இந்தப் படத்தில் பாலா, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, மதன், அமுதவாணன், நிகிலா, அபிலாஷ், ஜீவா, ரியா, மகாநதி சங்கர், முருகானந்தம், டி எஸ் ஆர், ஆகாஷ், மார்ஷல், மனோஜ், ஆராத்யா, கேம் சூரி, வசுந்தரா, ரமேஷ் கண்ணா, டாக்டர் வைத்யா, அட்மன், எட்வின், அபிஷேக், நேமின், புதுப்பேட்டை சுரேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பாலாஜி கே.ராஜா, படத் தொகுப்பு – டி.சிவா நந்தீஸ்வரன் இசை, விவேக் அண்ட் மெர்வின், கலை இயக்கம் – மணிமொழியன் ராமதுரை, நிர்வாக தயாரிப்பாளர் – உதயகுமார் பாலாஜி, சண்டை இயக்கம் – தினேஷ் சுப்பராயன், பாடல்கள் – உமாதேவி, கு.கார்த்திக், நடன அமைப்பு – அபூ சால்ஸ், உடை வடிவமைப்பு – பிரியா ஹரி, பிரியா கரன், புகைப்படங்கள் – சாய் பிரசாத், பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக், பத்திரிக்கை தொடர்பு – ரேகா, தயாரிப்பு – ஜெய்கிரண், எழுத்து இயக்கம் – ஷெரீப்.
ஹீரோ பாலா ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலமாக சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தரும் வேலையில் ஈடுபட்டுள்ளார், பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இந்த தொழிலை நடத்தி வருகிறார். பணத்திற்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம்… எதையும் செய்யலாம் என்பது இந்த பாலாவின் கேரக்டர்ஸ் ஸ்கெட்ச்.
அதே நேரம் செக்யூரிட்டியாக வேலை செய்து வரும் பாலாஜி சக்திவேல் தன்னுடைய காதல் மனைவியான அர்ச்சனாவின் 60-வது பிறந்த நாளை பெரு விமர்சையாக கொண்டாட நினைக்கிறார். பாலாஜி சக்திவேல் ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய காதலியை திருமணம் செய்வதற்காக சொந்த ஊரில் இருந்த அத்தனை சொத்துக்களையும் விட்டுவிட்டு அர்ச்சனாவுடன் சென்னைக்கு வந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
தமது மனைவி மீது அபரிமிதமான பாசம் வைத்துள்ளார் பாலாஜி. அதேபோல் அர்ச்சனாவும் கணவர் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார்.
தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அர்ச்சனாவின் 60 வயது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று பாலாஜி நினைத்து பாலாவிடம் வருகிறார். அதற்கு பாலா லட்சக்கணக்கில் கொட்டேஷன் சொல்கிறார். ஆனால், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்கிறார் பாலாஜி. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை குறைத்துக் கொண்டே வந்து கடைசியாக “மூன்று லட்ச ரூபாய் இருந்தால் போதும் நிகழ்ச்சியை நடத்தி தருகிறோம்..” என்கிறார் பாலா.
தன்னுடைய பெயரில் இருக்கும் ஒரு நிலத்தின் பத்திரத்தை தேடி எடுக்கும் பாலாஜி அந்த இடத்தை விற்றுவிட்டு பணம் வாங்கலாம் என்று நினைக்கிறார். ஆனால் அந்த நிலத்தில் தற்போது புதிய கட்டுமானம் கட்டிக் கொண்டிருப்பதால் அதன் உரிமையாளர் நஷ்ட ஈடாக 50 லட்ச ரூபாயை பாலாஜியிடம் கொடுக்கிறார்.
இந்தப் பணம் வந்த சந்தோஷத்தில் எப்படியும் தன்னுடைய மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்துவிடலாம் என்று சந்தோசத்தில் பாலாஜி இருக்க….. அதே நேரம் இந்தியா முழுவதும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பும் வெளியாகிறது. பாலாஜிக்கும் பாலாவுக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது.
இதன் பின்பு என்ன நடக்கிறது?.. அந்த 60-வது ஆண்டு விழா சிறப்பாக நடந்ததா?… பாலா நடத்திக் கொடுத்தாரா?.. தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்தார்களா?.. என்பதுதான் இந்த வித்தியாசமான குடும்பக் கதையின் திரைக்கதை.
அதிகாரப்பூர்வ நாயகனாக நடித்திருக்கும் பாலாவுக்கு இதுதான் முதல் படம். சின்னத் திரையில் பல நிகழ்ச்சிகளில் டைமிங் சென்ஸ் காமெடியோடு தன்னுடைய முகத்தை தமிழக ரசிகர்கள் மனதில் பதித்திருக்கும் பாலாவுக்கு படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த கதாபாத்திரத்தை ஏற்ற நடித்ததில் மிகப் பெரிய பின்னடைவு என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என்று பல காட்சிகளில் நமக்கே தோன்றுகிறது சிற் சில இடங்களில் தன்னுடைய பேச்சினால் லேசாக புன்னகைக்க வைத்தாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளிவந்த அளவுக்கான நகைச்சுவை இந்தப் படத்தில் வரவே இல்லை என்பது சோகமான விஷயம்.
நன்கு நடனம் ஆடுகிறார். வசனங்களை உச்சரிக்கிறார். ஆனால் பாவத்தோடு கூடிய அந்த நடிப்புதான் வரவில்லை. இதுதான் பாலாவுக்கு முதல் படம் என்பதால் நாம் அதிகமாக விமர்சிக்க வேண்டாம். அடுத்தடுத்த படங்களில் வேறு, வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் பாலா சிறப்பாக நடிப்பார் என்று நாம் நம்புவோம்.
படத்தின் உண்மையான கதாநாயகன் பாலாஜி சக்திவேல்தான். அவருடைய தோற்றத்திற்கும், வயதிற்கும் மிக மிக பொருத்தமான காந்தி என்கின்ற கதாப்பாத்திரத்தை காப்பாற்றி இருக்கிறார் பாலாஜி சக்திவேல்.
தன் மனைவி மீது அவர் வைத்திருக்கும் பாசமும், பரிவும், அன்பும் ரசிக்க வைக்கிறது. எதற்கெடுத்தாலும் அதான் நீ இருக்கியே… அதான் நீ இருக்கியே… என்று மனைவியை சார்ந்து இப்போதுவரையில் வாழ்ந்து வரும் அந்த வெள்ளந்தியான மனிதரை திரையில் பார்க்கும் பொழுது நமக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது.
நம் பக்கத்து வீடு, எதிர் வீடு, மேல் வீடு, கீழ் வீடு என்று ஒரு வீட்டில்கூட இப்படி ஒரு அன்பான, பாசமான, கணவனை நம்மால் பார்க்கவே முடியாது. அதனால்தான் இப்படத்தில் பாலாஜியின் கதாபாத்திரம் படம் பார்க்கும் ரசிகர்கள் அத்தனை பேருக்குமே பிடித்து போய்விட்டது.
இவருக்கு கொஞ்சமும் சலிக்காமல் தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார் அர்ச்சனா. தேசிய விருது பெற்ற நாயகியான அர்ச்சனா அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை மிக அழகாக செய்து இருக்கிறார்.
கணவருக்கு தினமும் திருஷ்டி சுத்தி போடுவதிலிருந்து அவரை அடிக்கடி “ஜமீன்”, “ஜமீன்” என்று குறிப்பிட்டு பாசத்தோடு பேசுகின்றவிதம் உண்மையில் படம் பார்க்கும் கணவன்மார்களுக்கும் மனைவிமார்களுக்கும் நிச்சயமாக ஒரு வழியை காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.
பாலாவின் காதலியாக நடித்திருக்கும் நமீதா கிருஷ்ணமூர்த்தி கேமராவுக்கு ஏற்ற அழகான முகமாக இருக்கிறார். படம் முழுவதும் அவரும் வருவதால் நடிப்பில் குறை ஏதும் வைக்கவில்லை.
பாலாவின் நண்பர்களாக நடித்திருக்கும் நிகிலா, ஷங்கர், ஜீவா சுப்பிரமணியம், அமுதவாணன், மனோஜ் பிரபு என்று பலருமே சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் வந்திருக்கிறார்கள். திரைக்கதையை நகர்த்துவதற்கும் மற்றைய கதாபாத்திரங்களின் மீது பார்வையாளர்களுக்கு ஒரு பாசம் ஏற்படுவதற்கும் பெரும் உதவி செய்து நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா இரவு நேர காட்சிகளையும், கோவில் திருவிழா காட்சிகளையும் நாம் வியந்து பார்க்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
கேமராவின் கோணங்கள் பலவற்றிலும் திரை முழுவதையும் நம்மை கவனிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதிலும் பாலாஜி சக்திவேல் உதட்டை துரத்திக்கொண்டு நடனமாடும் காட்சிகளில் மிகுந்த சிரத்தை எடுத்து பதிவாக்கி இருக்கிறார்.
விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம். பின்னணி இசை கொஞ்சம் அந்தந்த காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுத்து திரையைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்பு வரும் பல காட்சிகளை கிராபிக்ஸ் மூலமாக காண்பித்து ஒரு பதட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
படத் தொகுப்பாளரின் கச்சிதமான நறுக்குதலில் படம் எந்த இடத்திலும் மையக் கதையை விட்டு வெளியில் செல்லவில்லை. இயக்குநர் எடுத்துக் கொடுத்ததை அவ்வளவு அழகாக நமக்கு தொகுத்து அளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர் சிவ நந்தீஸ்வரன். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஷெரீப், ஒரு உணர்வுபூர்வமான கதையை பார்வையாளர்களிடத்தில் புகுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார். திரைக்கதை கொஞ்சம் போர் அடிப்பது போல இருந்தாலும் காட்சிகளும், நடிப்பும், உணர்வுபூர்வமாக இருப்பதால் நம்மால் அதனுடன் ஒன்றிப் போக முடிகிறது.
திருமணமான மூன்று மாதத்திலேயே டைவர்ஸ் என்று சொல்லும் இப்போதைய இளைய சமூகத்தினர், இந்த திரைப்படத்தை பார்த்தால் வாழ்க்கை என்பது என்ன? காதல் என்றால் என்ன..? கல்யாணம் என்பது எதற்காக?.. போன்ற சில பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பையும், பரிவையும், பாசத்தையும் காட்டுவது தான் உண்மையான காதல் என்கின்ற ஒரு உண்மையை இயக்குநர் ஷெரிப் அழுத்தமாக இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அந்த வகையில் இந்த திரைப்படம் அத்தனை வயதினரும் சேர்ந்து பார்க்க வேண்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.
அவசியம் பாருங்கள்.
RATING : 3.5 / 5









