பாவலர் சகோதரர்களில் ஒருவரான கங்கை அமரனுக்கும், இசைஞானிக்கும் இடையில் இப்போது பேச்சுவார்த்தை இல்லை என்பது ஊருக்கே தெரிந்த விஷயம்.. ஆனாலும் இரண்டாண்டுகளுக்கும் முன்பாக அவர் பாரதிராஜாவுடன் மிக நெருக்கமாகத்தான் இருந்தார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ‘அன்னக்கொடி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாரதிராஜா, “நான் நீ, வைரமுத்து மூவரும் மீண்டும் இணைய வேண்டும்..” என்று கோரிக்கை வைத்துப் பேசியதிலிருந்து இளையராஜா பாரதிராஜா மீது அளவு கடந்த கோபத்தில் இருக்கிறார். அதற்குப் பின் அவர்கள் இருவரும் சந்திக்கவேயில்லை என்கிறது சினிமா வட்டாரம்..
அதே நாளில் இதே பேச்சுக்காக இன்னொருவரும் பாரதிராஜாவின் மீது வெறுப்பு கண்டு அவரைப் புறக்கணிப்பதாக கூறினார். அது இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இளையராஜாவைவிடவும் வைரமுத்து மீது அதீத வெறுப்புணர்வுடன் இருப்பவர் கங்கை அமரன்தான்.. “எ்ன்னை மேடையில் வைத்துக் கொண்டு நான், நீ, வைரமுத்து என்று பேசினால் எப்படி..? அப்போ எ்ன்னை அவருக்கு ஞாபகம் இல்லையா.? நான் வேண்டாம் என்று நினைக்கிறாரா..? பாரதிராஜாவுக்கு பணம்தான் பிரதானமாகப் போய்விட்டது. இனிமேல் பாரதிராஜாவின் படங்களுக்கு பாட்டெழுத மாட்டேன்…” என்று சாணக்கிய சபதம் செய்திருக்கிறார் கங்கை அமரன்.
இதைக் கேட்டு பாரதிராஜா, “ஆமா.. அவன் பாட்டு எழுதலைன்னா என் படம் ஓடாது பாருங்க..” என்று சொல்லிவிட மேலும் பிரிவுகள் நீண்டுவி்டடன.
இப்போது முகநூலில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார் கங்கை அமரன்..
நேற்று காலை திடீரென்று இப்படி எழுதினார் கங்கை அமரன் –
“எனக்குத் தெரிந்த உண்மைகள்…
எங்கள் கிராமமான பண்ணைப்புரத்தில் அல்லிநகரத்தை சேர்ந்த சின்னச்சாமி என்கிற பால் பாண்டியன் என்ற பாரதிராஜா மலேரியா இன்ஸ்பெக்டராக வந்து சேர்ந்தார்.
நாடகக் கலையில் ஆர்வமுள்ள அவரை, அவருக்கு உதவியாளராக இருந்த மதலைக்கனி என்ற நண்பரால் அறிமுகம் கிடைத்தது. மதலைக்கனி மேண்டலின் வாசிப்பார்.
மலேரியா இன்ஸ்பெக்டர் என்றால், அந்தப் பகுதியில் யாருக்காவது காய்ச்சல் வந்தால், அது சாதாரணமான ஜுரம் அல்லது மலேரியாவா என்று கண்டு பிடிக்க அந்த ஜுரம் வந்தவருடைய விரலில் ஒரு ஊசியை குத்தி ரத்தத்தை எடுத்து மேலிடத்துக்கு அனுப்பி கண்டுபிடித்து மாத்திரை மருந்து தருவது!
கொஞ்சம் இருங்க வரேன்!”
– மேற்படி பதிவினைத் தொடர்ந்து அடுத்ததாக, ”என் வாய் சும்மா இருக்காது. நான் சொல்ல ஆரம்பிச்சா பல பேர் என்னத்த சொல்லப் போறேனோன்னு பயப்படப் போறாங்க! நான் சொல்றதா வேணாமான்னு யோசிக்க டைம் குடுங்க…!” என்றும் பதிந்தார் கங்கை அமரன்.
அந்தப் பதிவில் நடிகரும், இயக்குனருமான மனோ பாலா, “நான் பேசட்டுமா?” என்று பதில் கேள்வி எழுப்பினார்.
இடையில் வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சுபஸ்ரீ தணிகாசலம், “ரெண்டு பேரும் பேசுங்க. பல பேருக்கு தெளிவு பிறக்கும். பல பொய்கள் வெளிவரும்” என்று கமெண்ட் போட்டார்.
பதிலுக்கு கங்கை அமரனோ, “மனோ.. நீ சொல்றது உன் பார்வையில், உன் அனுபவங்கள். நான் சொன்னால் அது, என் பார்வை, என் வாழ்வின் அனுபவங்கள். நான் என் கண்ணால் பார்த்தது. என் மனத்தால் உணர்ந்தது….” என்று எழுதினார். இதற்கு “ஏன் பொங்குறே…?” என்று பதில் கேள்வி மனோபாலாவிடமிருந்து வந்தது.
”நான் ஹரித்துவாரிலே இருக்கேன். பொங்கல் நல்லதுதானே! நாம அடுத்தவங்களை தப்பா சொல்றதுக்கில்லை.. நல்லதை சொல்றதுக்குத்தானே இருக்கோம்…” என்றும் பதில் தந்திருக்கும் கங்கை அமரன் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை..!
பண்ணைப்புரத்து பாண்டவர்கள் கதையோடு அவர்களோடு வந்து ஒட்டிய அந்த அல்லிநகரத்து ராஜா கதையையும் வெளியில் சொன்னால் கேட்கச் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்..! ஆனால் ஆரம்பமே இப்படி பிரச்சினையா இருக்கே..?