நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘சக்ரா’.
இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கேஸண்ட்ரே நடிக்கிறார்.
இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு – சமீர் முகமது, கலை இயக்கம் -எஸ்.கண்ணன், சண்டை காட்சி – அனல் அரசு, மக்கள் தொடர்பு – ஜான்சன்.
இந்தப் படத்தை இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணியாற்றிய இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார்.
ஆன்லைன் வர்த்தக மோசடிகளை பின்னணியாக கொண்ட கதையாக இந்த ‘சக்ரா’ திரைப்படம் உருவாகி வருகிறது. வங்கிக் கொள்ளையர்களைவிட சைபர் ஹேக்கர்ஸ் என்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை விளங்க வைக்கும் படம் இது.
இந்த ‘சக்ரா’ படத்தின் டிரெய்லர் வரும் சனிக்கிழமை வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரெய்லரை தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் நான்கு பிரபல நடிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.
தமிழில் கார்த்தி, ஆர்யா, தெலுங்கில் ராணா, மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் யஷ் ஆகியோர் டிரெயிலரை வெளியிடுகிறார்கள்.
இதற்கு முன் வெளியான ‘சக்ரா’வின் க்ளிம்ப்ஸ் என்கிற குறு முன்னோட்டம் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த குறு முன்னோட்டத்தை பார்த்தவர்கள் “இது ‘இரும்புத்திரை’ படம் போல் இருக்குமா..? இது ‘இரும்புத்திரை-2’ம் பாகமா…?” என்று இயக்குநரிடம் கேட்டிருக்கிறார்கள்.
இது பற்றி இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறும்போது “சைபர் க்ரைம் பற்றிய படம்தான் ‘சக்ரா’ என்றாலும் ‘இரும்புத்திரை’க்கும் இதற்கும் எந்தச் சம்பந்தம் இருக்காது. அது மட்டுமல்ல இந்த படத்தின் ஒரு காட்சிகூட வேறெந்த படத்திலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. அப்படிப் புதிய தளத்தில் காட்சிகள் இருக்கும்.
இதில் கதாநாயகன் விஷால்தான் என்றாலும் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் உங்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கும்படி கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கும். ஆனால் அவை வழக்கம் போல் இருக்காது.
ஒரு வினாடிகூட பார்வையாளர்கள் கவனம் தவற விட முடியாத அளவுக்கு அவர்களை இருக்கையின் நுனியில் கட்டிப் போடும் படமாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர்.