டிருந்தார்கள். அந்த அளவுக்கு விளம்பர டெக்னிக் கோடம்பாக்கத்தில் பெருகிவிட்டது.. எப்படியிருந்தாலும் தியேட்டருக்கு கூட்டம் நிறைய கூடிக் கொண்டே போய்.. தியேட்டர்களின் எண்ணிக்கையும் கூடினால் இப்போதைக்கு அதுதான் வெற்றி படம். இந்த பார்முலாவின்படி ‘கோலிசோடா’ நிச்சயமாய் ஒரு வெற்றி படம்தான்..!

இதுவரையில் வந்த வசூலின்படி இப்போதே தயாரிப்பாளருக்கு 6 கோடிக்கு மேல் லாபமாம்.. இந்த அளவுக்கு இது சூப்பர் ஹிட்டாகும் என்று கதையைக் கேட்டவுடனேயே இயக்குநர் பாண்டிராஜுக்கு புரிந்துவிட்டதாம். “அதனால்தான் படத்தின் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு படத்துக்கு ஆலோசனையும், அவ்வப்போது பண உதவியும் செய்து.. படத்தின் உயிர் நாடியாக வசனத்தையும் எழுதிக் கொடுத்தேன்…” என்றார்..

படத்தில் நடித்த அனைவருமே மேடையேறி அவரவர் செய்த பணிகளைச் சுட்டிக் காட்டி தங்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்மில்டனுக்கு நன்றி மேல் நன்றி சொன்னார்கள்..! பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவர் பட்டாளத்துக்கு இப்போது அவரவர் பள்ளிகளில் ராஜ மரியாதையாம்..!

இயக்குநர் சமுத்திரக்கனிதான் இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவருக்கு குரல் கொடு்த்திருக்கிறார். மிகச் சரியான குரல்.. குரல் கொடுத்த வகையில் கனிக்கு இது மூன்றாவது படமாம்.. அந்த வில்லனோ “கிளைமாக்ஸ் காட்சி எப்படின்னு இயக்குநர் சொல்லவேயில்லை. கடைசி நேரத்துலதான் சொன்னார்.. இதுக்கு மேல கிளைமாக்ஸ்ல என்ன இருக்கப் போகுது. அதான் எல்லாத்தையும் அவுத்தாச்சேன்னு நினைச்சிருந்தேன். பட்.. இப்போ ஸ்கிரீன்ல பார்க்கும்போதுதான் அதோட எபெக்ட் தெரியுது. எனக்கும் ஒரு நல்ல கேரியர் கொடுத்திருக்கார் இயக்குநர்..” என்றார்..

எல்லாருக்கும் ஏற்றம் கொடுத்திருக்கும் இப்படம் இயக்குநர் விஜய் மில்டனுக்கும் இன்னொரு ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறது. திருப்பதி பிரதர்ஸ் சார்பில் தயாராகும் இன்னொரு படத்தை இயக்கும் பொறுப்பை விஜய் மில்டனிடம் ஒப்படைத்திருக்கிறார் தயாரிப்பாளர் லிங்குசாமி..

ஆல் தி பெஸ்ட் விஜய் மில்டன் ஸார்..!

Our Score