full screen background image

காடன் – சினிமா விமர்சனம்

காடன் – சினிமா விமர்சனம்

இயக்குநர் பிரபு சாலமன் ‘கும்கி’ திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாக்கியுள்ள படம் இது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

 ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராணா இந்தப் படத்திற்காக மட்டும் 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக தன் உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்துள்ளார் ராணா.

விஷ்ணு விஷால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். நாயகிகளாக ஜோயா ஹூசைன் மற்றும் ஷிரியா பில்கவுன்கர் இருவரும் நடித்துள்ளனர், மத்திய மந்திரியாக ஆனந்த் மகாதேவன், ரகு பாபு, ரவி காலே, ஸ்ரீநாத், ஆகாஷ், சம்பத் ராம்,போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – ஈராஸ் நிறுவனம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபு சாலமன், ஒளிப்பதிவு – அசோக் குமார், படத் தொகுப்பு – புவன், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சிவா, கலை இயக்கம் – மயூர், இசை – சாந்தனு மொய்த்ரா, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இந்தப் படத்தில் காடுகளின் இயற்கை ஒலி படத்துக்கு முதுகெலும்பாக இருப்பதால் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இந்தக் ‘காடன்’ படத்துக்கு ஒலியை வடிவமைத்துள்ளார்.

மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய தாத்தா ஒருவர் கோவை அருகேயிருக்கும் வனப் பகுதியில் பெரும்பாலானவற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் எழுதி வைத்தாலும், இன்னும் சில பகுதிகளை விலங்குகளின் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

அவருடைய பேரன்களில் ஒருவரான ராணா அந்தக் காட்டுப் பகுதியிலேயே இப்போதும் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் பலரும் வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாகிவிட்டார்கள்.

அந்தக் காட்டுப் பகுதியில் ஒரு ரிசார்ட்டை அமைப்பதற்காக இந்தியாவின் நிதியமைச்சர் திட்டமிடுகிறார். இதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஆக்கிரமிக்கிறார் அமைச்சர். இதை எதிர்த்துப் போராடுகிறார் ராணா. அவரைப் பொய் வழக்கில் கைது செய்து அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று முத்திரை குத்துகிறார்கள்.

இந்த நேரத்தில் ஆக்கிரமிப்பு பகுதியைச் சுற்றி கோட்டைச் சுவர் கட்ட எத்தனிக்கும் அமைச்சரின் ஆட்கள், மற்ற காட்டு யானைகளிடமிருந்து தப்பிப்பதற்காக ‘கும்கி’ யானையை வரவழைக்கிறார்கள்.

கும்கி யானப் பாகனான விஷ்ணு விஷாலும், அவரது மாமாவும் அமைச்சரின் ஆட்கள் செய்யும் அடாவடியை உணராமலேயே அவர்களுக்கு உதவுவதற்காக முன் வருகிறார்கள்.

அதே காட்டுக்குள் நக்ஸலைட்டாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஜோயா மீது விஷ்ணு விஷால் மையல் கொள்கிறார். இதனால், அங்கேயிருந்து வெளியேறும் சூழல் வரும்போதெல்லாம் அதைத் தடுத்து அங்கேயே தான் இருப்பதற்கு வழி வகை செய்து கொள்கிறார் விஷ்ணு விஷால்.

ராணா சிறையில் இருக்கும் நேரத்தில் அந்த வனப்பகுதியை ஆக்கிரமிக்கும் அமைச்சர் தரப்பு, அதைச் சுற்றிலும் மிகப் பெரிய கோட்டைச் சுவரை எழுப்பி பாதையை மறைக்கிறார்கள். அது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக பல்லாண்டுகளாக சென்று வந்த பாதை என்பதால் யானைகள் தண்ணீர் தேடு மலைவாழ் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன.

சிறையில் இருந்து வெளியில் வரும் ராணா தண்ணீர் இல்லாமல் தவிக்கும் யானைகளுக்காக அமைச்சர் தரப்பினருடன் கடுமையாக மோதுகிறார். இறுதியில் என்னாகிறது..? யானைகளுக்கு அந்தப் பாதை கிடைத்ததா..? விஷ்ணு விஷாலின் காதல் என்னாகிறது..? ராணா தனது போராட்டத்தில் ஜெயித்தாரா இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்திலேயே சிறப்பாக இருந்தது ராணாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான். ஆனால், அதைக் கொஞ்சம் குழப்பமாக அமைத்திருப்பதுதான் ஏற்க முடியவில்லை. அவர் எப்போதிருந்து காட்டுக்குள்ளேயே குடியிருந்து வருகிறார். அவருடைய மேனரிசம் ஏன் ஒரு மனப் பிறழ்வு கொண்டவரைப் போல இருக்கிறது என்பதற்கு இயக்குநர் தரப்பில் இருந்து பதில் இல்லை. ஆனால், அதுதான் வித்தியாசமானதாகவும், ராணாவின் நடிப்புத் திறமையை வெளிக்காட்டும்விதமாகவும் அமைந்திருக்கிறது.

தலையைச் சொடக்கு போடுவதுபோல் திருப்புவதும், பறவைகளின் கீச்சுக் குரலை அப்படியே திருப்பிச் செய்வதும்.. விலங்குகளின் பாஷையிலேயே பதில் சொல்வதுமாக அவரது பல மேனரிசங்கள் கவர்ந்திழுக்கிறது.

அவருடைய முரட்டுத்தனமான சுபாவத்துடன் அனாயசமாக சண்டை காட்சிகள் அவர் காட்டியிருக்கும் ஆக்ஷன்கள் அனைத்தும் ஆக்சன் பிரியர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும். அதிலும் டெல்லியில் அவருடைய பையை பிடுங்கிக் கொண்டு ஓடுபவர்களிடமிருந்து அவர் அதைக் கைப்பற்றும் சண்டை காட்சி அபாரம். எப்படித்தான் படமாக்கினார்களோ தெரியவில்லை. சூப்பர்ப்.. படக் குழுவினருக்கு ஒரு ஹாட்ஸ் அப்.

தன்னுடைய பிள்ளைகள் போன்ற அன்பான யானைகளுக்காக அவர் பதறுவதும்.. மக்களிடம் அவர்களுக்காகப் பேசுவதும், அதே யானைகள் அவரைத் தவறாக நினைப்பதை எண்ணி மருகுவதுாய்.. ஒரு தூய அன்பின் வெளிப்பாடான பரிசுத்தமான மனிதராகக் காட்சியளிக்கிறார் ராணா. சண்டைக் காட்சிகளில் மிகுந்த பிரயத்தனப்பட்டு நடித்திருக்கிறார். கடின உழைப்பைக் கொட்டியிருக்கிறார். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

இவருக்கு நேரெதிராக கொஞ்சமும் கஷ்டப்படாமல், அலட்டிக் கொள்ளாமல் தனது கேரக்டரை அசால்ட்டாக செய்திருக்கிறார் விஷ்ணு விஷால். பார்த்தவுடன் காதல் என்பதாக நக்ஸலைட் தீவிரவாதியைப் பார்த்து உருகுவது ஒன்றுதான் ஏற்க முடியாததாக இருக்கிறது.

இதனாலேயே இவருடைய கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு ஒரு நம்பகத் தன்மை கிடைக்கவில்லை. ஈர்ப்பும் இல்லை. அங்கே என்ன நடக்கிறது என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர் காதலித்தால் என்ன.. காதலிக்காமல் போனால்தான் என்ன என்னும் அளவுக்கு ரசிகர்கள் போய்விட்டார்கள்.

அதிலும் விஷ்ணு விஷாலுக்கு நேரும் அந்தச் சோகத்திற்குப் பின்னால் இருந்த திரைக்கதையின் பல காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதால் அவருடைய போர்ஷன் அம்போ என்று பாதியிலேயே முடிக்கப்பட்டுவிட்டதைப் போல காட்சியளிக்கிறது.

உண்மையில் விஷ்ணு விஷால் தனது கும்கி யானை இறந்தவுடன் அதுவரையிலும் துணை நின்ற அமைச்சர் தரப்பினரை எதிர்த்து ராணாவுடன் சேர்ந்து போராட்டத்தில் குதிக்கிறார். இதுதான் திரைக்கதையாம். ஆனால் இதனை படமாக்கி வைத்தும், படத்தின் நீளம் கருதி குறைத்துவிட்டார்களாம். இதனால் விஷ்ணு விஷாலின் பங்களிப்பு இந்தப் படத்திற்கு எந்தப் பலனையும் கொடுக்கவில்லை.

அவருடைய காதலியாக தீவிரவாதப் பெண்ணாக நடித்திருக்கும் ஜோயாவுக்கும், இன்னொரு நாயகியான ஷிரியாவுக்கும் நடிப்பிற்கான பெரிய வாய்ப்புகள் இல்லை. ஆனால், திரைக்கதையை நகர்த்துவதற்காக இருவரும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சரான ஆனந்த் மகாதேவனின் திமிர்த்தனமான அமைச்சருக்கான நடிப்பும், ரவி காலேயின் எதார்த்த மனிதரின் நடிப்பும் பாராட்டத்தக்கது.

மேலும் உடன் நடித்திருக்கும் ஆகாஷ், போஸ் வெங்கட், சம்பத் இன்னும் பலரும் சொல்லிக் கொடுத்ததுபோல சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

அசோக் குமாரின் ஒளிப்பதிவுதான் படத்தின் மிகப் பெரிய பலம். அந்த அடர்ந்த காட்டின் தன்மையையும், மரங்களின் அடர்த்தியையும், காடுகளின் வனப்பையும், செழிப்பையும், விலங்குகளின் நடமாட்டத்தையும், மழைவாழ் மக்களின் வாழ்வியலையும் படமாக்கியிருப்பதில் நமக்கு ஒரு மயக்கமே வருகிறது.

சண்டை காட்சிகளை படமாக்கித் தந்திருக்கும் இரண்டு சண்டை இயக்குநர்களும் பாராட்டுக்குரியவர்கள். இரண்டு கதைகளை ஒன்றாக இணைக்க முடியாமல் படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்ட 45 நிமிட காட்சிகளால் படம் என்ன சொல்ல வந்தார்கள்.. எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்கிற சர்ச்சைக்குள் நம்மைத்  தள்ளிவிட்டார் படத் தொகுப்பாளர் புவன்.

ஒரு மத்திய அமைச்சர் இப்படியொரு ரிசார்ட் கட்டுவது பிரதம மந்திரிக்கு அதுவரையிலும் தெரியாதா..? அதான் எல்லா மீடியாக்களிலும் வந்துவிட்டதே. பிரதமரிடம் யாரும் சொல்லியிருக்க மாட்டார்களா என்ன..?

அதோடு கடைசி நேரத்தில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்த பின்பு தன் வருகையை ரத்து செய்வதோடு ரிசார்ட்டையும் இடித்துத் தள்ள உத்தரவிடும் அளவுக்கான ‘நல்ல’ பிரதமர் நம் நாட்டில் எங்கே இருந்தார்கள் என்பதும் கேள்விக்குரிய விஷயம்தான். இதனாலேயே படத்தின் முடிவில் நம்மால் ஒன்ற முடியவில்லை.

படத்திற்காக நாம் அதிகம் வெளியில் பேச வேண்டியது இயக்குநர் பிரபு சாலமனின் கடும் உழைப்பு. அப்படியொரு உழைப்பைக் கொட்டியிருந்தும் படத்தின் கதை, திரைக்கதையில் இருக்கும் ஆயிரம் லாஜிக் ஓட்டைகளால் அவைகளை பாராட்ட முடியவில்லையே என்கிற வருத்தம்தான் நமக்கு மிஞ்சுகிறது.

காடுகள், வனங்கள், யானைகள்.. இவைகளையெல்லாம் விட்டுவிட்டு அடுத்தப் படத்தை பிரபு சாலமன் கொடுக்கட்டும். காத்திருப்போம்..!

Our Score