தான் நடிப்பதாகச் சொல்லி இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கும் ஒரு படத்தின் போஸ்டரை பார்த்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அதிர்ச்சியாகி “இந்தப் படத்தில் நான் நடிக்கவே இல்லையே…?” என்று குரல் எழுப்பியிருக்கிறார்.
இன்றைக்குக் காலையில் ‘அன்புச்செல்வன்’ என்ற படத்தின் போஸ்டர் வெளியானது. அந்தப் போஸ்டரில் இயக்குநரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் கையில் துப்பாக்கியுடன் நிற்பதுபோல பலவித போஸ்கள் இருந்தன.
இந்தப் படத்தை Seventy MM Studio, Seven Star Images ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பதாகவும், ஏ.வினோத்குமார் என்பவர் இயக்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் போஸ்டரை பிரபல இயக்குநரான பா.ரஞ்சித் இன்று காலையில் தனது டிவீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதைப் பார்த்து கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்கப் போகும் புதிய படம் போலிருக்கிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்க.. திடீர் திருப்பமாக கவுதம் மேனனே இதை மறுத்திருக்கிறார்.
இது குறித்து பா.ரஞ்சித்தின் டிவீட்டை ரீவீட் செய்து அதில் தனது மறுப்பைப் பதிவு செய்திருக்கிறார் கவுதம் மேனன்.
அந்த மறுப்புச் செய்தியில், “இது எனக்குப் பெரும் அதிர்ச்சியான செய்தியாகும். இந்தப் படத்தில் நான் நடிப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்தப் போஸ்டரில் உள்ள பெயர் கொண்ட இயக்குநரை நான் இதுவரையிலும் சந்தித்ததே இல்லை. தயாரிப்பாளரும் அவருடைய பெயரைப் போட்டிருக்கிறார். இது போன்று எளிதாக போஸ்டர்களை தயாரித்து வெளியிடுவதை நினைத்தால் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருக்கிறது..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.. ஒருவேளை கவுதம் மேனன் கதை கேட்டு நடிக்க மறுத்ததால் பிரச்சினையா.. அல்லது கவுதம் மேனனிடம் கேட்காமலேயே புகைப்படத்தை போஸ்டரில் போட்டுவிட்டார்களா.. எதுவும் தெரியவில்லை.
இன்று மாலைக்குள் தெரிய வரும்..!










