full screen background image

கருடன் – சினிமா விமர்சனம்

கருடன் – சினிமா விமர்சனம்

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தக் ‘கருடன்’ திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, ரோஷிணி, பிரிகடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் .வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பிரதீப் . ராகவ் படத் தொகுப்பு பணிகளை கையாள, ஜி.துரைராஜ் கலை இயக்க பொறுப்பை ஏற்றிருக்கிறார்.‌

எதிர்நீச்சல்’, ‘கொடி’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் R.S.துரை செந்தில்குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

தேனி மாவட்டம் கோம்பையில் உள்ள புகழ் பெற்ற புராதனக் கோவிலின் தர்மகர்த்தா வடிவுக்கரசி. பரம்பரை பரம்பரையாக அவரது குடும்பம்தான் கோவிலை நிர்வகித்து வருகிறது. இவருடைய பேரன் ‘கருணா’ என்ற உன்னி முகுந்தன்.

உன்னி முகுந்தனுடன் சிறு வயதிலிருந்தே நட்பாகி அதே வீட்டில் வளர்ந்து வந்திருக்கிறார் ‘சொக்கன்’ என்ற சூரி. இதனாலேயே உன்னி முகுந்தன் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கிறார் சூரி.

அதே ஊரில் வசிக்கும் வேறொரு ஜாதியைச் சேர்ந்த ‘ஆதி’ என்ற சசிகுமாரும், உன்னி முகுந்தனும், ‘மச்சான்’, ‘மாப்ளை’ என்று அழைக்கும் அளவுக்கு மிக நெருங்கிய நண்பர்கள். இவருடைய மனைவி ஷிவதா நாயர்.

அந்தக் கோவிலுக்குச் சொந்தமான 300 கோடி  மதிப்புள்ள ஏக்கர் கணக்கிலான நிலம் சென்னைக்கு அருகேயுள்ளது. அந்த நிலத்தை கைப்பற்ற நினைக்கும் பொதுப்பணித் துறை அமைச்சரான ஆர்.வி.உதயகுமார், கோம்பையில் இருக்கும் சினிமா தியேட்டர் உரிமையாளரான மைம் கோபியைத் தூண்டிவிட்டு வங்கியில் இருக்கும் கோவில் லாக்கரில் பத்திரமாக இருக்கும் அந்த நிலத்தின் பட்டயத்தைக் கைப்பற்றிக் கொண்டு வரச் சொல்கிறார்.

அதே நேரம் இதுவெல்லாம் பிரச்சினையில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காக அந்த ஊரின் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் சமுத்திரக்கனிக்குப் பணம் கொடுத்து அவரையும் தனக்காக வேலை செய்யச் சொல்கிறார் அமைச்சர்.

திடீரென்று வடிவுக்கரசி இறந்துபோக, கோவில் கமிட்டித் தலைவர் பதவிக்குப் போட்டி ஏற்படுகிறது. இதை மையமாக வைத்து மைம் கோபி உன்னி முகுந்தன், சசிகுமார் இடையே பகையை மூட்டுகிறார். இந்தப் பகை சூரியையும் தாக்குகிறது.

இரு தரப்பிலும் மோதல்கள் வெடிக்கின்றன. வெட்டுக் குத்துக்கள் நடக்கின்றன. படுகொலைகள் ஏற்பட்டு ஊரே இரண்டாகிப் போகிறது. சூரி யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார். கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்தக் ‘கருடன்’ படத்தின் கதை.

காக்கும் கடவுளான பெருமாளின் வாகனமான ‘கருடன்’ எப்போதும் பெருமாளை அண்டிய பக்தர்களின் பின் தொடர்ந்து வந்து அவர்களுக்கு நல்லது செய்வார் என்பது ஐதீகம். அதனாலேயே  சூரியின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்றபடி இந்தக் ‘கருடன்’ என்ற பெயரை படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறாராம் இயக்குநர். பொருத்தமான பெயர்தான்..!

‘பரோட்டா’ சூரியாக பெயரெடுத்திருந்த சூரி கதையின் நாயகனாக ‘விடுதலை’யில் முகம் காட்டி நடித்திருந்தாலும், இதுதான் அவரது முதல் நாயகப் படம் என்று உறுதியாகச் சொல்ல்லாம். அந்த அளவுக்கு மொத்தப் படமும் அவரைச் சுற்றியே சுழல்கிறது.

‘சொக்கன்’ என்ற அடிமைத்தனம் வாய்ந்த, பாசமிக்க, பண்புமிக்க ஒரு அப்பாவியின் வாழ்க்கையில் அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கு அவனே எப்படி ஒரு சாட்சியாகிறான்..? குற்றங்களுக்குத் துணை போகிறான்..? உண்மை அறிந்து.. நல்லது எது.. கெட்டது எது.. என்பது தெரிந்த பின்பு, தான் செய்த தவறுக்கான தண்டனையாக அதன் பிராயச்சித்தத்தை எப்படி செய்து  முடிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தில் சூரியின் கதாப்பாத்திரமான ‘சொக்கன்’ செய்யும் செயல்கள்..!

சூரி தனக்குக் கிடைத்திருக்கும் இந்த அழுத்தமான கதாப்பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். பாசத்தையும், விசுவாசத்தையும் உன்னி முகுந்தன் மீது காட்டும் அதே நேரத்தில் தன் மீது பாசம் காட்டும் சசிகுமார் குடும்பத்தின் மீது அவர் காட்டும் அன்பும், நேசமும் நெகிழ்வானது. இதனை சூரி காட்டுமிடத்தில் எல்லாம் அவருடைய கேரக்டர் மீது நமக்கு மிகவும் மரியாதை கூடுகிறது.

உன்னியை கண்டிக்கும் சசிகுமாரையே அடிக்கப் பாய்கிறார் சூரி. இன்னொரு பக்கம் உன்னி மீது கோபப்படும் அவரது மாமனாரை கை நீட்டி அடித்தே விடுகிறார் சூரி. இந்த அளவுக்கு அவருக்குள் உன்னி மீதிருக்கும் பாசமும், மரியாதையும் கொஞ்சம், கொஞ்சமாக குறைவதைத் திரைக்கதையில் மிக இயல்பான காட்சிகளால் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

சாமி வந்து ஆடும் இடத்தில் அவருடைய நடிப்பு வெறித்தனம். அதேபோல் சசிகுமாரின் வீட்டுக்கு சாப்பாடு வாங்குவதற்காக தோட்டத்தில் இருந்து டூவீலரில் வரும்போது ஒருவித பயத்துடனும், குழப்பத்துடனும் அவர் வருகின்ற காட்சி அசத்தல்.

நடிப்பு மட்டுமில்லாமல் ஆக்சன் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார் சூரி. மிகுந்தப் பிரயத்தனப்பட்டுதான் ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறார் சூரி. பாராட்டுக்கள்.

மலையாள நடிகர் உன்னி மிகுந்தன் இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த தேர்வு. தொழிலில் தோல்வி. பணக் கஷ்டம். போதைக்கு அடிமையாகுதல். தலைமுறை இடைவெளியால் பாட்டியுடன் ஒத்துப் போக முடியாமல் தவிப்பது.. பணத்துக்காக அணி மாறுவது.. நண்பனையை கொலை செய்யத் துணிவது என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நல்லவன் எப்படி கெட்டவனாகிறான் என்பதை தனது நடிப்பின் மூலமாய் காட்டியிருக்கிறார் உன்னி முகுந்தன்.

சசிகுமார் வ்ழக்கம்போல நண்பனுக்காக பேசி, நண்பனுக்காக வாழ்ந்து, நட்புக்காகவே உயிரைவிடும் வழக்கமான உன்னதமான நண்பனாக நடித்திருக்கிறார். இவரது மனைவியாக நடித்திருக்கும் ஷிவதாதான் படத்தின் பிற்பாதியில் திரைக்கதைக்கு தனது நடிப்பால் வலு சேர்த்திருக்கிறார்.

சசிகுமாரின் உடலைப் பார்த்துக் கதறியழும் காட்சியிலும், தொடர்ந்து தனது கணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அவர் செய்யும் நெடும் பயணமும் படத்துக்கு ஒரு அனுதாப அலையை உருவாக்கியுள்ளது.

அமைதியான, அடக்கமான போலீஸ் இன்ஸ்பெக்டராக சமுத்திரக்கனி எந்தக் கஷ்டமும் படாமல் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரேவதி ஷர்மாவின் வட்டமான முகம் இப்போதும் ஞாபகத்துக்கு வருகிறது. மிக அழகான முக பாவனைகளால் சூரியை மட்டுமில்லாமல் தியேட்டருக்கு வந்திருக்கும் இளைஞர்களைக்கூட பெரிதும் கவர்ந்திருக்கிறார்.

உன்னியின் மனைவியாக நடித்திருக்கும் ரோஷிணி, உன்னியின் மைத்துனன் மனைவியாக நடித்திருக்கும் பிரிகடா, பொதுப்பணித் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், வில்லத்தனத்தில் கஞ்சத்தனம் செய்யாமல் நடித்திருக்கும் மைம் கோபி, கள்ளு குடிக்கும் பாட்டியான வடிவுக்கரசி என்று பலரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

ஆர்தர்.ஏ.வில்சனின் ஒளிப்பதிவில் செங்கல் சூளை, கோவிலின் பிரம்மாண்டம், கோம்பை, தேனி மாவட்டங்களின் அழகு, கொடைக்கானலின் ஏரியல் வியூ, சண்டை காட்சிகளின் பிரம்மாண்டம் என்று அத்தனையும் மிக அழகாகப் பதிவாகியுள்ளது.

இடைவேளை பிளாக்கில் ஒலிக்கும் பின்னணி இசை யுவனின் இசை ராஜாங்கத்தில் இன்னொரு கிரீடம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்குப் பின்னணி இசையில் அதகளம் செய்திருக்கிறார் யுவன். பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்தான்.

சண்டை காட்சிகள் அனைத்தையுமே மிரட்டலாகத்தான் பதிவாக்கியுள்ளனர். சூரிக்கு ஒரு மாதிரி, உன்னிக்கு ஒரு மாதிரி, சசிகுமாருக்கு ஒரு மாதிரி என்று மூன்றுவிதமாக சண்டை காட்சிகளை வடிவமைத்து அதையும் கச்சிதமாக வெளியில் தெரியாததுபோல படமாக்கியிருப்பது சிறப்புதான்.

சாதாரணமான, நமக்கு நன்குப் பழக்கமான பழி வாங்கல் கதைதான் என்றாலும் பரப்பரப்பும், விறுவிறுப்பும் கலந்த திரைக்கதையில், மண் சார்ந்த கதையில், நடக்கும் அரசியல் நிகழ்வுகளை அம்பலப்படுத்தும்வகையில் காட்சிகளை அமைத்து, வசனத்தின் மூலமாக படத்தையே நகர்த்தும் அளவுக்கு மிகத் திறமையாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

இருந்தாலும் அதிகப்படியான சண்டை காட்சிகளும், சூரிக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சில் அளவுக்கதிகமான அப்பாவித்தனத்தைக் கொடுத்திருப்பதும், சசிகுமார் கொலை நடந்த பின்பும் உன்னியைக் காப்பாற்றும் சூரி, வடிவுக்கரசியின் சாவுக்கு யார் காரணம் என்று தெரிந்த பின்பு மனம் மாறுகிறார் என்று திரைக்கதையை வடிவமைத்திருப்பதும் படம் பற்றிய தேய்பிறை பேச்சாக இருக்கிறது.

இந்தப் படம் யாருக்கு வெற்றியோ, தோல்வியோ தெரியாது.. ஆனால் சூரிக்கு நிச்சயமாக வெற்றிப் படம்தான். இனி அவர் தைரியமாக கதையின் நாயகனாக நடிக்கத் துவங்கலாம்..!

RATING : 3.5 / 5

Our Score