கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான தெலுங்கு திரைப்படம் ‘காட் ஃபாதர்’.
இந்தப் படம் மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் நடிப்பில் நடிகர் பிருத்விராஜின் இயக்கத்தில் 2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்காகும்.
‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். இவருடன் நயன்தாரா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் பூரி ஜகன்நாத் மற்றும் நடிகர் சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
திரைக்கதை & இயக்கம் – மோகன் ராஜா, தயாரிப்பாளர்கள் – ஆர். பி.சௌத்ரி & என் வி பிரசாத், வழங்குபவர் – கொனிடேலா சுரேகா, தயாரிப்பு நிறுவனம் – கொனிடேலா புரொடக்சன்ஸ் & சூப்பர் குட் பிலிம்ஸ், இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – நிரவ் ஷா, கலை இயக்கம் – சுரேஷ் செல்வராஜன், தயாரிப்பு வடிவமைப்பு – வகாடா அப்பாராவ்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த ‘காட் ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
இதில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி முதன் முறையாக ஸ்போர்ட்ஸ் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் கருப்பு நிற ஆடை அணிந்து நாற்காலியில் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக அமர்ந்தபடி தோற்றமளிப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது.
சிரஞ்சீவி கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவருக்காக அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்கின்றனர். அப்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவி காரில் வருகிறார்.
சிரஞ்சீவி காரிலிருந்து இறங்கி ஆவேசமாக அலுவலகத்திற்குள் செல்லும் காட்சியும்.. அப்போது ‘காட் ஃபாதர்’ என்ற தலைப்பு தோன்றுவதும் பொருத்தமாக இருக்கிறது. மேலும், அவரது கதாபாத்திரம் திரையில் தோன்றும்பொழுது இசைக்கப்படும் எஸ்.எஸ்.தமனின் பின்னணியிசை ரசிகர்களை உற்சாகப்பட வைத்துள்ளது.
எஸ்.எஸ்.தமனின் அற்புதமான பின்னணியிசையில் ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியை வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கும்பொழுது, இந்த ‘காட் ஃபாதர்’ படம் மாஸ் எண்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் உறுதி என்பது உறுதியாகத் தெரிகிறது.
இந்த ‘காட் ஃபாதர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான காணொளியுடன் இந்தப் படம் வரும் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின்போது வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.









