இந்தப் படத்தை KH பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ‘ஜெய் பீம்’ புகழ் லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா மூவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உடன் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இசை – கோவிந்த் வசந்தா, வசனம், பாடல்கள் – யுகபாரதி, ஒளிப்பதிவு – ஹெக்டர், படத் தொகுப்பு – கலைவாணன், கலை இயக்கம் – அமரன், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ் (AIM), எழுத்து, இயக்கம் – ஜோசுவா.
படத்தின் தலைப்புக்கும், படத்தின் கதைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது.
ஹீரோவான ஹரிகிருஷ்ணன் எல்ஐசி நிறுவனத்தில் டெவலப்மென்ட் ஆபீஸராக வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி லிஜோமோல் ஜோஸ். இருவருக்கும் திருமணமாகி மூன்று மாதங்கள்தான் ஆகிறது. சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்டில் தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள்.
லிஜோமோல் ஜோஸ் அக்மார்க் ஒரு குடும்பப் பெண். தன் கணவர் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். கணவருக்கு சேவை செய்வதுதான் மிகப்பெரிய விஷயம் என்று எண்ணி எந்தவொரு முகச்சுழிப்பும் இல்லாமல் தினமும் கணவருக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கிறார்.
ஹரி கிருஷ்ணன் வெளி பார்வைக்கு ரொம்ப ரொம்ப நல்லவராக தெரிந்தாலும் உள்ளுக்குள் அவருக்குள் இன்னொரு அந்நியன் இருக்கிறான். அவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையில் ஒரு கள்ளத் தொடர்பு உண்டு.
திருமணத்திற்கு முன்பேயே லாஸ்லியாவை காதலித்து வந்தவர் ஹரிகிருஷ்ணன். ஆனால் இந்த காதலை ஹரி கிருஷ்ணனின் தாயார் ஏற்காத காரணத்தினால், வேறு வழியில்லாமல் லிஜோமோல் ஜோசை திருமணம் செய்து இருக்கிறார் ஹரிகிருஷ்ணன்.
இந்த நேரத்தில் லிஜோமோல் ஜோஸின் தங்கை ஒரு இன்டர்வியூக்காக சென்னைக்கு வருகிறார். அவர் வீட்டில் தனித்து இருக்கும் நிலையில் அரிகிருஷ்ணன் அவரை அணுகும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயக்கம் ஆகிறார் ஹரிகிருஷ்ணன்.
கோவிலுக்கு போய் விட்டு திரும்பிய லிஜோமோல் ஜோஸ் இந்த நிலைமையைப் பார்த்து பதறியவர் ஹரி கிருஷ்ணனை மருத்துவமனை கொண்டு போகலாம் என்று எத்தனிக்கும் நேரத்தில் ஹரி கிருஷ்ணனுக்கு போன் வருகிறது.
அந்த போனில் லாஸ்லியா பேச லிஜோமோல் அதிர்ச்சியாகிறார். இதையடுத்து போனைத் துழாவுகிறார் லிஜோமோல். போனில் ஹரி கிருஷ்ணன் – லாஸ்லியாவின் கொஞ்சல் பேச்சுக்களும், ஆபாச வீடியோக்களும் இருப்பதைப் பார்த்து திடீரென்று கொலை வெறியாகும் லிஜோமோல் அருகில் இருக்கும் அருவாளை எடுத்து ஹரி கிருஷ்ணனை ஒரே போடாகப் போட்டு தள்ளிவிடுகிறார்.
ஒரு நிமிட கோபத்தின் விளைவால் கட்டிய கணவனை கொலை செய்துவிட்டு எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாமல் சாதாரணமாக ஹரி கிருஷ்ணனின் உடலை தன்னுடைய வீட்டு பிரிட்ஜில் உள்ளே தூக்கி வைத்துவிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போகிறார் லிஜோமோல்.
ஆனால் லாஸ்லியாவோ தன்னுடைய காதலர் காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் கொடுக்கிறார். போலீஸார் லிஜோமோலை விசாரிக்கிறார்கள். அவர் மூன்று நாள் அலுவலக வேலையாக கோவா சென்றிருக்கிறார் என்று லிஜோமோல் சொல்ல லாஸ்லியாவுக்கு இதை ஏற்கும் மனநிலை இல்லை. அவரே நேரடியாக வந்து பேசுகிறார். அப்போதும் லிஜோமோல் அவரிடமும் இதையே சொல்கிறார்.
இனிமேல் என்ன ஆனது..? ஹரி கிருஷ்ணனின் பிணத்தை மறைத்தாரா? நிஜமாவே லிஜோமோல் போலீசிடம் சிக்கினாரா..? போலீஸ் எப்படி இதை கண்டுபிடித்தார்கள்?.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
லிஜோமோல் ஜோஸ் மிகவும் அற்புதமான ஒரு நடிகை. ஜெய்பீம் படத்தில் செங்கேணியாக அவர் ஏற்று நடித்த நடித்திருந்த கதாபாத்திரமும், போன மாதம் வெளிவந்த திரைப்படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக ஒரு நடித்திருந்த நடிப்பும் தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போயிருந்தது. அதே நடிப்பை இந்த படத்திலும் கொட்டி இருக்கிறார் லிஜோமோல்.
அவருடைய அழகான முகமும். அந்த முகத்தில் அவர் காட்டுகின்ற பலவிதமான ரசனையான முகபாவனைகளும், நடிப்பும்… இந்த கேரக்டருக்கு லிஜோமோலை விட்டால் வேறு ஆள் இல்லையோ என்று சொல்லத் தோன்றுகிறது.
ஆனால் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் முழுக்க, முழுக்க தவறானது என்பதால் நம்மால் பாராட்ட முடியவில்லை. ஆனால் தன்னுடைய கேரக்டருக்கு தன்னுடைய நடிப்பினால் நியாயம் செய்திருக்கிறார் லிஜோமோல் ஜோஸ்.
லிஜோமோலுக்கு சவால் விடும் அளவுக்கு நடித்திருக்கிறார் லாஸ்லியா. அவருடைய காதல் கள்ளக்காதலா என்று நாம் யோசிக்கும்பொழுது அதுதான் உண்மையான காதல் என்பதை கடைசியில் அறியும்போது லாஸ்லியாவின் மீது ஒரு பரிதாப உணர்வே நமக்கு வந்துவிடுகிறது.
இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் நடித்திருக்கிறார் ஹரி கிருஷ்ணன். ஒரு அப்பாவியான ஹஸ்பண்டாக வேடம் போட்டுவிட்டு இன்னொரு பக்கம் தன்னுடைய காதலியுடன் கோவாவுக்கு பிளான் போட்டு வைத்து, கடைசியாக ஒன்றுமே இல்லாமல் செத்துப் போகும் ஹரிகிருஷ்ணன் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
மேலும் சப் இன்ஸ்பெக்டராக நடித்த ராஜீவ் காந்தி. இன்ஸ்பெக்டராக நடித்தவர் மற்றும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண் என்று அத்தனை பேருமே இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரே ஒரு வீட்டுக்குள்தான் மிக அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதால் ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு முறையும் கேமரா கோணங்களை மாற்றி அமைத்து ரசிக்கும்படியாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார்.
பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் பாடல் காட்சிகள் அப்படியே மனதில் இருக்கின்றன. பாடல் காட்சிகளிலேயே மொத்தக் கதையையும் நகர்த்தி இருக்கிறார் இயக்குநர்.
சில இடங்களில் திக்கென்ற ஒரு உணர்வைக் கொடுக்கும்வகையில் படத்தை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளருக்கு நமது பாராட்டுக்கள்.
படத்தில் பாராட்டக் கூடிய ஒன்று வசனங்கள். மிகக் குறைவான வசனங்கள்தான் என்றாலும் மிகவும் சரியான, செறிவான வசனங்கள் பேசப்பட்டிருக்கின்றன. லாஸ்லியாவும், லிஜோமோலும் முதல்முறையாக சந்திக்கும்போது பேசும் வசனங்களும், அதற்கு பிறகு இரண்டாவது, முன்றாவது முறையாக சந்திக்கும்போது பேசும் வசனங்களும் மிகவும் சிறப்பு. இன்னொரு பக்கம் லாஸ்லியா போலீஸ் உதவி கமிஷனரிடம் மாட்டிக் கொண்டு தப்பிக்க போராடும்போது பேசுகின்ற பேச்சுக்களும் சிறப்பான வசனங்கள்.
சிறப்பான இயக்கம் என்றாலும் தவறான கதை என்பதால் இந்தப் படத்தை நம்மால் பாராட்ட முடியவில்லை. ஒரு கொலை குற்றத்தை செய்துவிட்டு அதை மறைப்பது என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு விஷயம்.
இதை தியேட்டரில் படம் பார்க்க பெரியவர்கள் உணர்ந்து கொள்வார்கள். ஆனால் 18 வயது வாலிபர்களுக்கோ “தாராளமாக கொலை செய்யலாம். கொலை செய்துவிட்டு பிணத்தை மறைத்து வைக்கலாம்..” என்ற உணர்வு அவர்களுடைய மனதில் பதிந்துவிடும். இது நம்முடைய வளருகின்ற சமூகத்திற்கும் வளர்கின்ற இளைஞர்களுக்கும் மிகப் பெரிய ஆபத்தை கொடுக்கக் கூடியது.
அதனால் இது போன்ற படங்களை நிச்சயமாக நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும். அந்த வகையில் செய்யக்கூடாத ஒன்றை செய்துவிட்டு ஒருவர் தப்பிக்கிறார் என்பதாக காட்டி இருக்கும் இந்த படம் நிச்சயமாக வன்மையாக கண்டிக்கத்தக்கது.
RATING : 3.5 / 5









