‘கோலிசோடா-2’ படத்தின் டீஸருக்கு பின்னணி குரல் கொடுத்த முன்னணி இயக்குநர்

‘கோலிசோடா-2’ படத்தின் டீஸருக்கு பின்னணி குரல் கொடுத்த முன்னணி இயக்குநர்

சரியான முறையில் பயன்படுத்தப்பட்ட  'பின்னணி வர்ணனை' எந்த ஒரு படத்துக்கும் மதிப்பு சேர்க்கும். அதுவும் ஒரு பிரபலமான ஒருவரின் குரலில் அது செய்யப்படும்பொழுது, அந்த காட்சியமைப்புக்கு  அது இன்னும் அதிக பலத்தை பெற்று தரும்.

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் 'கோலிசோடா-2' படத்தின் டீஸர் தற்போது தயாராகியுள்ளது. இந்த டீசருக்கு பின்னணி வர்ணனை வழங்க பிரபல இயக்குனர் கவுதம் மேனனை அணுகினார் விஜய் மில்டன். இதனை ஏற்றுக் கொண்டு  கவுதம் மேனன் கொடுத்துள்ள பின்னணி வர்ணனை பிரமாதமாக இருக்கிறது. 

இது பற்றி பேசிய இயக்குநர் விஜய் மில்டன், "மிக அருமையாக வந்திருக்கும் 'கோலிசோடா-2'-வின் டீசருக்கு ஒரு அழுத்தமான பின்னணி வர்ணனை தேவைப்பட்டது. இயக்குநர் கவுதம் மேனனின் குரலும் அதன் தனித்தன்மையும் எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும்.

எனக்கும், எனது படங்களுக்கும் என்றுமே பக்கபலமாக இருக்கும் இயக்குநர் லிங்குசாமி மூலம் கவுதம் அவர்களை அணுகி இந்த பின்னணி வர்ணனை பற்றி கூறி, செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

எங்கள் கோரிக்கையை உடனே ஒப்புக்கொண்ட கவுதம் அவர்கள் எதிர்பார்த்ததைவிட மிக பிரமாதமாக பின்னணி வர்ணனை செய்து கொடுத்தார். இந்த டீசரை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என நம்புகிறேன்.

இது போன்ற நல்ல உள்ளம் படைத்த இயக்குநர்கள், எங்கள் படங்களுக்கு கொடுக்கும் பெரிய ஆதரவிற்கு  நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன். டீஸர் மிக விரைவில் வெளிவரவுள்ளது..'' என நன்றி தெரிவித்தார் விஜய் மில்டன்.