full screen background image

‘காந்தி டாக்ஸ்’ – சினிமா விமர்சனம்

‘காந்தி டாக்ஸ்’ – சினிமா விமர்சனம்

கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகியிருக்கும் மவுனத் திரைப்படம்தான் இந்த ‘காந்தி டாக்ஸ்’.

இந்த ‘காந்தி டாக்ஸ் திரைப்படத்தை மூவி மில் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. திவய் தமிஜா க்ரியேட்டிவ் ப்ரொடியூஸராக பணியாற்றியுள்ளார்.

1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘புஷ்பக விமானா’ என்கிற திரைப்படமே பாலிவுட்டில் கடைசியாக உருவான மவுனப் படம். இதற்கடுத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்த ‘காந்தி டாக்ஸ்’ என்கிற மவுனப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த்சாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

புரொடக்ஷன் ஹவுஸ்: ஜீ ஸ்டுடியோஸ், கியூரியஸ் & மூவிமில், எழுத்து  மற்றும் இயக்கம்: கிஷோர் பி பெலேகர், ஒளிப்பதிவு: கரண் பி. ராவத், இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பு வடிவமைப்பாளர்: துர்காபிரசாத் மஹாபத்ரா, ஆடை வடிவமைப்பாளர்கள்: கவிதா பிரியங்கா துபே நீது பரத்வாஜ், ஒலி வடிவமைப்பாளர்: ஜஸ்டின் ஜோஸ், இசை மேற்பார்வையாளர்: ஹிரால் விராடியா, மேக் அப் டிசைனர்: ரோஹித் மகாதிக், எடிட்டர்: ஆஷிஷ் மத்ரே, பத்திரிக்கை தொடர்பு – டீம் எய்ம்.

தமிழ் திரையுலகத்தில் புதிய முயற்சிகள் நிறையவே நடந்து கொண்டிருக்கின்றன அந்த வழியில் இந்த வாரம் இன்றைக்கு வெளி வந்திருக்கும் காந்தி டாக்ஸ் திரைப்படம் ஒரு மவுன திரைப்படம்.

இதற்கு முன்பு 1987-ம் ஆண்டு கமலஹாசன், அமலா நடிப்பில் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய பேசும் படம் என்ற திரைப்படம் ஒரு மௌன படமாக வந்தாலும், தமிழ் சினிமா ரசிகர்களை மிகுந்த கொண்டாட்டத்தில் வைத்து அத்திரைப்படம், சாதாரணமான ஒரு தமிழ் படம் போலவே பெரும் வெற்றியையும் பெற்றது.

அப்படி ஒரு சாதனையை செய்ய வேண்டும் என்று நினைத்து இயக்குநர் கிஷோர் பாண்டுரங்கா கலைஞர் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த தைரியமான, வித்தியாசமான முயற்சிக்கு  முதலில் நமது பாராட்டுக்கள்.

உலகம் முழுவதுமே மக்கள் அனைவருமே ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். எதற்காக? பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக!! பணம் இல்லையேல் இவ்வுலகத்தில் யாருக்கும் இடமில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பணத்தைத் தேடி அலைபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதே அளவுக்கு பணம் வைத்திருப்பவர்களும் அந்தப் பணத்தைக் கட்டிக் காப்பாற்றுவதற்காகவும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். பணம் இல்லாதவர்களின் ஓட்டமும் பணம் இருப்பவர்களின் ஓட்டமும் சரிக்கு சரி சமமாகத்தான் இருக்கிறது. இந்தப் படத்தில் அப்படி ஒரு சிச்சுவேஷனைத்தான் இயக்குநர் கதை, திரைக்கதையாக நமக்கு கொடுத்திருக்கிறார்.

எளிய மனிதர்கள் வாழவே தகுதி இல்லாத மும்பையில் வாழ்வின் ஓரத்தில் வசிக்கும் மக்கள் குடியிருப்பில் தன்னுடைய உடல் நலம் சரியில்லாத, நடக்க இயலாத அம்மாவுடன் வாழ்கிறார் விஜய் சேதுபதி.

இவருடைய அப்பா மும்பை கார்ப்பரேஷனில் வேலை பார்த்து பணியில் இருக்கும்போது இறந்து விட்டதால் அந்த கருணை வேலையை தனக்கு தரும்படி கேட்டு அலைந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. அதற்கு 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார் அந்த அதிகாரி.

வீட்டில் சாப்பிடுவதற்கே பணம் இல்லாமல் மாதந்தோறும் சாப்பாடு கொடுத்து விடுபவருக்கு பணத்தையும் கட்ட முடியாமல் பக்கத்து வீட்டு தட்டில் இருந்து சாப்பாட்டை திருடிக் கொண்டு வந்து அம்மாவுக்கு ஊட்டிவிடும் அளவுக்கு வறுமையின் பிடியிள் சிக்கியிருக்கும் விஜய் சேதுபதியால் அந்த ஐம்பதாயிரம் ரூபாயை புரட்ட முடியவில்லை.

அதே நேரம் அவர் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் அதிதி ராவையும் அவர் காதலித்துக் கொண்டிருக்கிறார். இவரைவிடவும் அதிதி காதிலல் தீவிரமாக இருக்கிறார். அவரைப் பெண் பார்க்கும் படலம் எல்லாம் நடந்த பின்பும் விஜய் மீது அதிதி காதல் வெறியில் இருக்க.. விஜய்க்கோ என்ன சொல்வது என்றே தெரியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

இந்த நேரத்தில் மும்பையிலும் மிகப் பெரிய கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியை வைத்திருக்கும் போஸ்மேன் என்ற அரவிந்த்சாமி தன்னுடைய போட்டியாளர்களின் சதி வலையில் வீழ்ந்து மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறார். அவருடைய மனைவியும் மகளும் ஒரு கார் விபத்தில் இறந்துவிட.. அவருக்கு துணையாய் இருந்த அவருடைய அம்மாவும் ஒரு நாள் திடீரென்று இறந்து போகிறார்.

நீதிமன்றத்தில் இவருடைய நிறுவனத்தின் மீது இருந்த வழக்கும் இவருக்கு எதிராகவே முடிந்து விடுகிறது. இவர் ஆசை ஆசையாக கட்டிய ஒரு பில்டிங் கடைசியாக தீயில் கரியாகிறது. அவருடைய சொத்துக்களை எல்லாம் ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிடுகிறது.

இப்படி ஒரு சூழலில் தன்னுடைய கையில் தான் பதுக்கி வைத்திருந்த பணத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய தந்தை பயன்படுத்திய பழைய அம்பாசிடர் காரில் தனக்கு ஏதேனும் ஒரு துடுப்பு கிடைக்குமா என்று எண்ணி தேடிக்கொண்டிருக்கிறார் அரவிந்த்சாமி.

இந்த நேரத்தில் அரவிந்த்சாமி யார் என்பதைத் தெரிந்து கொண்ட விஜய் அவரிடத்தில் நட்பு பிடித்து எப்படியாவது தன்னுடைய வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அது முடியாமல் போக அரவிந்த்சாமி வீட்டில் கொள்ளை அடிக்கலாமே என்றுகூட விஜய் முயல்கிறார்.

அதேசமயம் 24 மணி நேரத்தில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற கோர்ட்டு உத்தரவு அரவிந்த்சாமியை வெறியாக்குகிறது. தான் இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் கட்டிய வீட்டை சும்மா விட்டுவிட்டு போக அவருக்கு மனமில்லை. ஏதாவது செய்ய வேண்டுமே என்ற துடிப்புடன் இருக்கிறார்.

இதே சமயம் சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்தாலும் சில அரசியல்வாதிகளுக்கு சொன்ன வேலையை செய்து கொடுக்கும் திருட்டு வேலையை செய்து வரும் திருடன் சித்தார்த் ஜாதவ், அரவிந்த்சாமியிடம் பணம் பறிக்க நினைத்து, அந்த இரவில் வீட்டுக்குள் வருகிறான்.

இந்த மூன்று பேரும் அந்த நள்ளிரவில் வீட்டுக்குள் என்னவாகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படத்தில் வசனங்களே இல்லை என்பதால் அனைத்து நடிகர்களின் முகபாவனைகளும் உடல் மொழியுமே இந்தப் படத்தில் நமக்கு நடிப்பாக தெரிகிறது என்பதால் அவ்வளவு அழகாக அனைவரையும் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

பணத்தை நேர்மையாக சம்பாதித்தால் ஒரு கட்டத்தில் அதுவும் நிலையாக இருக்காது. பணத்தை கொள்ளையடித்து சேர்த்தாலும் அந்தப் பணத்தால் நமக்கு ஒரு கட்டத்தில் எந்த பயனும் இல்லை என்கின்ற நிலைமை ஏற்படும். இது உலகளாவிய விஷயம். பணம் பணம் என்று பணத்தை சம்பாதிக்க பல்வேறு வழிகளில் அலையும் விஜய் சேதுபதியும்.. இருக்கின்ற பணத்தை வைத்து அதை தக்க வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் அரவிந்த்சாமியும்தான் இந்தப் படத்தின் தூண்கள்.

விஜய் சேதுபதி மிகவும் எளிமையாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அதுவே அவருக்கு அழகாகவும் அமைந்துள்ளது. அம்மாவை தூக்கிக் கொண்டு டாய்லெட் போவதற்காக வரிசைகள் நின்றபடி சூப்பர்வைசர் இடம் கண்களால் கெஞ்சுகின்ற அந்த முதல் காட்சியிலேயே நம்மை வெகுவாக கவர்ந்து விட்டார் விஜய்.

அதிதியுடன் காதலில் சிக்கித் தவித்து நமக்குள் காதல் வேண்டாம்.. உன் வழியை பார்த்து நீ போ என்று சொன்னாலும் அதிதி கேட்காமல் இவரை அழைக்கின்ற காட்சியில் அதிதி, விஜய் இருவருமே நடிப்பில் பின்னிவிட்டார்கள்.

பேருந்தில் பர்ஸை திருடுபவனிடம் எச்சரிக்கை என்பதுபோல கையை உயர்த்தி காண்பிப்பதில் துவங்கி இறுதியில் நேர்மையான வழியில் சம்பாதித்ததால்தான் நீ நல்லவன்.. இல்லை கெட்டவன்தான் என்று அதிதியின் கோப்ப்படும்போது தவறை உணர்வதும்.. குற்றவுணர்ச்சிக்குள்ளாகி பணத்தை திருப்ப வைப்பதற்காக வந்து அரவிந்த்சாமியிடம் நிற்கின்ற அந்தக் காட்சியில் உண்மையாகவே கை தட்ட வைத்துவிட்டார் இயக்குநர். அரவிந்த்சாமியிடம் தந்திரமாக அவரது காரில் பயணித்து சீட்டாட்ட கிளப்பில் அவர் ஆடுகின்ற அந்த நடனமும்கூட அழகு.

வாழ்ந்து கெட்டவர் என்கின்ற பெயரை எடுப்பது போல வாழ்ந்திருக்கும் அரவிந்த்சாமி, கோர்ட்டில் தனக்கு எதிராக வந்த தீர்ப்பை கேட்டு அதிர்ச்சியில் ஆடிப் போய் அமர்ந்திருக்கின்ற அந்த காட்சியிலேயே “பாவம்யா இவர்” என்று சொல்ல வைத்திருக்கிறார்.

அரவிந்த்சாமி வீட்டில் வேலை செய்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்து வெளியே அனுப்பும் காட்சியில் சோகத்தை நமக்கு கடத்தியிருக்கிறார். கடைசியில் அந்த வீட்டை ஏதோ செய்யப் போகிறார் என்பதை நமக்கு உணர்த்தும்விதமாக அவருடைய நடவடிக்கைகளால் நடிப்பாக காண்பித்திருப்பதால்… அவருடைய நடிப்பையும்விட அந்த திரைக்கதையால் மிக வேகமாக ரன் வேகத்தில் காட்சிகள் நடப்பதினால் முதல் பாகத்தைவிடவும் இரண்டாம் பாகத்தில் நாம் படத்தை ரசித்துப் பார்க்க முடிந்திருக்கிறது.

அதிதி ராவ் மிக அழகாக நடித்திருக்கிறார். மௌனமாகவே தன்னுடைய காதல் மொழியை விஜய் சேதுபதியிடம் வெளிப்படுத்திக் கொள்ளும் காட்சியிலும், பாடல் காட்சிகளின் மாண்டேஜ் ஷாட்களில் அதிதியும், விஜய் சேதுபதியும் அவ்வளவு அழகாக தெரிகிறார்கள். 4 வருடங்களுக்கு முன்பு எடுத்த படம் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இவர்களின் காதலும் டீசன்ட்டான காதலாக இருப்பதால் நமக்கும் ரொம்பவே பிடித்து போகிறது.

பெண் பார்க்கும் படலத்தின் இடையில் விஜய் உள்ளே நுழைந்து அதிதியின் கையை பிடித்து வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு போகின்ற அந்தக் காட்சியில் அப்படி ஒரு நகைச்சுவை தெரிகிறது. ஆனாலும், தன்னுடைய காதலை மறக்க முடியாமல் விஜயை மீண்டும் மீண்டும் கட்டி அணைத்துக் கொண்டு காதலை சொல்கின்ற இடத்திலும், இறுதியாக தன்னுடைய அம்மா தன்னை அனைத்து கொண்ட பொழுது அவர் காட்டுகின்ற நடிப்பும் அட்டகாசம்… உண்மையில் இந்தக் காதல் ஜெயிக்க வேண்டும் என்று நம்மையும் சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர்.

இவர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த மற்றைய கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை கொடுத்து அழகாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

திருடனாக நடித்த சித்தார்த் ஜாதவ், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக விஜய் சேதுபதி முன்பு தோன்றி அலட்டல் செய்யவதெல்லாம் அட்டகாசம். கடைசியில் அரவிந்த்சாமியின் வீட்டுக்குள் நுழைந்து திருட போய் திரைக்கதையை நகர்த்தி கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார். இறுதியில் முதுகில் தீக்காயத்துடன் விஜய் அவர் சந்திக்கின்ற இடத்தில் கை தட்ட வைத்திருக்கிறார் சித்தார்த் ஜாதவ்.

கார்ப்பரேஷன் அதிகாரி வேலை கேட்டு வருபவரிடம் காப்பி கொடுத்து அதை அவர்கள் என்ன செய்கிறார்கள்… அவர்களே முழுவதையும் குடிக்கிறார்களா? நம்மிடம் பாதியை கொடுத்து குடிக்கச் சொல்கிறார்களா என்பதை வைத்து அவர்களிடம் லஞ்சத்தை வெளிப்படையாக கேட்டு வாங்குகின்ற அந்தக் காட்சியில் அவரும், அவருடைய பியூனும் மிக அழகாக நடித்த சிரிப்பலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

விஜய்யின் அம்மாவாக நடித்தவரும் தன்னுடைய மகனை கஷ்டப்படுத்துகிறோம் என்ற அந்த வேதனையை முகத்தில் காட்டும் பொழுது பரிதாபமாகத்தான் இருந்தது. அதேபோல் அரவிந்த்சாமியின் வீட்டில் ஃப்ரிட்ஜில் இருந்து உணவை எடுத்து சாப்பிடும் பொழுது அவருக்கு எதிரில் அவருடைய அம்மாவை அமர்ந்து “நல்லா சாப்பிடு… மெதுவா சாப்பிடு” என்று சொல்வதுபோல அவர் தன்னுடைய நடிப்பால் மகனின் மீது பாசத்தை காட்டுகின்ற அந்தக் காட்சியில் நமக்கே கண் கலங்கிவிட்டது.

இதேபோல் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியவர் எப்போதும் வராந்தாவில் படுத்திருப்பவர். அவருக்கே கிடைத்த உணவில் பாதியை விஜய் எடுத்துச் சென்றுவிட்டதால் பின்னாடியே சந்தேகப்பட்டு வந்து பார்த்துவிட்டு விஜய் அம்மாவுக்கு உணவு ஊட்டுவதை பார்த்துவிட்டு “சாப்பிடுங்க சாப்பிடுங்க” என்று பாசத்தோடு சொல்கின்ற காட்சியில் மனிதம் இப்போதும்கூட சில மனிதர்கள் இடத்தில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

கரண்ராவத்தின் ஒளிப்பதிவு மிக மிக இயல்பான பதிவையே காட்டுகிறது. அதிலும் விஜய் சேதுபதியின் வீட்டில் நடக்கின்ற காட்சிகளையும், அந்த காம்பவுண்டில் நடக்கும் காட்சிகளை பதிவு செய்யும்பொழுது ஸ்கிரீன் முழுவதும் மிக அழகாக தென்படுகிறது.

அந்த காம்பவுண்ட்டை வடிவமைத்துக் வைத்திருக்கும் கலை இயக்குநரையும் நிச்சயமாக நாம் பாராட்ட வேண்டும். இதற்கு நேர் எதிராக அரவிந்த்சாமியின் வீட்டையும் வடிவமைத்திருக்கிறார்கள். அவ்வளவு அழகு. பாராட்டுக்கள்.

வசனங்களே இல்லை என்ற நிலையில் நடிப்போடு சேர்ந்து பின்னணி இசைதான் இந்தப் படத்தை காப்பாற்ற வேண்டும். அதேபோல் காப்பாற்றியிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். பாடல் காட்சிகளைவிடவும் பாடலுக்கான இசையைவிடவும்.. பின்னணி இசை அழகு. அபாரம்.

விஜய் சேதுபதியின் வீட்டுக்குள் நடக்கின்ற காட்சிகளுக்கெல்லாம் சாதாரணமான ஒரு டிராமா மியூசிக்கை அமைத்தவர் அரவிந்த்சாமி வரும் காட்சிகளில் எல்லாம் இன்றைய இசையை அடித்து ஆடி இருக்கிறார்.

படத்தை இயக்கி இருக்கும் கிஷோர் பாண்டுரெங் கலெகர் தான் சொல்ல வந்த கருத்தை மிக அழுத்தமாகவும், ஆழமாகவும் சொல்லி இருக்கிறார். பணம் தேவைதான் என்றாலும் அதையும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்கின்ற ஒரு மிகப் பெரிய கருத்தை இந்த படத்தின் மூலமாக பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் இந்த இயக்குநரின் கதையாடல் நமக்கு முழு திருப்தியைத் தருகிறது.

கோர்ட் காட்சியில் நீதிபதியே செல்போனில் ஐ லவ் காந்தி என்று டைப் செய்தபோது தியேட்டரில் கை தட்டல் தூள் கிளப்பியது. எதிர்த் தரப்பு வக்கீல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு தரப்பு பண பேரம் பேசுவதும், நீதிபதி அதை ஏற்பதும்… இன்றைய நீதித்துறை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையும் காட்டி இருக்கிறார் இயக்குநர்.

அதேபோல் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் ஒரு கட்சி பரமுகர் கையில் மணி அடித்தபடியே வீடு வீடாக வந்து நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்பதும், வாக்கு கேட்கின்ற இடங்களில் எல்லாம் நடக்கும் சிற்சில சம்பாசனைகள் மௌனத்திலேயே கடக்கும்போது நமக்கு சிரிப்பையும் தந்தது.

பணம் சம்பாதிப்பது முக்கியமல்ல. ஆனால், அது நல்லவிதமாக வந்தால், நல்லவிதமாக அதை பராமரித்தால் அந்தப் பணம் நம் கையை விட்டு போகாது என்ற உண்மையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இன்னொரு பக்கம் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய ஏழையாக இருந்தாலும் சரி… “அரசு அதிகாரம்” என்பது பணத்தையும் தாண்டியது என்பதை அரவிந்த்சாமியின் கதையின் மூலமாகவும், இந்தியாவில் இது இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர்.

இறுதியில் விஜய் சேதுபதியின் தற்போதைய நிலையை காட்டி அவருடைய அழகான வாழ்க்கையை காட்டும்பொழுது கை தட்டாமல் இருக்க முடியவில்லை. மற்றவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் முதலில் தன்னிடத்தில் இருந்துதான் அந்த நேர்மையை துவக்க வேண்டும். இந்தக் கருத்தை இந்தப் படம் மிக சரியாக சொல்லி இருக்கிறது.

படத்தில் நடித்தவர்களுக்கும், பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், இயக்குநருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

RATING : 4.5 / 5

Our Score