full screen background image

கேங்கர்ஸ் – சினிமா விமர்சனம்

கேங்கர்ஸ் – சினிமா விமர்சனம்

Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர்.சி மற்றும் வைகைப் புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”.

இப்படத்தில் சுந்தர் சி, வடிவேலு ஆகியோருடன் கேத்தரின் தெரேசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரீஷ் பேரடி, அருள் தாஸ், கருப்புசாமி, சந்தான பாரதி, S. மதுசூதன ராவ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘வைகைப் புயல்’ வடிவேலு நடிப்பில் புகழ் பெற்ற, ‘கைப்புள்ள’, ‘வீரபாகு’ கதாபாத்திரங்களைப் போலத் தனித்தன்மையுடன் கூடிய “சிங்காரம்” எனும் அசத்தலான கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ள இப்படத்திற்கு, வசனங்களை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் C.சத்யா இசையமைத்துள்ளார். எசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை பிரவீன் ஆண்டனி செய்துள்ளார், கலை இயக்கத்தினை பொன்ராஜ் கவனிக்க, சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் கே.ராஜசேகர் அமைத்துள்ளார்.

மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குர் சுந்தர்.சி-யும், வடிவேலுவும் இணைந்து நடித்திருக்கும் படம் இது.

அரசன்கோட்டை என்னும் ஊரில் இருக்கும் ஒரு தனியார் பள்ளிதான் இந்தப் படத்தின் கதைக் களம்.

அந்தப் பள்ளியின் தாளாளர் மலையரசன். அவருடைய தம்பி கோட்டையரசன். இவர்கள் இருவரும் அந்த ஊரின் மிக முக்கிய புள்ளிகள். ஊரில் நிறைய தொழில் செய்து வருகிறார்கள். கூடவே சட்ட விரோத செயல்களையும் செய்து வருகிறார்கள்.

ஊர் முழுவதும் மினரல் வாட்டர் போடுகிறேன் என்ற பெயரில் கள்ளச் சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அந்தப் பள்ளியின் மாணவி ஒருவர் காணாமல் போகிறார்.

அந்த மாணவி காணாமல் போனது குறித்து லோக்கல் போலீஸ் எதுவும் விசாரிக்காமல் இருப்பதை கண்டு அதிருப்தி அடையும் அந்தப் பள்ளியின் கணினி அறிவியல் ஆசிரியர் கத்ரின் தெரசா, இது குறித்து தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்புகிறார்.

இந்தப் புகாரின் பெயரில் அந்த மாணவி காணாமல் போனதை கண்டறிய ஒரு தனி அதிகாரியை பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து தெரசாவுக்குத் தகவல் வருகிறது.

இந்த நேரத்தில் அந்தப் பள்ளியில் புதிதாக பி.டி. ஆசிரியராக வேலைக்கு வந்து சேர்கிறார் சரவணன் என்ற சுந்தர்.சி. அதே பள்ளியில் துணைப் பி.டி. வாத்தியாராக ‘ஏகாம்பரம்’ என்னும் வடிவேலுவும் வேலை செய்து வருகிறார்.

சுந்தர்.சி.யின் சில நடவடிக்கைகள் மர்மமாக இருக்க அவர்தான் அரசு அனுப்பி வைத்திருக்கும் ரகசிய போலீஸ் அதிகாரியோ என்று கேத்தரின் தெரசா நினைக்கிறார். ஆனால் உண்மைக் கதையோ வேறாக இருக்கிறது.

அந்த கதை என்ன..? அவர் உண்மையில் போலீஸ் அதிகாரிதானா…? அவர் எதற்கு இந்தப் பள்ளிக்கு வந்தார்…? அந்த கடத்தப்பட்ட மாணவியின் நிலை என்ன ஆனது? என்பதுதான் இந்தப் படத்தின் சுருக்கமான கதை சுருக்கம்.

இயக்குநர் சுந்தர்.சி கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல், கொஞ்சமும் கஷ்டப்படாமல், கொஞ்சமும் நடக்காமல், ஓடாமல், அலுங்காமல், குலுங்காமல் தனக்கு எது வருகிறதோ அதுதான் நடிப்பு என்று பல வருடங்களாக சொல்லி வருகிறார்.. செய்து வருகிறார்.. அதேபோலத்தான் இந்த படத்திலும் அவர் செய்திருக்கிறார். காட்டியிருக்கிறார்.. நடித்திருக்கிறார். அவ்வளவுதான்..!

கூடுதலாக சிறந்த தொழில் நுட்ப உதவியோடு இந்தப் படத்தில் சண்டை காட்சிகளையும் பரபரப்பாக படமாக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ஒரு அதிரடி ஆக்சன் கதாநாயகனாக சுந்தர்.சி இந்தப் படத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை இந்தப் படத்திலிருந்து துவக்குகிறார் வடிவேலு என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பினை முழுமையாக பூர்த்தி செய்யாமல் விட்டுவிட்டார் வடிவேலு.

இதற்கு அவரை மட்டும் குற்றம் சொல்லி புண்ணியம் இல்லை. படத்தின் கதை, திரைக்கதை வசனத்தில் காமெடிக்கென்று தனிப் பகுதி ஒதுக்கப்பட்டு அது பிரதானம் செய்யப்பட்டிருந்தால் நிச்சயம் வடிவேலு தானாகவே அடக்கி வைக்கப்பட்டிருந்த சீசாவில் இருந்து கிளம்பும் ஜீபூம்பா பூதமாக வெளிவந்திருப்பார்.

ஆனால் தனியான ட்ராக் இல்லாமல் கதையுடனேயே பயணிக்கும் வகையில் படம் முழுவதும் வலம் வரும் இரண்டாம் நிலை கதாநாயகனாகவே வடிவேலு வந்திருப்பதால் காமெடிக்கான முக்கியத்துவம் குறைந்ததுபோல் தெரிகிறது.

நல்லதொரு திரைக்கதையாக இருந்தாலும் அந்த திரைக்கதையில் சிச்சுவேஷன் காமெடியை கொண்டு வராமலும் பல வசனங்கள் நகைச்சுவையை எழுப்பாமல் போய்விட்டது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.

ஆனாலும் படத்தில் இடைவெளிக்கு பின்பான காட்சிகளில் கொஞ்சம், கொஞ்சம் வடிவேலு சிரிக்க வைத்திருக்கிறார்.

அவரும் பக்ஸூம் பேசுகின்ற, சந்திக்கின்ற காட்சிகள் நிச்சயம் நம்மை சிரிக்க வைக்கும். ஆனால் இவை போதாமையாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

கேத்தரின் தெரசா ஒரு சீரியஸான ஆசிரியையாக நடித்திருக்கிறார். வழமையான காதல் எப்படி வருமோ… எவர் மீது வருமோ…அதையெல்லாம் கச்சிதமாக இந்தப் படத்தில் செய்திருக்கிறார்.

இடைவெளிக்கு பின்பு வரும் கிளப் டான்ஸ் கட்சியில் மட்டும் கொஞ்சம் கவர்ச்சியை அதிகமாக காட்டி தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் கேத்தரின்.

இவருக்கு அப்படியே நேர் எதிராக தன்னுடைய முகபாவனைகளிலும் தன்னுடைய பாடி ஸ்ட்ரக்சரினாலும் நம்மை பெரிதும் கவர்ந்திழுக்கிறார் வாணி போஜன்.

அவருடைய கதை மிகவும் சோகமானது என்றாலும் நம் மனதை தொடுகின்ற வகையில் தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார் வாணி போஜன்.

ஆசிரியராக நடித்திருக்கும் பக்ஸ், வடிவேலுவை விரட்டிக் கொண்டே கொண்டேயிருக்கும் முனீஸ்காந்த், அப்பாவாக நடித்த சந்தானபாரதி மற்றும் வில்லன்களாக நடித்திருக்கும் ஹரிஷ் பெரடி, மைம் கோபி, அருள்தாஸ், தன் மகளை காணாமல் தவிக்கும் ஒரு ஏழை தாயாக தீபா…. என்று படத்தில் இடம் பெறும் அனைத்து கேரக்டர்களுமே தங்களுடைய கதாப்பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

முதல் காட்சியிலிருந்து கடைசி வரையில் ஒளிப்பதிவு சிறப்புதான். ஓஹோ என்றும் சொல்ல முடியவில்லை. அதே சமயம் ரொம்பவும் கீழே என்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் பள்ளிக்கூட காட்சிகளை இன்னும் கொஞ்சம் கலர்ஃபுல்லாக படமாக்கிருக்கலாம்.

நடன காட்சிகளில் ஏன் இத்தனை லைட்டுகளை போட்டு வைத்து கேத்தரினை இருட்டாகக் காண்பித்தார்கள் என்று தெரியவில்லை. அந்தப் பாடல் கட்சியை வேறுவிதமாக படமாக்கி இருக்கலாம் என்பது
கேத்தரின் தெரசாவின் ரசிகர்களின் கருத்து.

பாடல் இசையும் பின்னணி இசையும் ஒன்று போலவே இருப்பது இந்தப் படத்தில் ஆச்சரியமாக இருக்கிறது

கமர்சியல் படங்களுக்கேற்ற இசையை பின்னணி இசையோடு வேகவேகமான திரைக்கதைக்கு பொருத்தமாக  அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.

கமர்சியல் திரைப்படங்களில் முக்கியமானது படத்தின் எடிட்டிங். அந்த எடிட்டிங்கில் கொஞ்சம் வித்தை காட்டினால் போதும், படம் போர் அடிக்காமல் போகும் என்பார்கள். அந்த உணர்வினை இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பின்பான பல காட்சிகளில் நம்மால் உணர முடிகிறது.

படத்தில் சிரிக்க வைக்கிறார்களோ இல்லையோ… ஆனால் படம் படு ஸ்பீடாக ஓடி முடிந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. இதற்கு அந்தப் படத்தின் படத் தொகுப்பாளர் நிச்சயம் பெரும் உதவி செய்திருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

முழுக்க, முழுக்க காமெடி படம் என்று சொல்லி காமெடிக்கேற்ற திரைக் கதையை வடிவமைத்து வைத்திருந்தாலும் இன்னும் அதிகமாக காமெடியை உருவாக்கியிருக்கலாம் என்பது நமது கருத்து.

ஆனாலும் வடிவேலு அவ்வப்போது ஆள் மாறாட்டம் செய்வதுபோல பலவித வேடங்களில் வந்து செல்லும் அந்தக் காட்சிகள் எல்லாம் நிச்சயமாக  நகைப்புக்குரியதுதான். பார்த்தவுடனே சிரிப்பை தந்திருக்கிறது

அதுவும் சினிமா தியேட்டரில் வடிவேலு செய்யும் அலப்பறையான காட்சிகள் சிரிப்புதான்.

தியேட்டருக்கு ஓடி வாங்க… சந்தோஷமா சிரிங்க.. போங்க.. என்று சுந்தர்.சியின் அதே பார்முலாதான் இந்தப் படத்திலும் அப்படியே இருக்கிறது.

ஆனால் அந்த ஃபார்முலாவுக்குள் இருப்பது பழைய சரக்கு என்பதுதான் கொஞ்சம் வருத்தமான விஷயம். இன்னும் கொஞ்சம் புதுமை சேர்த்து கூடுதலான சிரிப்பலையை தந்திருக்கலாம்.

அடுத்தப் படத்தில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.

RATING : 3.5 / 5

Our Score