full screen background image

‘கோஸ்டி’ – சினிமா விமர்சனம்

‘கோஸ்டி’ – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, சுப்பு பஞ்சு அருணாச்சலம், ‘மொட்டை’ ராஜேந்திரன், யோகிபாபு, சத்யன், ஊர்வசி, தேவதர்ஷினி, சுரேஷ் மேனன், ்ரீமன், மனோபாலா, மயில்சாமி, சாமிநாதன், லிவிங்ஸ்டன், மதன்பாபு, சந்தான பாரதி, நரேன், தங்கத்துரை மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – சாம் C.S., ஒளிப்பதிவு – ஜேக்கப் ரத்தினராஜ், கலை இயக்கம் – கோபி ஆனந்த், படத் தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, சண்டை இயக்கம் – ‘பில்லா’ ஜெகன், பாடல்கள் – விவேக், கு.கார்த்திக், தயாரிப்பு மேற்பார்வை – A.குமார், நிர்வாகத் தயாரிப்பு – K. சக்திவேல், சுசி காமராஜ், தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம், G.ஜெயராம், எழுத்து, இயக்கம் – எஸ்.கல்யாண்.

‘குலேபகாவலி’, ‘ஜாக்பாட்’ ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார் காஜல் அகவர்வால். இவரது தந்தையும் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர்தான். காஜலின் தந்தை மிகப் பெரிய தாதாவான கே.எஸ்.ரவிக்குமாரை பிடித்து சிறையில் அடைத்து அவருக்குத் தண்டனை வாங்கித் தந்திருக்கிறார்.

இப்போது அந்த கே.எஸ்.ரவிக்குமார் சிறையில் இருந்து தப்பித்திருக்கிறார். தன்னை ஜெயிலில் தள்ளிய 5 ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளை கொல்ல வேண்டும் என்கிற வெறியில் இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

இதையறியும் காஜல் சம்பந்தப்பட்ட நால்வரையும் தொடர்பு கொண்டு இதைச் சொல்கிறார். ஆனால் அவர்கள் இதை நம்ப மறுக்கிறார்கள். தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இவர்களை கொலை செய்ய முயலும்போது எதிர்பாராதவிதமாக 2 பேர் இயற்கை மரணம் அடைகிறார்கள்.

இன்னொரு பக்கம் சினிமா இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் யோகிபாபு, ஜெகன் மற்றும் கிங்க்ஸ்லி மூவரும் விஞ்ஞானியான ்ரீமனின் லேபரட்டரியில் இருக்கும் ஒரு வாயுவை சுவாசிக்க.. மூவரும் மன நலம் பாதித்து மன நல காப்பகத்தில் அடைக்கப்படுகிறார்கள்.

மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் வேன் விபத்தில் ஆற்றுக்குள் மூழ்கி மூவருமே இறந்து போகிறார்கள். ஆனாலும் ஆவியாக காஜலைத் தேடி அலைகிறார்கள். யோகிபாபு இயக்கவிருக்கும் படத்தில் நாயகியாக காஜலைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்பது அவர்களது எண்ணமாக இருந்தது. இதனால் செத்தும் விடாமல் காஜலின் வீட்டில் குடியேறுகிறார்கள்.

ஒரு நாள் கே.எஸ்.ரவிக்குமாரை துரத்திச் செல்லும் காஜல் அவரைச் சுடுகிறார். ஆனால் அந்தத் துப்பாக்கிக் குண்டு தவறுதலாக ஜெய் மீது பாய்ந்து அவர் இறந்துவிடுகிறார்.

இது தெரிந்தால் தனது வேலை போய்விடுமே என்றெண்ணி பயந்த காஜல் ஜெய்யின் உடலை மார்ச்சுவரியில் மறைத்து வைக்கிறார். வீட்டில் இருக்கும் பேய் திருடர்களினாலும் பலவித தொந்தரவுக்கு ஆளாகிறார் காஜல்.

அந்தப் பேய்களை விரட்ட பூஜையெல்லாம் செய்து பார்க்கிறார். எதுவும் பலனளிக்காமல் போகிறது. தொடர்ந்து மார்ச்சுவரியில் இருந்து ஜெய்யின் உடலும் காணாமல் போக குழப்பம் நீடிக்கிறது.

காஜல், கே.எஸ்.ரவிக்குமாரை கைது செய்தாரா..? தன் வீட்டில் இருக்கும் பேய்களிடமிருந்து தப்பித்தாரா..? மார்ச்சுவரியில் இருந்த ஜெய்யின் உடல் என்னவானது..? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தை எப்போது தயாரித்தார்கள்.. எப்படி திரைக்குக் கொண்டு வந்தார்கள் என்பது சினிமா பத்திரிகையாளர்களுக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு சஸ்பென்ஸாக வைத்திருந்தார்கள் போலும்.

திருமணமாவதற்கு முன்பாக காஜல் அகர்வால் நடித்த படம் போல..! போலீஸ் என்றாலே ஒரு மிடுக்கு, கம்பீரம் வேண்டும். இதில் அது சுத்தமாக மிஸ்ஸிங். ஓடிக் கொண்டேயிருக்கிறார். பதட்டமாகிக் கொண்டே பேசுகிறார். தவித்துக் கொண்டே நடித்திருக்கிறார். எந்த வகையிலும் படத்தின் நாயகியாக அவர் நம் கண்களுக்குத் தெரியவில்லை என்பது கொடுமைதான்.

இன்னுமொரு கொடுமை சிரிப்பு போலீஸாக ஊர்வசியையும், சத்யனையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதையும் உருப்படியாக செய்தாரா..? இல்லை..! போலீஸே சிரிப்பாக இருந்தால் அவர்கள் செய்கின்ற செயலை மட்டும் சீரியஸாகவா மக்கள் பார்ப்பார்கள்..?

யோகிபாபு, ஜெகன், கிங்ஸ்லி மூவரும் படம் எடுப்பதற்காக அலையும் உதவி இயக்குநர்களாகக் காட்டி இவர்களையும் காமெடியாக்கிவிட்டார் இயக்குநர். மொட்டை ராஜேந்திரனை மன நல காப்பாக வார்டனாக காட்டி முடிந்த அளவுக்கு அவரையும் அடி வாங்க வைத்திருக்கிறார் இயக்குநர். இதில் பேயை ஓட்டுவதற்காக ஆடுகளம் நரேன் மற்றும் ராதிகா சரத்குமாரை ஒரேயொரு காட்சிக்கு வரவழைத்திருக்கிறார் இயக்குநர். எதுக்கு இவ்வளவு பில்டப் இயக்குநரே..!?

படத்திலேயே ஆறுதலான காட்சியென்றால் அது ஊர்வசி, மயில்சாமி இருவரும் மார்ச்சுவரி வாசலில் அமர்ந்து பேசும் அந்த ஒரு காட்சி மட்டும்தான்..! வேறு எந்தவொரு காட்சியில்கூட நம்மால் சிரிக்க முடியாத நிலைமைதான் இருக்கிறது.

ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தாலும், பாடல் இசை மற்றும் பின்னணி இசை இரண்டிலுமே ஈர்ப்பில்லை. தொழில் நுட்பத்திலும் படு மோசம்..!

திரைக்கதை எங்கெங்கோ சுற்றித் திரிவதால் நம்மால் இதுதான் கதை என்ற ஒரு மன நிலைமைக்கு வர முடியவில்லை. கதை எழுதிய இயக்குநருக்காவது படத்தின் கதை என்ன என்பது புரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

இத்தனை பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்கப் போகிறோமே என்று நினைத்து படத்தின் கதையை இயக்குநர் இன்னும் சிறப்பாக உருவாக்கியிருக்கலாம். ஏனோ, தானோவென்று கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கமும் செய்திருப்பது போல தெரிகிறது. மொத்தத்தில் இது பேய்ப் படமாகவும் இல்லை. காமெடி படமாகவும் இல்லை..!

RATING : 2 / 5

Our Score